பான் மசாலா விளம்பரம்...சிக்கலில் பாலிவுட் டாப் ஹீரோக்கள்
மும்பை : பான் மசாலா, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விளம்பரம் வட இந்திய சேனல்களில் சர்வ சாதாரணமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த விளம்பரங்களில் பாலிவுட் டாப் ஹீரோக்கள் பலர் தோன்றி நடித்து வருகிறார்கள்.

அஜய் தேவ்கன், ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன், ரன்வீர் சிங் போன்ற நடிகர்கள் இதுவரை பான் மசாலா விளம்பரங்களில் தோன்றி நடித்த வந்தனர். இந்நிலையில் தற்போது மூத்த நடிகரான அமிதாப் பச்சனும் பான் மசாலா விளம்பரம் ஒன்றில் தோன்றி நடித்துள்ளார்.
இதனால் அவரது ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இது போன்று இளைஞர்களை சீரழிக்கும் பொருட்களின் விளம்பரங்களில் தோன்றி நடிக்க வேண்டாம் என ரசிகர்கள் பலர் அமிதாப்பை கேட்டுக் கொண்டுள்ளனர்.
பாலிவுட் டாப் நடிகர்கள் பலரும் பான் மசாலா, சிகரெட், புகையிலை பொருட்களின் விளம்பரங்களில் நடிப்பதால், அதனால் கவரப்பட்டு இளைஞர்கள் பலர் இந்த போதை வஸ்துக்களை பயன்படுத்த துவங்குகின்றனர். இதனால் நாட்டில் புகையிலை பொருட்களை பயன்படுத்தும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இது போன்ற விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்த வேண்டும் என தேசிய புகையிலை ஒழிப்பு அமைப்பு சார்பில் அமிதாப் பச்சனுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் தலைவர் சேகர் சல்கார், அமிதாப் பச்சனுக்கு எழுதி உள்ள கடிதத்தில், பல அமைப்புக்கள் புகையிலைக்கு எதிரான போரில் பங்கேற்று வருகின்றன. தொடர்ந்து இவற்றை ஒழிக்க போராடி வருகிறோம். ஆனால் பிரபலங்களாக இருக்கு உங்களை போன்ற நடிகர்கள் புகையிலை விற்பனையை ஊக்குவிக்க அவற்றின் விளம்பரங்களில் நடிக்கிறீர்கள். இதனால் ஈர்க்கப்படும் மாணவர்கள் புகையிலை பயன்படுத்துவது அதிகரிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
அதோடு புகையிலை எப்படியெல்லாம் உடல்நிலையை பாதிக்கிறது. குறிப்பாக இளைஞர்களின் உடல் ஆரோக்கியத்தை பாத்திக்கிறது என்பதையும் விரிவாக விளக்கி அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியானது முதல், பான் மசாலா விளம்பரங்களில் நடிக்கும் பாலிவுட் ஹீரோக்களுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
ரசிகர்கள் பலரும் தங்களின் ஃபேவரெட் நடிகர்களை இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்தி வருகின்றனர். இன்னும் சிலர், பிரபலமாக இருக்கும் இவர்களுக்கு சமூக பொறுப்பு இல்லையா. பணத்திற்காக எந்த விளம்பரத்தில் வேண்டுமானாலும் நடிப்பார்களா என மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











