Oscars 2024: இந்த முறையும் ஆஸ்கர் ரேஸில் இருந்து இந்திய படம் வெளியேற்றம்.. சோகத்தில் 2018 படக்குழு!
திருவனந்தபுரம்: ஜூட் அந்தோணி ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ், அபர்ணா பாலமுரளி, குஞ்சக்கோ போபன், தன்வி ராம், ஆசிஃப் அலி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 2018 திரைப்படம் இந்த ஆண்டு சிறந்த வெளிநாட்டு திரைப்படங்கள் பிரிவில் போட்டியிட இந்திய அரசால் தேர்வு செய்யப்பட்டது.
ஆனால், தற்போது ஆஸ்கர் விருது விழாவின் கடைசி சுற்று போட்டிக்கு கூட முன்னேறாமல் அந்த படம் வெளியேறி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த ஆண்டு ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் குஜராத்தி மொழிப் படமான செல்லோ ஷோ படம் அனுப்பப்பட்டது. ஆனால், அந்த படம் இதே போல நாமினேஷன் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேறியது.
ஆஸ்கரில் ஜொலித்த இந்தியா: இந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் இந்திய படங்களின் கைகள் ஓங்கி இருந்தன. தனிப்பட்ட முறையில் ஆஸ்கர் போட்டிக்கு பல பிரிவுகளில் ராஜமெளலி தனது ஆர்ஆர்ஆர் படத்தை அனுப்பி இருந்தார். அதில், சிறந்த இசை மற்றும் சிறந்த பாடல் உள்ளிட்ட பிரிவுகளில் நாட்டுக் கூத்து பாடல் ஆஸ்கர் விருதை வென்றது. இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆஸ்கர் கிடைத்தது.
தி எலிபேன்ட் விஸ்பரர்ஸ்: மேலும், ஆனைமலையில் யானைகளை பராமரித்து வரும் பொம்மன் மற்றும் பெல்லியின் கதையை ஆவணப்படமாக கார்த்திகி கான்ஸ்லேவ்ஸ் இயக்கியிருந்த நிலையில், அந்த படம் சிறந்த ஆவணப்பட பிரிவில் ஆஸ்கர் விருதினை வென்றது.
2018 அவுட்: இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு தமிழ் சினிமா மற்றும் பாலிவுட் படங்களை தவிர்த்து விட்டு மலையாள திரைப்படமான 2018 படத்தை தேர்வுக்குழு அனுப்பி வைத்தது. ஆனால், சில சுற்றுகளிலேயே 2018 படம் முன்னேற முடியாமல் தற்போது வெளியேறி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாமினேஷன் சுற்றுக்காவது 2018 படம் வரும் என பெரும் நம்பிக்கையுடன் இருந்த அந்த படக்குழுவினரும் அப்செட் ஆகி உள்ளனர்.
அடுத்த சுற்றுக்கு முன்னேறும் படங்கள்: இந்திய திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறிய நிலையில், அர்மேனியாவை சேர்ந்த அமெரிகட்சி, பூட்டானை சேர்ந்த தி மாங்க் அண்ட் தி கன், டென்மார்க்கை சேர்ந்த தி பிராமிஸ் லேண்ட், ஃபின்லாந்தை சேர்ந்த ஃபாலன் லீவ்ஸ், ஃபிரான்ஸை சேர்ந்த தி டேஸ்ட் ஆஃப் திங்ஸ், ஜெர்மனியை சேர்ந்த தி டீச்சர்ஸ் லாஞ்ச், ஐஸ்லாந்தை சேர்ந்த காட் லேண்ட், இத்தாலியை சேர்ந்த லோ கேபிடானோ, ஜப்பானை சேர்ந்த பர்ஃபெக்ட் டேஸ், மெக்ஸிகோவை சேர்ந்த டோடெம், மொராக்கோவை சேர்ந்த தி மதர் ஆஃப் ஆல் லைஸ், ஸ்பெயினை சேர்ந்த சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ, டுனிசியாவை சேர்ந்த ஃபோர் டாட்டர்ஸ், உக்ரைனை சேர்ந்த 20 டேஸ் இன் மரிபோல், இங்கிலாந்தை சேர்ந்த தி ஜோன் ஆஃப் இன்ட்ரெஸ்ட் உள்ளிட்ட படங்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
லிஸ்ட்:
Armenia, Amerikatsi
Bhutan, The Monk and the Gun
Denmark, The Promised Land
Finland, Fallen Leaves
France, The Taste of Things
Germany, The Teachers' Lounge
Iceland, Godland
Italy, Io Capitano
Japan, Perfect Days
Mexico, Totem
Morocco, The Mother of All Lies
Spain, Society of the Snow
Tunisia, Four Daughters
Ukraine, 20 Days in Mariupol
United Kingdom, The Zone of Interest


Click it and Unblock the Notifications











