தனுஷின் குபேராவுக்கு இன்னொரு தலைவலி.. தமிழில் வெளியாகும் அமீர்கான் படம்.. டிரைலரே தூள் கிளப்புதே!
சென்னை: ஆர்.எஸ். பிரசன்னா இயக்கத்தில் அமீர்கான், ஜெனிலியா நடிப்பில் உருவாகியுள்ள 'சித்தாரே ஜமீன் பர்' படத்தின் தமிழ் டிரைலரை சற்றுமுன் அமீர்கான் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த 2022ம் ஆண்டு வெளியான லால் சிங் சத்தா படத்தில் நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய தோல்விப் படமாக மாறியதும் சில ஆண்டுகள் நடிப்புக்கு பிரேக் விடுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், அவருடைய அடுத்த படமாக 3 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சித்தாரே ஜமீன் பர் படம் வரும் ஜூன் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது என்கிற அறிவிப்புடன் இந்த முறை பான் இந்தியா ரிலீசுக்கும் அமீர்கான் பக்காவாக திட்டமிட்டுள்ளார்.

ஏற்கனவே ஓடிடி அழுத்தம் காரணமாக தனுஷின் குபேரா படம் ஒரு மாதம் முன்னதாக வருவதாக படக்குழு புலம்பி வரும் நிலையில், அமீர்கானின் சித்தாரே ஜமீன் பர் படம் இன்னொரு தலைவலியாக பான் இந்தியாளவில் வெளியாக காத்திருக்கிறது.
மீண்டும் வரும் அமீர்கான்: பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் படங்கள் தொடர்ந்து சொதப்பினால், 2 முதல் 3 ஆண்டுகள் பிரேக் விட்டு கம்பேக் கொடுத்து வருகின்றனர்.ஷாருக்கான் தோல்விகளை கடந்து வெற்றியை கொடுக்க பிரேக் எடுத்து கம்பேக் கொடுத்த நிலையில், ஒரே வருடத்தில் பதான், ஜவான், டன்கி என 2500 கோடி வசூலை அள்ளினார். 2016ல் வெளியான தங்கல் படத்துக்கு பிறகு அமீர்கான் நடித்த 'தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான்' படம் ஃபிளாப் ஆன நிலையில், லால் சிங் சத்தா படமும் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், வரும் ஜூன் 20ம் தேதி மீண்டும் வருகிறார் அமீர்கான்.
தமிழ் டிரைலர் தாறுமாறு: சமீபத்தில் இந்தியில் வெளியான சித்தாரே ஜமீன் பர் டிரைலர் இதுவரை 77 மில்லியன் பார்வைகளை கடந்துள்ள நிலையில், சற்றுமுன் தமிழ் டிரைலரை அமீர்கான் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. மும்பையில் நடிகர் தனுஷ், ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா உள்ளிட்ட குபேரா படக்குழுவினர் குபேரா படத்தின் பாடலை வெளியிட்டு வரும் நிலையில், தமிழ் ரசிகர்களை கவரும் நோக்கில் இப்படியொரு அட்டகாசமான டிரைலரை அமீர்கான் வெளியிட்டுள்ளார்.
பைத்தியத்தை பைத்தியம்னு சொல்லக் கூடாதா?: தமிழில் 2013ம் ஆண்டு 'கல்யாண சமையல் சாதம்' படத்தை இயக்கிய இயக்குநர் ஆர்.எஸ். பிரசன்னா தான் அமீர்கான், ஜெனிலியாவை வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார். 10 மாற்றுத் திறனாளிகளை வைத்துக் கொண்டு கூடைப்பந்து போட்டிக்கு கோச் கொடுக்கும் பிகிலாக களமிறங்கும் மாஸ்டர் அமீர்கான் மக்களின் மனம் கவரும் வகையில் இந்த டிரைலர் உருவாக்கப்பட்டுள்ளது. "பைத்தியத்தை பைத்தியம்னு சொல்லக் கூடாதா? என அமீர்கான் கேட்கும் போது, குள்ளனை குள்ளன் என சொல்லக் கூடாதா?" என அவரது அம்மா கவுன்ட்டர் கொடுக்கும் வசனங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், தேவையற்ற ட்ரோல்கள் உருவாகும் என்றே தெரிகிறது.
தனுஷ் படத்துக்கு தலைவலி: வரும் ஜூன் 20ம் தேதி அமீர்கானின் சித்தாரே ஜமீன் பர் மற்றும் தனுஷின் குபேரா படங்கள் ஒரே நாளில் மோத உள்ள நிலையில், பான் இந்தியா அளவில் இரண்டு படங்களும் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளை இரண்டு படங்களும் அதிகம் டார்கெட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாக்ஸ் ஆபீஸில் எந்த படம் அதிகம் கல்லா கட்டப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











