National Awards: சந்திரயான் எஃபெக்ட்டா?.. மாதவனின் ராக்கெட்ரி தேசிய விருது வெல்ல 4C காரணமா?
சென்னை: 69வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தியாவிலேயே சிறந்த படமாக மாதவனின் ராக்கெட்ரி: நம்பி விளைவு (இந்தி) படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த விருது விழா முடிந்தவுடனே பத்திரிகையாளர் கேள்வி கேட்க நேரம் ஒதுக்கிய நிலையில், ராக்கெட்ரி படத்துக்கு என்ன காரணத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது என்கிற கேள்வி எழுப்பப்பட்டது.

பொதுவாகவே இதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டோம். ஆனால், நீங்கள் கேட்டதற்காக பதில் அளிக்கிறேன் எனக்கூறிய கேத்தன் மேத்தா 4 - C தான் காரணம் என விளக்கி உள்ளார்.
நம்பி நாராயணன் பயோபிக்: இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணன் ராக்கெட்டுக்கான இன்ஜினை கண்டுபிடித்த நிலையில், அவருக்கு பாராட்டுக்கள் கிடைப்பதற்கு பதிலாக தேசதுரோகி என்கிற பட்டம் கிடைத்து பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார். மேலும், தன்னை நிரபராதி என நிரூபிக்க நீதி போராட்டத்தையும் நடத்தி வென்றார்.
அவரது வாழ்க்கை வரலாற்று கதையை படமாக இயக்கி அதில் நம்பி நாராயணனாகவே நடிகர் மாதவன் வாழ்ந்திருந்தார். இந்தியில் ஷாருக்கான் கேமியோ ரோலிலும், தமிழில் சூர்யா கேமியோ ரோலிலும் நடித்திருந்தனர். நடிகை சிம்ரன் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சிறந்த படம் ராக்கெட்ரி: 69வது தேசிய விருதுகள் ஆகஸ்ட் 28ம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது ராக்கெட்ரி படத்துக்கு அறிவிக்கப்பட்டது. அந்த படத்தை இயக்கி, நடித்த மாதவனுக்கு தேசிய விருது வழங்கப்படும் என அறிவித்தனர்.
4 C தான் காரணம்: மாதவனின் ராக்கெட்ரி படத்துக்கு என்ன காரணத்திற்காக தேசிய விருது கொடுத்தீங்க என பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தேசிய விருதுகள் அறிவிப்பு குழுவின் தலைவர் கேத்தன் மேத்தா 3 C தான் காரணம் எனக் கூறிவிட்டு, கன்டென்ட், கிராஃப்ட், கிரியேட்டிவிட்டி என பதில் அளித்தார். மேலும், இந்த படத்துக்கு தேசிய விருது வழங்க இன்னொரு காரணமும் உள்ளது எனக் கூறிய அவர் கரேஜ் என்று 4வது சியையும் விளக்கினார்.
சந்திரயான் எஃபெக்ட்டா?: 5வது C-யும் காரணமா என சந்திரயானையும் ரசிகர்கள் குறிப்பிட்டு, ராக்கெட்ரி படத்துக்கு சிறந்த படத்துக்கான தேசிய விருது வழங்க சந்திரயானும் ஒரு காரணமா என கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
இந்தியா உலகத்தையே வியக்க வைத்து சாதனை படைத்த நிலையில், அறிவியல் படமான ராக்கெட்ரி படத்துக்கு தேசிய விருது அறிவித்தால் கச்சிதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டதா? அதற்காகத்தான் மாதவன் சந்திரயான் சாதனை படைக்கும் என ட்வீட் போட்டு, சாதனை படைத்ததும் வீடியோ மூலம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாரா என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
எந்தவொரு பிரிவிலும் சிறந்த விருதினை பெறாமல் நேரடியாக சிறந்த படத்துக்கான விருதை மட்டும் ராக்கெட்ரி எப்படி பெற்றது என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











