அட கொடுமையே.. நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு மூளை பக்கவாதம்.. மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: பாலிவுட்டின் மூத்த பழம்பெரும் நடிகரான மிதுன் சக்கரவர்த்தி, உடல் நலக்குறைவு காரணமாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 73. தற்போது அவரின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும் அவரின் மகன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நடிகர் மிதுன் சக்கரவர்த்தி 1966ம் ஆண்டு பெங்காலியில் வெளியான மிரிகயா என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக நுழைந்தார். முதல் படத்திலேயே இவர், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று, ஒட்டு மொத்த சினிமாவையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.

மிதுன் சக்கரவர்த்தி: முதல் படத்திலேயே சிறந்த நடிகர் என்பதை நிரூபித்த மிதுன் சக்கரவர்த்திக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இதையடுத்து, டிஸ்கோ டான்சர் தவிர , சுரக்ஷா , ஹம் பாஞ்ச் , சஹாஸ், வார்தத் , ஷௌகீன் , வான்டட் , பாக்ஸர் , கசம் பைடா கர்னே வாலே கி , பியார் ஜுக்தா நஹி, குலாமி என அடுத்தடுத்து ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கு என தனி இடத்தை பிடித்தார்.
மிதுன் ஸ்ரீதேவி காதல்: 80 கால கட்டத்தில் கொடி கட்டி பறந்த மிதுன் சக்கரவர்த்தி பல காதல் கிசுகிசுவில் சிக்கி உள்ளார். இவர் நடிகை ஸ்ரீதேவியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மிதுன் ஏற்கனவே யோகீதா பாலியை திருமணம் செய்திருந்த நிலையில் இருவரும் 1985 ஆம் ஆண்டு ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர் என்றும் இவர்களின் ரகசிய திருமணம் மிதுன் சக்கரவர்த்தியின் மனைவி யோகீதா பாலிக்கு தெரியவர அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் இதன் காரணமாக, மிதுன் ஸ்ரீதேவியை விட்டுப் பிரிந்ததாகவும் பாலிவுட்டில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டன.
குணசித்திர நடிகராக: 90க்கு பின் பட வாய்ப்பு குறைந்ததால், குரு , கோல்மால் 3 , ஹவுஸ்ஃபுல் 2 , OMG ஓ மை காட் போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ள மிதுன் சக்ரவர்த்தி பெங்காலி , ஹிந்தி , ஒடியா , போஜ்புரி , தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மற்றும் பஞ்சாபி என பல மொழியில் 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர், 'யாகாவா ராயினும் நாகாக்க' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 3 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ள மிதுன் சக்கரவர்த்திக்கு, கடந்த மாதம் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திடீரென நெஞ்சுவலி: இந்நிலையில், நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு நேற்று காலை 10.30 மணி அளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கொல்கத்தாவில் உள்ள அப்பல்லோ மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அவர் மகன் மஹாக்ஷய் சக்கரவர்த்தி செய்தியாளர்களிடம் கூறினார். அதில், அப்பா தற்போது நலமாக இருக்கிறார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிறப்பான சிகிச்சை அளித்து வருகின்றனர். எனவே யாரும் இதுகுறித்து கவலைப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
மூளை பக்கவாதம்: மிதுன் சக்கரவர்த்தியின் உடல் நிலை குறித்து கொல்கத்தா அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அவருக்கு மூளையில் இஸ்கிமிக் செரிப்ரோவாஸ்குலர் விபத்து அதாவது பக்கவாதம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், தற்போது, அவர் முழு உணர்வுடன் இருக்கிறார். அவருக்கு மிதமான உணவு கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், நரம்பியல் மருத்துவர், இருதயநோய் நிபுணர் மற்றும் இரைப்பைக் குடலியல் நிபுணர் உள்ளிட்ட டாக்டர்கள் அவர் தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











