அமிதாப் பச்சன் பங்களா அருகே வெடிகுண்டு.. போலீஸுக்கு வந்த ஃபோன் கால் - நடந்தது என்ன?
மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் பங்களா அருகே வெடிகுண்டு இருப்பதாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காவல் துறையிடம் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர் அமிதாப் பச்சன். 1969ஆம் ஆண்டு வெளியான சாத் ஹிந்துஸ்தானி படத்தின் மூலம் அறிமுகமான அமிதாப் முதல் படத்திலேயே தேசிய விருது வென்று அசத்தினார். அதன் பிறகு அவர் நடித்த பல படங்கள் ஹிட்டடிக்க பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆனார்.

வசூலில் சக்கைப்போடு போட்ட ஷோலே
1975ஆம் ஆண்டு வெளியான ஷோலே படத்தில் தர்மேந்திராவுடன் இணைந்து நடித்திருந்தார் அமிதாப். இரண்டு பெரிய ஸ்டார்கள் இணைந்து நடித்த படம் என்ற எதிர்பார்ப்போடு வெளியான ஷோலே படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. இன்றுவரை இந்தியாவின் முக்கியமான சினிமாக்களில் ஒன்றாக திகழ்ந்துகொண்டிருக்கிறது ஷோலே திரைப்படம்.

ரஜினியின் ரோல் மாடல் அமிதாப்
200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் அமிதாப் பச்சன் பல நடிகர்களுக்கு ரோல் மாடலாக இருப்பவர். அவர் நடித்த டான் படம்தான் தமிழில் ரஜினி நடித்த பில்லா என்று ரீமேக்காகி வெற்றி பெற்றது. அதனையடுத்து அந்தப் படம் அஜித் நடிப்பில் பில்லா என்றும், ஷாருக்கான் நடிப்பில் டான் என்றும் ரீமேக்கானது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்; அமிதாப் என்னுடைய ரோல் மாடல்களில் ஒருவர் என்று பலமுறை கூறியிருக்கிறார்.

தயாரிப்பாளர் மற்றும் கேமியோ ரோல்
அமிதாப் பச்சன் நடிப்பதோடு மட்டுமின்றி பல படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார். தமிழில் அவர் அஜித், விக்ரம் நடிப்பில் உருவான உல்லாசம் படத்தை தயாரித்திருக்கிறார். வயோதிகம் காரணமாக ஹீரோவாக நடிப்பதை நிறுத்திக்கொண்ட அமிதாப் தற்போது சிறப்புத் தோற்றத்தில் பல படங்களில் நடித்துவருகிறார். இவரது மகன்தான் நடிகர் அபிஷேக் பச்சன்.

அமிதாப் பச்சன் வீட்டில் வெடிகுண்டு
தற்போது அமிதாப் பச்சன் மும்பையில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். இந்நிலையில் நாக்பூர் காவல் துறைக்கு தொலைபேசியில் பேசிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர், மும்பையில் இருக்கும் அமிதாப் பச்சனின் பங்களா மற்றும் தர்மேந்திரா ஆகியோரின் வீடுகள் அருகே வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், மும்பையில் 25 பேர் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபடவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வெடிகுண்டு சிக்கவில்லை; போலி அழைப்பு
இதனையடுத்து நாக்பூர் காவல் துறை மும்பை காவல் துறைக்கு எச்சரிக்க விடுக்க அமிதாப் பச்சன் வீடு மற்றும் தர்மேந்திராவின் வீடுகளில் காவல் துறையினர் சோதனை செய்தனர். ஆனால் சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனையடுத்து காவல் துறைக்கு வந்த ஃபோன் கால் போலியானது என்பது உறுதியானது. இந்த விவகாரம் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Click it and Unblock the Notifications











