Ambani marriage: அமிதாப் காலில் விழுந்து வணக்கம்.. ரஜினிக்கு மரியாதை.. கவனம் ஈர்த்த ஷாருக்கான்!
மும்பை: பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் திருமண நிகழ்வுகள் கடந்த சில மாதங்களாக மிகவும் விமரிசையாக அடுத்தடுத்த கொண்டாட்டங்களுடன் நடந்து வருகிறது. நேற்றைய தினம் இந்த திருமண நிகழ்வில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பிரபல நடிகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, ஜோதிகா, இயக்குநர் அட்லி அவரது மனைவி பிரியா அட்லி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும் வெளிநாட்டில் இருந்தும் பிரபலங்கள் பலரும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் மிகப் பெரிய அளவில் நிகழ்ச்சி களைகட்டியது.

அம்பானி வீட்டு திருமணம்: முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமண கொண்டாட்டங்கள் தொடர்ந்து பல வாரங்களாக தொடர்ந்து வருகிறது. கடந்த ஜனவரியில் இவர்களின் நிச்சயதார்த்தம் மிகவும் விமரிசையாக நடைபெற்ற நிலையில் கடந்த மார்ச் மாதம் முதலே திருமண கொண்டாட்டங்களை துவங்கினர். தொடர்ந்து அடுத்தடுத்து பல கொண்டாட்டங்களை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் மேற்கொண்டனர். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணத்தின் மெஹந்தி, ஹல்தி உள்ளிட்ட நிகழ்வுகளும் மிகவும் விமரிசையாக நடத்தப்பட்டுள்ளன.
திருமணத்தில் பங்கேற்ற ரஜினிகாந்த்: இந்நிலையில் நேற்றைய தினம் திருமண நிகழ்வுக்கான கொண்டாட்டங்களும் வெகு விமரிசையாக நடந்துள்ளன. இதில் இந்திய அளவில் பாலிவுட், கோலிவுட் உள்ளிட்ட ஏராளமான நடிகர்களும், திரைத்துறை பிரபலங்களும் அரசியல்வாதிகளும் விளையாட்டு நட்சத்திரங்களும் பங்கேற்று சிறப்பான கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷாருக்கான், அனில் கபூர், ரஜினிகாந்த், சூர்யா, ஜோதிகா, அட்லி, பிரியா அட்லி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்களை இந்த திருமண நிகழ்வில் பார்க்க முடிந்தது. தன்னுடைய குடும்பத்தினருடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்.
மூத்த நடிகர்களுக்கு ஷாருக்கான் மரியாதை: தன்னுடைய மனைவி லதா ரஜினிகாந்த், மகள் சௌந்தர்யா, மருமகன் விசாகன் மற்றும் பேரனுடன் நடிகர் ரஜினிகாந்த் அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டார். இதே போல நடிகர் அமிதாபச்சனும் தன்னுடைய மனைவி ஜெயாபச்சனுடன் இந்த திருமண கொண்டாட்டத்தில் பங்கேற்றார். இதனிடையே, நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதலில் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினி காந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டவர்களை கைகூப்பி வணங்கிய நிலையில் அடுத்ததாக அங்கு வந்த நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மனைவி ஜெயா பச்சன் ஆகியோர் காலில் விழுந்து வணங்கியதையும் பார்க்க முடிந்தது.
ரசிகர்களை கவர்ந்த ஷாருக்கான்: பாலிவுட்டில் மட்டுமில்லாமல் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக இருப்பவர் ஷாருக்கான். பாலிவுட் பாட்ஷா என்று அவரை ரசிகர்கள் கொண்டாடி வரும் சூழ்நிலையிலும் அமிதாபச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட மூத்த நடிகர்களுக்கு அவர் மரியாதை செலுத்தியது ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வீடியோவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











