National Film Awards 2023 - கடைசி விவசாயிக்கு தேசிய விருது.. படத்தில் என்னென்ன ஸ்பெஷல்..?
சென்னை: Kadaisi Vivasayi (கடைசி விவசாயி) முருக பக்தர்கள் என்றாலே மயிலை தங்களது உயிராக கருதுவார்கள். அப்படிப்பட்ட முருக பக்தர் மீதே மயில் கொன்ற வழக்கை போடுவதுபோல் காட்சியை கனெக்ட் செய்து அப்ளாஸை அள்ளியிருந்தார் கடைசி விவசாயி மணிகண்டன்.
காக்கா முட்டை படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியானது கடைசி விவசாயி திரைப்படம். விஜய் சேதுபதி, நல்லாண்டி உள்ளிட்டோர் அந்தப் படத்தில் நடித்திருந்தனர். திரைப்படமானது விமர்சன ரீதியாக அனைவராலும் கொண்டாடப்பட்டது. மேலும் தமிழ் சினிமாவில் முக்கியமான படம் என்ற பெயரையும் பெற்றது.

தமிழின் முக்கியமான படம்: தமிழ் சினிமாவில் விவசாயத்தையும், விவசாயிகளையும் மையப்படுத்தி எக்கச்சக்க படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அந்தப் படங்களில் எல்லாம் ஒரு பிரசார தொனி அடித்துக்கொண்டே இருக்கும். ஆனால் கடைசி விவசாயி அப்படி அல்ல. ஒரு விவசாயியின் எதார்த்தமான வாழ்வியலை காட்சிப்படுத்தியிருந்தது. அதுவே இந்தப் படம் மற்ற விவசாய படங்களிலிருந்து தனித்து தெரிந்தது.
சிறந்த காட்சிகள் பல: படம் முழுக்க ஒவ்வொரு காட்சியையும் மணிகண்டன் பார்த்து பார்த்து செதுக்கியிருப்பார். முக்கியமாக விவசாயம் பற்றிய படங்கள் வருவது தமிழ் சினிமாவில் ஃபேஷன் ஆகிவிட்டது. தமிழ் சினிமாவிடமிருந்து விவசாயத்தை முதலில் காப்பாற்ற வேண்டும். அரைகுறை புரிதலோடு படம் எடுக்கிறார்கள் என்ற விமர்சனம் காத்திரமாக எழ தொடங்கிய சமயத்தில் கடைசி விவசாயியை கொண்டு வந்து நிறுத்தினார் மணிகண்டன்.

அதேபோல் படத்தின் நாயகனாக ஒரு முதியவரை வைத்ததெல்லாம் அபாரத்தின் உச்சம். மயிலை கொலை செய்யாத நல்லாண்டி தாத்தாவை கோர்ட்டில் கொண்டுபோய் நிறுத்தும்போது, நாத்தெல்லாம் செத்து போயிடும். அது ஒரு உயிர் இல்லையா நல்லாண்டி தாத்தா கேட்ட்கும்போது, நீதிபதி இவரா சார் மயிலை கொன்றார்னு கேஸ் போட்ருக்கீங்க என நீதிபதி கேட்கும் அந்த ஒற்றை கேள்வி பலமான சாட்டையடி. அதேபோல் பொய் வழக்கு போட்ட காவல் துறை அதிகாரியையே வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச நீதிபதி அனுப்பவதெல்லாம் தரமான சம்பவம்.
முருக பக்தர்: நல்லாண்டியும் அவரது மகன் ராமையாவும் (விஜய் சேதுபதி) தீவிர முருக பக்தர்கள். முருக பக்தர்கள் என்றாலே மயிலை தங்களது உயிராக கருதுவார்கள். அப்படிப்பட்ட முருக பக்தர் மீதே மயில் கொன்ற வழக்கை போடுவதுபோல் காட்சியை கனெக்ட் செய்து அப்ளாஸை அள்ளியிருந்தார் மணிகண்டன்.

நல்லாண்டி தாத்தா: படத்தில் ஏகப்பட்ட விஷயங்கள் சிறப்பாக இருந்தன. அவைகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாக இருந்தது நல்லாண்டி தாத்ததான். தனது அறிமுக படத்திலேயே எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதிலும் அவர் நடை பேச்சு என அனைத்திலும் கிராமத்தில் நமது தாத்தாக்கள் எப்படி இருந்தார்களோ அவர்களை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார்.
தனது மகனை மன நலம் பிறழ்ந்தவன் என ஊரே ஓரக்கண்ணில் பார்த்துக்கொண்டிருக்கும்போது நல்லாண்டியோ சமைத்துவிட்டு விஜய் சேதுபதியோடு வீட்டில் பேசும் காட்சியில் அவர்கள் இருவர் மீதும் பரிதாபம் துளிகூட வராது. அந்த பரிதாபம் வராததற்கு ஒரே காரணம் நல்லாண்டியின் நடிப்புதான். அதுதான் அந்தக் காட்சியின் படத்தின் வெற்றி.
கிளிஷேவை உடைத்த மணிகண்டன்: பொதுவாக எளிய மனிதர்கள் பற்றி இயக்குநர்கள் படம் எடுக்கும்போது ரசிகர்கள் மனதில் பெரும் சோகத்தை சுமத்திதான் வீட்டுக்கு அனுப்புவார்கள். ஆனால் மணிகண்டன் அப்படி இல்லை. நீதிமன்றத்தில் படுத்திருக்கும் நல்லாண்டியை நீதிபதி உள்ளிட்டோர் எழுப்பி அவர் எழுந்திருக்காதபோது அய்யோ இறந்துவிட்டாரோ என்றுதான் பலரும் நினைத்தார்கள்.அப்படி செய்திருந்தால் அது சாதாரண படமாக மாறியிருக்கும். ஆனால் நல்லாண்டியை உயிரோடு வைத்து நீதிபதி,அரசாங்க அதிகாரிகளோடு நாத்து பறிக்கும் காட்சியை க்ளைமேக்ஸில் வைத்து தமிழ் சினிமாவின் க்ளைமேக்ஸ் கிளிஷேவை உடைத்தெறிந்தார் மணிகண்டன்.
வருத்தப்பட்ட விஜய் சேதுபதி: படம் விமர்சனம் ரீதியாக கொண்டாடப்பட்டது. ஆனால் வசூல் ரீதியாக கொண்டாடப்படவில்லை. அது உண்மையில் சாபம்தான். ஒரு பேட்டியில்கூட, 'படம் நல்ல படம்தான். ஆனால் காசு வரவில்லையே' என படம் வணிக ரீதியாக தோல்வியடைந்ததை வருத்தத்தோடு பதிவு செய்திருப்பார் விஜய் சேதுபதி. அதேபோல் துணிவு என்ற பெரும் வியாபாரம் கொடுக்கக்கூடிய படத்தை எடுத்துவிட்டு துணிவு, வாரிசு போன்ற படங்களை பார்த்த கூட்டம் கடைசி விவசாயியையும் பார்த்திருக்க வேண்டும் என தனது நேர்மையான கோபத்தை அச்சமின்றி பதிவு செய்தார் ஹெச்.வினோத்.
ஒரு நல்ல படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றால்தான் அதுமாதிரியான படங்கள் வருவது அதிகரிக்கும். ஆனால் பெரும்பாலும் நல்ல படங்களை கொண்டாடும் தமிழ் ரசிகர்கள் கடைசி விவசாயியை ஏனோ கொண்டாட தவறிவிட்டார்கள். அதற்கான சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என திரைத்துறையினரே ஆதங்கப்பட்டனர். அப்படி திரைத்துறையினர் ஆதங்கப்பட்டது சமீபத்தில் கடைசி விவசாயி படத்துக்குத்தான்.
தற்போது அந்தப் படத்துக்கு ஸ்பெஷல் மென்ஷன் பிரிவில் தேசிய விருது கிடைத்திருக்கிறது. இது எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியதுதான். ஒரு குடும்பத்தைத் தவிர. ஆம் நல்லாண்டி தாத்தாவின் குடும்பம். நல்லாண்டி தாத்தா இறந்துவிட்டார். அவர் உயிரோடு இருந்திருந்தால் இந்த விருது மேலும் சிறப்படைந்திருக்கும். இயக்குநர் மணிகண்டனுக்கும், மறைந்த நல்லாண்டி தாத்தாவுக்கும், விஜய் சேதுபதிக்கும் தமிழ் ஃபில்மிபீட் சார்பாக வாழ்த்துகள்..


Click it and Unblock the Notifications











