என் மகளும், அக்காவும் கூடத்தான்.. லவ் ஜிகாத் சர்ச்சை.. அமீர்கான் பளிச்.. பிகே படத்துக்கும் விளக்கம்!
மும்பை: "நான் ஒரு பெருமைமிகு இஸ்லாமியன், அதே நேரத்தில் பெருமைமிகு இந்துவும் கூடத்தான்" இந்த இரண்டுமே என் விஷயத்தில் உண்மை தான் என சமீபத்தில் இந்தியா டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அமீர்கான் வெளிப்படையாக லவ் ஜிகாத் சர்ச்சைக்கும் பிகே படத்தின் மூலம் கிளம்பிய எதிர்ப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேசியுள்ளார்.
கல்யாண சமையல் சாதம் படத்தை இயக்கிய இயக்குநர் பிரசன்னா இயக்கத்தில் அமீர்கான், ஜெனிலியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'சித்தாரே ஜமீன் பர்' திரைப்படம் வரும் ஜூன் 20ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

அதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி படு வேகமாக அரங்குகள் நிரம்பி வழிகின்றன. அந்த படத்தை புரமோட் செய்யும் விதமாக பல சேனல்களுக்கும், பத்திரிகைகளுக்கும் பேட்டியளித்து வருகிறார் அமீர்கான். அவரது லேட்டஸ்ட் பேட்டியில், வெளிப்படையாக பல சர்ச்சைகளுக்கு பதிலளித்த விதம் இந்திய ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
பிகே பட சர்ச்சை: லகான், 3 இடியட்ஸ், தங்கல் என அமீர்கான் படங்கள் வரும் போதெல்லாம் பாலிவுட் திரையுலகம் அவரை உச்சத்தில் வைத்து கொண்டாடியது. இன்றளவும் இந்தியாவில் வெளியான ஒரு படம் 2000 கோடி வசூல் வேட்டையை பாக்ஸ் ஆபீஸில் நிகழ்த்தி சாதனை படைத்தது என்றால் அந்த சாதனைக்கு சொந்தக்காரர் அமீர்கான் தான். ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளியான 3 இடியட்ஸ் படத்தை உலகமே கொண்டாடியது. தமிழில் ஷங்கர் இயக்கத்தில் விஜய் அந்த படத்தை ரீமேக் செய்து 'நண்பன்' எனும் டைட்டிலில் நடித்திருந்தார். ஆர்ஜே பாலாஜி நடிகை நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கியதும் இதே பிகே படத்தின் இன்ஸ்பிரேஷனை வைத்து தான். ஆனால், அந்த படத்தில் இந்துக்களை அமீர்கான் அவமதித்து விட்டார் என்றும் லவ் ஜிகாத்தை ஆதரித்தார் என்றும் சர்ச்சைகள் வெடித்தன.

அமீர்கான் விளக்கம்: சித்தாரே ஜமீன் பர் படத்தின் புரமோஷனுக்காக சென்றிருந்த அமீர்கானிடம் இந்த கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதை தவிர்க்காமல், அதற்கு விளக்கம் அளித்துள்ளார். நான் ஒரு போதும் எந்தவொரு மதத்தையும் கடவுளையும் வெறுப்பவன் கிடையாது. ராஜ்குமார் ஹிரானி கடவுள் பெயரை வைத்துக் கொண்டு ஏமாற்றும் போலி சாமியார்களை களையெடுக்க ஒரு ஏலியன் வந்தால் எப்படி இருக்கும் என்கிற கதையை சொன்ன விதம் எனக்கு பிடித்துப் போக அந்த படத்தில் நடித்தேன் என்றார். உலகம் முழுவதும் பல மதங்களிலும் இதே போலி சாமியார்கள் பிரச்னை இருக்கத்தான் செய்கிறது என்றும் கூறியுள்ளார். மேலும், அந்த படத்தில் அனுஷ்கா ஷர்மா, சுஷாந்த் சிங் ராஜ்புத் காதல் லவ் ஜிகாத்தை ஊக்கப்படுத்துவதாக சர்ச்சைகள் வெடித்தது குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.

என் மகளும், என் சகோதரியும் கூடத்தான்: நடிகர் அமீர்கான் முதன்முதலாக திருமணம் செய்தது ரீனா தத்தா எனும் இந்துப் பெண்ணை தான். பின்னர், அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். அதன் பின்னர், உதவி இயக்குநராக இருந்த கிரண் ராவை திருமணம் செய்தார் அவரும் இந்து தான். 3வதாக அமீர்கான் காதலித்து வரும் கெளரி ஸ்பிராட்டும் இந்து தான். இஸ்லாமியரான அமீர் கான் மீதும் லவ் ஜிகாத் சர்ச்சைகள் பாலிவுட்டில் வெடித்து வருகின்றன. இந்நிலையில், தனது மூத்த சகோதரி நிகாத் திருமணம் செய்துக் கொண்டது சந்தோஷ் ஹெக்டே எனும் இந்துவைத்தான். அதே போல, என்னுடைய மகள் இரா கான் திருமணம் செய்துக்கொண்டது நுபுர் ஷிகாரே எனும் இந்துவைத்தான் என்றும் கூறியுள்ளார். இதற்கு பெயர் காதல், மதங்களை தாண்டி மனிதத்தை மட்டுமே நேசித்து வருவது, இது லவ் ஜிகாத் அல்ல என விளக்கம் கொடுத்துள்ளார். மேலும், தனது மகள் இராவின் பெயருக்கு அர்த்தம் சரஸ்வதி என்றும் ஐராவதி எனும் பெயரை கேள்விப் பட்டு இருப்பீர்களே என்றும் பேசினார். ஐரா என்பதை இரா என உச்சரிக்கின்றனர் என்றார். மேலும், தனது குழந்தைகளின் பெயர்களை தான் முடிவு செய்யவில்லை என்றும் அவர்களின் அம்மாக்களின் முடிவு தான் என்றும் கூறிவிட்டார்.


Click it and Unblock the Notifications











