69th National Awards - ஆஸ்கரோடு நிற்கவில்லை.. தேசிய விருதை அள்ளிய ஆர்ஆர்ஆர்.. இருந்தாலும் ஏமாற்றம்தான்
சென்னை: RRR (ஆர்ஆர்ஆர்) 69ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் ஆர்ஆர்ஆர் படம் விருதுகளை அள்ளியிருக்கிறது. இருந்தாலும் படக்குழுவுக்கு சிறு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் என பெயர் எடுத்திருக்கும் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ஆர்ஆர்ஆர். இந்திய சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கோமரம் பீம் ஆகியோரின் போராட்டத்தையும், இருவருக்கும் இடையே இருந்த நட்பையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது ஆர்ஆர்ஆர்.

பான் இந்தியா ஆர்ஆர்ஆர்: ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், சமுத்திரக்கனி, ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்திலும் பல பிரமாண்ட காட்சிகள் இடம்பெற்றிருந்தன. 1000 கணக்கான ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளை வைத்து ஏகப்பட்ட காட்சிகள் எடுக்கபட்டிருந்தன. அதனைப் பார்த்த ரசிகர்கள் ராஜமௌலியால் மட்டும் எப்படி இப்படியெல்லாம் காட்சிகள் எடுக்க முடிகிறது என வியந்தனர். பான் இந்தியா படமாக வெளியாகி 1000 கோடி ரூபாய்வரை அந்தப் படம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
கெத்து காட்டிய நாட்டு நாட்டு பாடல்: படத்துக்கு ராஜமௌலியின் உறவினரான எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்தார். படத்தின் பின்னணி இசை ரசிகர்களை தாளம் போட வைக்க; படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ரசிகர்களை செம ஆட்டம் போட வைத்தது. நடனத்தில் சிறந்து விளங்கும் ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் வெறித்தனமாக நடனம் ஆடியிருந்தார்கள்.

ஆஸ்கர் விருது: உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்ட நாட்டு நாட்டு பாடல் முதலில் கோல்டன் குளோப் விருதை வென்றது. அதனைத் தொடர்ந்து சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் ஆஸ்கரில் நாமினேஷன் ஆனது. சில வாரங்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 95ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் நாட்டு நாட்டு பாடல் விருது வென்றது. இதனை இசையமைப்பாளர் கீரவாணியும், பாடலை எழுதிய சந்திரபோஸும் பெற்றுக்கொண்டனர்.
69ஆவது தேசிய விருது: இந்தச் சூழலில் 69ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் ஆர்ஆர்ஆர் படத்துக்கு கண்டிப்பாக சிறந்த படத்துக்கான தேசிய விருது கிடைக்கும் என தெலுங்கு ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் சிறந்த படத்துக்கான தேசிய விருது ராக்கெட்ரி படத்துக்கு கிடைத்திருக்கிறது.
அள்ளிய ஆர் ஆர் ஆர்: சிறந்த படத்துக்கான விருது கிடைக்கவில்லை என்றாலும் பிற பிரிவுகளில் விருதுகளை அள்ளியிருக்கிறது ஆர் ஆர் ஆர். அதன்படி மோஸ்ட் பாப்புலர் கேட்டகிரியில் அந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. மேலும், சிறந்த நடன அமைப்பாளருக்கான விருது பிரேம் ரக்ஷிக்கும் (நாட்டு நாட்டு பாடல் நடன அமைப்பாளர்), சிறந்த பின்னணி பாடகருக்கான விருது கால பைராவுக்கும் (கொமுரம் பீமுடோ பாடல்), சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருது கீரவாணிக்கும், சிறந்த சண்டை பயிற்சியாளருக்கான விருது கிங் சாலமனுக்கு கிடைத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











