69th National Film Awards - 69ஆவது தேசிய விருதுகள்.. தமிழ் மொழிக்கு என்னென்ன விருதுகள் கிடைத்திருக்கின்றன?
சென்னை: 69th National Film Awards (69ஆவது தேசிய திரைப்பட விருதுகள்) இன்று 69ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் தமிழ் மொழிக்கு என்னென்ன விருதுகள் என்பது தொடர்பான முழு பட்டியல்
2021ஆம் ஆண்டுக்கான 69ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. 283 படங்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டன. தமிழிலிருந்து ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன் உள்ளிட்டோர் நடித்த ஜெய் பீம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன், சமுத்திரக்கனி இயக்கத்தில் அவர், தம்பி ராமைய்யா நடித்த விநோதய சித்தம், பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை, வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு, மணிகண்டன் இயக்கத்தில் உருவான கடைசி விவசாயி உள்ளிட்ட படங்கள் இடம்பெற்றிருந்தன.

பெரும் எதிர்பார்ப்பு: சூர்யா நடித்த ஜெய் பீம் படம் இருளர் இன மக்கள் குறித்து பேசி சமூகத்தில் விவாதத்தை கிளப்பி தேசிய அளவில் கவனம் ஈர்த்தது. எனவே நிச்சயம் அந்தப் படத்துக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படமும் ஏதேனும் ஒரு பிரிவிலாவது விருது பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஏமாற்றம்தான்: ஆனால் பெரும் ஏமாற்றமாக சிறந்த படத்துக்கான விருது தமிழ் மொழி படத்துக்கு கிடைக்கவில்லை. மாதவன் இயக்கிய ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட் படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது கிடைத்திருக்கிறது. சிறந்த படத்துக்கான விருது தமிழ் மொழி படங்களில் கிடைக்கவில்லை என்றாலும் ஸ்பெஷல் மென்சன் பிரிவில் விருது கிடைத்திருக்கிறது.
கடைசி விவசாயி: அதன்படி இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான கடைசி விவசாயி படத்துக்கு ஸ்பெஷல் மென்ஷன் பிரிவில் தேசிய விருது கிடைத்திருக்கிறது. இது படக்குழுவை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் திரைத்துறையையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல் அந்தப் படத்தில் நடித்த நல்லாண்டி தாத்தாவுக்கும் ஸ்பெஷல் மென்ஷன் பிரிவில் விருது கிடைத்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்துவிட்டார்.
மற்ற விருதுகள்: தமிழில் கடைசி விவசாயி தவிர இரவின் நிழல் படத்தில் மாயவா என்ற பாடலை பாடியதற்காக ஸ்ரேயா கோஷலுக்கு விருது கிடைத்துள்ளது. அதேபோல் நான் ஃபியூச்சர்டு பிலிம் கேட்டகிரியில் கருவறை படத்துக்காக ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. அதேபோல் சிறந்த கல்வி படமாக சிற்பிகளின் சிற்பங்கள் படம் தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
வேறு யார் யாருக்கு விருது: அதேபோல் சிறந்த பின்னணி பாடகராக ஆர்ஆர்ஆர் படத்தில் பாடிய கால பைரவா, சிறந்த இசையமைப்பாளராக புஷ்பா படத்துக்கு இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாத், சிறந்த பின்னணி இசையமைப்பாளராக ஆர்ஆர்ஆர் படத்துக்கு இசையமைத்த கீரவாணி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் மோஸ்ட் பாப்புலர் பிலிம் என்ற கேட்டகிரியில் ஆர்ஆர்ஆர் படம் விருது வென்றுள்ளது. சிறந்த நடிகராக புஷ்பா பட ஹீரோ அல்லு அர்ஜுன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











