தனுஷின் அசுரன் படத்திற்கு தேசிய விருது.. ஒத்த செருப்பு படத்திற்கு 2 விருதுகள் அறிவிப்பு!
சென்னை: சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. 67வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் உள்ள தேசிய பத்திரிகையாளர் மையத்தில் அறிவிக்கப்பட்டன.
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட வேண்டிய இந்த விருதுகள் கொரோனா பெருந்தொற்று, லாக்டவுன் ஆகிய காரணங்களால் தள்ளிப்போனது.

சிக்கிம் மாநிலத்துக்கு விருது
இந்நிலையில் இன்று இயக்குநர் ஷாஷி என். கருன் தேசிய விருதுகளை அறிவித்தார். அதன்படி திரைத்துறைக்கான சிறந்த மாநில விருது சிக்கிம் மாநிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த சினிமா விமர்சகருக்கான தேசிய விருது கொல்கத்தாவை சேர்ந்த சோஹினி சட்டோபத்யாயாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள படம்
சிறந்த குடும்ப படமாக ஒரு பாதிர ஸ்வப்னம் போலே என்ற மலையாள படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த புலனாய்வு படமாக மராத்தி படமான ஜக்கல் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த கல்வி படமாக ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அசுரன் படம் தேர்வு
இந்நிலையில் சிறந்த தமிழ் படமாக தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பூமணியின் வெக்கை நாவலை கொண்டு அசுரன் படத்தை இயக்கியிருந்தார் வெற்றி மாறன்.

நல்ல வரவேற்பு
சாதிய ஒடுக்குமுறைகளை பேசும் படமான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இப்படம் வசூலையும் குவித்தது. அப்போதே இந்த படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என்ற பேச்சு எழுந்தது.

இரண்டாவது முறையாக
ஏற்கனவே வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் ஆடுகளம் படம் தேசிய விருது பெற்ற நிலையில், தற்போது இந்த கூட்டணி மீண்டும் ஒரு விருதை தேசிய விருதை தட்டி தமிழ் சினிமாவை பெருமை கொள்ளச் செய்துள்ளது.

ஒத்த செருப்புக்கு 2 விருது
மேலும் அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதையும் தட்டிச்சென்றுள்ளார் தனுஷ். இதேபோல் பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படம் 2 தேசிய விருதுகளை குவித்துள்ளது. சிறந்த ஒலிகலவை மற்றும் சிறந்த ஜூரிக்கான விருதுகளை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











