69th National awards: ஆஸ்காருடன் சேர்த்து தேசிய விருதை அள்ளிய கீரவாணி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
சென்னை: கடந்த 2021ம் ஆண்டில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் சர்வதேச அளவில் சிறப்பான கவனத்தை பெற்றது.
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்காக படத்தின் இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி சிறந்த இசைக்கான ஆஸ்கர் விருதை பெற்றிருந்தார்.
இந்தப்படம் தொடர்ந்து சர்வதேச அளவில் அடுத்தடுத்த விருதுகளை குவித்துவரும் நிலையில் தற்போது தேசிய விருதையும் தட்டித் தூக்கியுள்ளது.

ஆர்ஆஆர் படத்தின் சிறந்த பின்னணிக்கான தேசிய விருது பெற்ற கீரவாணி: நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், ஸ்ரேயா சரண் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டில் வெளியாகி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது ஆர்ஆர்ஆர். சுதந்திர போராட்ட காலத்திற்கு முந்தைய காலக்கட்டத்தை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் சர்வதேச அளவில் கவனத்தை மட்டுமில்லாமல் விருதுகளையும் அள்ளியது. தொடர்ந்து சினிமா உலகின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதையும் அள்ளியது. படத்தின் நாட்டு நாட்டு பாடல் அவருக்கு ஆஸ்கர் விருதை பெற்றுத் தந்தது.
முன்னதாக இந்தப் பாடல் அவருக்கு கோல்டன் க்ளோப் விருதையும் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது சிறந்த பின்னணிக்கான தேசிய விருதை ஆர்ஆர்ஆர் படம் கீரவாணிக்கு பெற்றுத் தந்துள்ளது. இன்று அறிவிக்கப்பட்ட 2021ம் ஆண்டிற்கான 69வது தேசிய விருது பட்டியலில் சிறந்த பின்னணி இசைக்கான விருதை கீரவாணி பெற்றுள்ளார். ஆர்ஆர்ஆர் படம் அவரது கேரியரின் பெஸ்ட்டாக அமைந்துவிட்டது. இந்தப் படத்தின்மூலம் சர்வதேச அளவில் அறியப்படும் இசையமைப்பாளராக மாறியுள்ளார் கீரவாணி.
தமிழில் மரகதமணி என்ற பெயரில் இசையமைத்துள்ள கீரவாணிக்கு அவரது தந்தைதான் இந்தப் பெயரை சூட்டியுள்ளார். கீரவாணி ராகத்தின்மீதான காதலால் அவருக்கு இந்தப் பெயரை அவரது தந்தை சூட்டியதாக முன்னதாக ஒரு பேடடியில் கீரவாணி தெரிவித்திருந்தார். தெலுங்கில் கல்கி என்ற படத்தில்தான் முதலில் இசையமைத்துள்ளார் கீரவாணி. ஆனால் இந்தப் படம் வெளியாகாத நிலையில், மனசு மகாத்மா என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். கீரவாணி இசையில் வெளியான முதல் படமாக இந்தப் படம் அமைந்துள்ளது.
கீரவாணி கேரியரில் கடந்த 1991ம் ஆண்டில் வெளியான சீதாராமையா காரி மனவராலு படம் மிகச்சிறந்த வெற்றியை அவருக்கு பெற்றுத் தந்தது. மேலும் அந்த ஆண்டில் வெளியான ராம் கோபால் வர்மா இயக்கியிருந்த ஷனா ஷனம் படமும் கீரவாணியின் பெஸ்டாக அமைந்தது. இந்தப் படங்களை தொடர்ந்து தெலுங்குப்பட உலகின் முன்னணி இசையமைப்பாளராக தொடர்ந்து தன்னை நிலைநிறுத்தியுள்ளார் கீரவாணி. தெலுங்கு, தமிழ், இந்தி திரையுலகில் இவரது ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
தற்போது கீரவாணி இசையில் சந்திரமுகி 2 படம் ரிலீசுக்குத் தயாராகியுள்ளது. இந்தப் படத்தில் மொத்தம் 10 பாடல்கள் உள்ளதாக தனது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். மேலும் இந்தப் படத்திற்காக தான் பல நாட்கள் தூங்காத இரவுகளை கழித்ததாகவும் தெரிவித்துள்ளார். இன்னும் சில தினங்களில் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், இருவேறு ஜானர்களின் உருவாகியுள்ள படததின் இரு பாடல்கள் லிரிக் வீடியோ பாடல்களாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.


Click it and Unblock the Notifications











