மிரட்டும் Liger போஸ்டர் ... விஜய் தேவரகொண்டா படத்தில் இணைந்த மைக் டைசன்
மும்பை : 1985 ம் ஆண்டு முதல் 2005 ம் ஆண்டு வரை குத்துச்சண்டையில் பல சாதனைகளை படைத்து, புதிய வரலாறு படைத்தவர் மைக் டைசன். குத்துச்சண்டை என்றாலே மைக் டைசன் தான் என கூறும் அளவிற்கு குத்துச்சண்டை விளையாட்டின் அடையாளமாக திகழ்கிறார்.
இவர் Liger படத்தில் நடிக்க உள்ளதாக கடந்த ஆண்டு தகவல் வெளியானது. இந்த படம் டைசன், இந்திய சினிமாவில் தடம் பதிக்கும் முதல் படம் என கூறப்பட்டது. பிறகு இந்த படம் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை.

கொரோனாவால் தள்ளிபோனது
லைகர் படத்தை 2020 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய தான் முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக படத்தின் வேலைகளை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் இந்த படம் தொடர்பான டீசர் போன்றவற்றை ரிலீஸ் செய்யும் தேதியை படக்குழு நிறுத்தி வைத்திருந்தது. இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனாவால் தான் படத்தை தொடர முடியவில்லை என கரன் ஜோகரும், விஜய் தேவரகொண்டாவும் வருத்தம் தெரிவித்திருந்தனர்.

விஜய் தேவரகொண்டா படத்தில் டைசன்
இந்நிலையில் விஜய் தேவரகொண்டா - அனன்யா பாண்டே லீட் ரோலில் நடிக்க உள்ள Liger படத்தில் மைக் டைசனும் இணைந்துள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதோடு விஜய் தேவரகொண்டாவின் ஒரு பாதி முகமும், மைக் டைசனின் மற்றொரு பாதி முகமும் இணைந்தது போன்ற போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

குத்துச்சண்டையின் கடவுள்
Liger படத்தில் டைசன் இணைய உள்ளதை மிரட்டலான வீடியோவாகவும் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த விஜய் தேவரகொண்டா, இந்திய திரைகளில் முதல் முறையாக, மாஸ் அடையாளம் லைகர் படத்தில் இணைகிறார். பூமியிலேயே மோசமான மனிதர். குத்துச்சண்டையின் கடவுள். எப்போதும் சிறப்பான மனிதர், இரும்பு மைக் டைசன் என உற்சாகம் பொங்க பதிவிட்டுள்ளார்.

5 மொழிகளில் படம் ரிலீஸ்
முதல் முறையாக இந்திய சினிமாவில் கிங் ஆஃப் ரிங். மைக் டைசனை லைகர் டீம் வரவேற்கிறது என கரன் ஜோகரும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த படம் இந்தியில் இயக்கப்பட்டு, பிறகு தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு, ரிலீஸ் செய்யப்பட உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இது முதல் படமல்ல
மைக் டைசன் நடிக்கும் முதல் இந்திய படம் லைகர் என கூறப்பட்டாலும், இது அவரின் முதல் படம் இல்லை. 2007 ல் சன்னி தியோல், ஷாகித் கபூர், ஜாக்கி ஷரோஃப் உள்ளிட்ட நடித்த Fool n Final படத்தில் மைக் டைசன் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

தற்காப்பு கலை படம்
பூரி ஜகந்நாத் தயாரித்து, இயக்கும் இந்த படம் தற்காப்பு கலைகளின் கலவையை பின்புலமாக கொண்டதாகும். இதில் மிக முக்கியமான ரோலில் டைசன் நடிக்க போகிறாராம். டைசன் இணைந்துள்ளதால், லைகர் படம் பான் - வேல்ட் படமாக மாறி உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பிரம்மாண்ட படம்
இந்த படத்தில் அனன்யா பாண்டே, சார்மி கவுர், கரன் ஜோகர், அபூர்வா மேத்தா, ரம்யா கிருஷ்ணன், ரோஹித் ராய், விஷ்ணு ரெட்டி, அலி, மகரந்த் தேஷ் பாண்டே, கெட்அப் ஸ்ரீனு உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். போஸ்டர் மற்றும் வீடியோவை பார்க்கும் போதே லைகர் நிச்சயம் ஒரு பிரம்மாண்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டைசனின் ரசிகர்கள் உலகம் முழுவதும் இருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











