26 ஆண்டுகளுக்கு பின் பாலிவுட் கம்பேக்.. அஜய் தேவ்கன், ஜோதிகா மிரட்டும் ”சைத்தான்”.. டீசர் எப்போ?
மும்பை: அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகவுள்ள சைத்தான் திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டு இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் டோலி சஜா கே ரக்னா. அக்ஷய் கண்ணா நடித்த இந்தப் படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. அதன்பின் தமிழ் சினிமா பக்கம் திரும்பிய ஜோதிகா, வாலி, பூவெல்லாம் கேட்டுப்பார், குஷி உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடித்து பிரபலமானார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினியுடன் சந்திரமுகி, கமல்ஹாசனுடன் வேட்டையாடு விளையாடு, விஜய்யுடன் திருமலை, குஷி, அஜித்துடன் முகவரி, ராஜா, பூவெல்லாம் உன்வாசம், சூர்யாவுடன் காக்க காக்க, மாயாவி, சிம்புவுடன் மன்மதன், சரவணா என்று உச்ச நடிகையாக வலம் வந்தவர். இதுமட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வந்தார்.

நடிப்பில் பிஸி: சூர்யாவுடனான திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகியிருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்திற்கு பின் மீண்டும் நடிப்பிற்கு திரும்பினார். அதன்பின் ராட்சசி, மகளிர் மட்டும் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த ஜோதிகாவிற்கு, உடன்பிறப்பே படம் 50வது படமாக அமைந்தது. இந்த நிலையில் ஜோதிகாவிற்கு மலையாளம், இந்தி திரைத்துறைகளில் இருந்து வாய்ப்புகள் வர தொடங்கியது.
அண்மையில் மம்முட்டியுடன் ஜோதிகா இணைந்து நடித்த "காதல் தி கோர்" திரைப்படம் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்த நிலையில் 26 ஆண்டுகளுக்கு பின் ஜோதிகா மீண்டும் இந்தி சினிமா பக்கம் திரும்பியுள்ளார். சூப்பர் 30, கன்பத் உள்ளிட்ட படங்களை இயக்கிய விகாஸ் பால் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சைத்தான்.
பாலிவுட் கம்பேக்: அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து, ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. குஜராத்தி மொழியில் உருவான "வாஷ்" என்ற படத்தின் ரீமேக்காக சைத்தான் உருவாகியுள்ளது. பில்லி, சூனியம் என்று கூறப்படும் பிளாக் மேஜிக் மற்றும் ஹாரர் ஜானரில் உருவாகிய திரைப்படம் குஜராத்தில் பலரின் கவனத்தை ஈர்த்தது.
தற்போது இது பாலிவுட்டுக்கு ஏற்றவாறு படமாக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை ஜோதிகா மற்றும் மாதவன் இருவரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ள நிலையில், போஸ்டரிலேயே அஜய் தேவ்கன், மாதவன் மற்றும் ஜோதிகா ஆகியோர் தோன்றியுள்ளனர். மார்ச் 8ஆம் தேதி ரிலீஸாக உள்ள திரைப்படம், ஜோதிகாவிற்கு பாலிவுட் கம்பேக் படமாக அமைய உள்ளது.


Click it and Unblock the Notifications











