இந்த தீபாவளி மட்டுமில்லை.. இன்னும் 2 தீபாவளியும் சாய் பல்லவிக்கு சரவெடி தான்.. ராமாயணா ரிலீஸ் தேதி!
மும்பை: இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கும் அளவுக்கு டாப் நடிகையாக மாற காத்திருக்கிறார் நடிகை சாய் பல்லவி. கடந்த ஒரு வாரமாக அனைவரும் சாய் பல்லவியின் நடிப்பைத் தான் கொண்டாடி வருகின்றனர். அமரன் படத்தில் ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் அப்படியொரு உயிர் நடிப்பைக் கொடுத்து அசத்தினார்.
இந்த தீபாவளிக்கு தமிழ் சினிமாவில் வெளியான அமரன் திரைப்படம் இதுவரை 170 கோடி வசூலை கடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வார முடிவுக்குள் 200 கோடி வசூலை அமரன் படம் ஈட்டிவிடும் என்கின்றனர்.

இந்த ஆண்டு சியான் விக்ரம் நடித்த தங்கலான், தனுஷ் நடித்த ராயன், விஜய் சேதுபதியின் மகாராஜா படங்கள் 100 கோடி ரூபாய் வசூலை கடக்கவே பெரும் போராட்டம் நடத்திய நிலையில், 3 நாட்களில் அமரன் படம் 100 கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்த முக்கிய காரணமே சாய் பல்லவியின் நடிப்பு தான் என்கின்றனர். இந்நிலையில், இந்த தீபாவளி மட்டுமின்றி இன்னும் 2 தீபாவளியும் சாய் பல்லவிக்கு ஜாக்பாட் என்கிற சூப்பரான அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது.
பாலிவுட்டில் சாய் பல்லவி: தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி அடுத்ததாக ரன்பீர் கபூருடன் இணைந்து ராமாயணா படத்தில் சீதையாக நடித்து பாலிவுட்டிலும் அறிமுகமாகவுள்ளார். தென்னிந்திய நடிகைகளான சமந்தா, நயன்தாரா, ராஷ்மிகா மந்தனாவை தொடர்ந்து தற்போது சாய் பல்லவியும் பாலிவுட்டில் பிளாக்பஸ்டர் படத்தை கொடுக்க காத்திருக்கிறார்.

தீபாவளிக்கு ராமாயணா: அமீர்கான் நடிப்பில் வெளியாகி 2000 கோடி வசூலை ஈட்டி பாகுபலி வசூலை முறியடித்த தங்கல் படத்தை இயக்கிய நிதிஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடித்து வரும் ராமாயணா திரைப்படத்தின் முதல் பாகம் அடுத்த 2026ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அதன் 2ம் பாகம் 2027ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்கிற செம சூடான அப்டேட்டை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். 2025ம் ஆண்டும் தீபாவளிக்கு ஒரு சூப்பரான படத்தை சாய் பல்லவி ரிலீஸ் செய்தால் அவரது மார்க்கெட் உச்சத்துக்கே சென்று விடும் என்று கூறுகின்றனர். வரும் பொங்கலுக்கு நாக சைதன்யாவுடன் சாய் பல்லவி நடித்துள்ள தண்டேல் படம் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டில் எதிர்ப்பு: அமரன் படத்தில் ராணுவ வீரரின் மனைவியாக நடித்து கலக்கிய சாய் பல்லவியின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் சாய் பல்லவி அமரன் படத்தின் கடைசி 10 நிமிடத்தில் நடித்த நடிப்பை பார்த்து என்னுடைய இதயமே நின்று விட்டது என்றும் மூச்சும் நின்றது என்றும் பாராட்டியிருந்தார். ஆனால், இந்திய ராணுவ வீரர்களை மட்டம் தட்டியும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பற்றி பாசிட்டிவாக சாய் பல்லவி பேசியது சர்ச்சையை கிளப்பிய நிலையில், ராமாயணா படத்தில் சீதையாக அவர் நடிக்கக் கூடாது என பாய்காட் சாய் பல்லவி ஹாஷ்டேகையும் பாலிவுட் ரசிகர்கள் சமீபத்தில் டிரெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.

ரன்பீர் கபூரின் வளர்ச்சி: அனிமல் படத்திற்கு பிறகு ரன்பீர் கபூரின் வளர்ச்சி பாலிவுட்டில் ஷாருக்கானுக்குப் பிறகு அவர் தான் என்கிற நிலையை உருவாக்கியுள்ளது. அனிமல் திரைப்படம் 900 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய நிலையில், ராமாயணம் படத்தின் முதல் பாகம் 1500 கோடி வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











