ஆஸ்கரில் கெத்துக் காட்டிய இந்திய சினிமா... முதல் விருதை தட்டித் தூக்கிய தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: 95வது ஆஸ்கர் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
ஆஸ்கர் 2023ல் இந்தியாவில் இருந்து தேர்வான ஆல் தட் ப்ரீத்ஸ் ஆவணப் படம் ஆஸ்கர் விருதை தவறவிட்டது.
ஆனால், அதனை ஈடுசெய்யும் விதமாக சிறந்த ஆவண குறும்பட பிரிவில் இந்திய சினிமா விருது வென்று அசத்தியுள்ளது.
தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் என்ற ஆவண குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய சினிமாவுக்கு விருது
95வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. டால்பி தியேட்டரில் நடைபெற்ற இந்த விழாவை பிரபல ஹாலிவுட் நடிகர் ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். இந்தியாவில் இருந்து இந்த முறை ஆல் தட் ப்ரீத்ஸ் ஆவணப்பட பிரிவிலும், தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவண குறும்படப் பிரிவிலும் நாமினேட் செய்யப்பட்டிருந்தன. இதில் தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் திரைப்படம் ஆஸ்கர் விருதை வென்று அசத்தியுள்ளது. இதனை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்
ஆவணப்பட தயாரிப்பாளர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கிய தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவண குறும்படம் கடந்தாண்டு வெளியாகியிருந்தது. தமிழ்நாட்டில் உள்ள முதுமலை தேசிய பூங்காவில் எடுக்கப்பட்ட இந்தப் படம், மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான பிணைப்பை காட்டுவதாக உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. பொம்மன், பெல்லி என்ற பழங்குடி தம்பதியினர் காயம்பட்ட ரகு என்ற குட்டி யானையை அரவணைத்து அதனை பாதுகாக்கின்றனர். ரசிகர்களை நெகிழ வைத்த இந்தப் படம் சிறந்த ஆவண குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இந்த திரைப்படம் நெட்பிளிஸ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது. s

முதல் ஆஸ்கர் விருது
முன்னதாக சிறந்த ஆவணப் படத்துக்கான நாமினேஷனில், இந்திய ஆவணப் படமான ஆல் தட் ப்ரீத்ஸ் ஆஸ்கர் விருதை தவறவிட்டது. தற்போது அதனை ஈடு செய்யும் விதமாக தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் சிறந்த ஆவண குறும்படத்துக்காக ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இந்தப் படத்தின் இயக்குநர்களான கார்திகி கன்சல்வாஸ் (Kartiki Gonsalves), குனீத் மோங்கா (Guneet Monga) இருவரும் விருதை பெற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் ஆஸ்கர் மேடையில் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தனர்.

மனிதம் பேசும் இந்திய படைப்புகள்
சிறந்த ஆவணப் படத்துக்கான ஆஸ்கர் விருதை தவறவிட்ட ஆல் தட் ப்ரீத்ஸ் படத்தை ஷௌனக் சென் இயக்கியிருந்தார். இந்தியாவில் காயம்பட்ட பறவைகளை மீட்டு சிகிச்சை அளிக்கும் சகோதரர்களான முகமது சவுத், நதீம் ஷேஜாத் ஆகியோரது பயணமாக இப்படம் உருவாகியிருந்தது. இந்நிலையில், ஆல் தட் ப்ரீத்ஸ், தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் என இரண்டு படங்களுமே விலங்குகள், பறவைகள் மீது மனிதர்களுக்கு இருக்கும் பிணைப்பை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











