பிரபல இயக்குநர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது… நடந்தது என்ன ?
மும்பை : இயக்குநரும், நடிகருமான மகேஷ் மஞ்ச்ரேக்கர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாஸ்தவ் என்ற ஹிந்தி திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக அறிமுகமான இவர், அஸ்திதா, குருக்ஷேத்திர என்ற ஹிந்தி திரைப்படங்களை இயக்கி பிரபலமானார்.
ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, பெங்காலி என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மகேஷ் மஞ்ச்ரேக்கர்
இயக்குநராக மட்டும் இல்லாமல் பல படங்களில் நடித்துள்ளார். அஜித் நடித்த ஆரம்பம் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதேபோல சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் திரைப்படத்தில் கம்பேனி முதலாளியாக நடித்திருப்பார். இப்படி தமிழிலும் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

மராத்தி படம்
மகேஷ் மஞ்ச்ரேக்கர் தற்போது 'நய் வரன் பாட் லோன்சா கோன் நய் கோன்சா' என்ற மராத்தி திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் கடந்த மாதம் வெளியான நிலையில், இப்படத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களை ஆட்சேபகரமான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை எதிர்த்து ஷத்திரிய மராத்தா சேவா சன்ஸ்தா அமைப்பினர் பாந்த்ரா மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் இயக்குநர் மற்றும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மகேஷ் மஞ்ச்ரேக்கர் வழக்கு பதிவு
இதில், திரைப்பட தயாரிப்பாளர் மீது IPC பிரிவு 292, 34, POCSO பிரிவு 14 மற்றும் IT பிரிவு 67, 67B ஆகியவற்றின் கீழும், இயக்குனர் மகேஷ் மஞ்ச்ரேக்கர் மீது ஐபிசி பிரிவு 292, 34, போக்சோ பிரிவு 14 மற்றும் ஐடி பிரிவு 67, 67 பி ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ நீதிமன்றம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

பெண்களை மோசமாக சித்தரிக்கவில்லை
திரைப்படம் சட்ட சிக்கலில் சிக்கி உள்ளது குறித்து பேசிய மகேஷ் மஞ்ச்ரேக்கர், படம் தணிக்கை அதிகாரிகளால் தணிக்கை செய்யப்பட்டபோது அவர்கள் எந்த ஆட்சேபனைக்குரிய கருத்தையும் கூறவில்லை. இது வயது வந்தோருக்கான படம். பார்வையாளர்களை கவர வேண்டும் என்று நினைக்கவில்லை என்றும், பெண்களை மோசமாக சித்தரிக்கவில்லை என்றும் கூறினார். நான் இதுவரை 25 படங்களுக்கு மேல் தயாரித்துள்ளேன், பல வருடங்களுக்கு முன் நான் ரசித்த கதை இது. இது ஒரு பத்திரிகையாளரால் எழுதப்பட்டது, அதை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று தற்போது எடுத்துள்ளேன் என்று கூறினார்.

டிரெய்லர் நீக்கப்பட்டது
'நய் வரன் பாட் லோன்சா கோன் நய் கோன்சா' திரைப்படத்தின் டிரைலர் வெளியான போதே, பெண்கள் மற்றும் சிறுவர்கள் குறித்து ஆட்சேபகரமான காட்சிகள் டிரைலரில் இருப்பதாக கூறி பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர். தேசிய மகளிர் ஆணையமும் டிரைலருக்கு எதிராக கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து யூடியூபில் இருந்து டிரெய்லர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications