சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபர்.. கூலாக ஹெட் செட் வாங்குகிறாரே?.. வெளியான சிசிடிவி காட்சிகள்
மும்பை: பாலிவுட்டின் பிரபல ஹீரோக்களில் ஒருவரான சைஃப் அலிகானை ஒருவர் கத்தியால் குத்தியதுதான் கடந்த சில நாட்களாக இந்திய திரைத்துறையின் ஹெட்லைன்ஸாக இருக்கிறது. வீட்டுக்கு திருட வந்த அவரை தடுக்க முயன்றபோது சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து விழுந்தது. அதனையடுத்து லீலாவதி மருத்துவமனையில் வைத்து அறுவை சிகிச்சை நடந்தது. இந்தச் சூழலில் கத்தியால் குத்திய நபர் மொபைல் ஷாப் ஒன்றில் ஹெட்செட் வாங்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருக்கின்றன.
ஹிந்தி திரையுலகின் ஃபேமஸான ஹீரோக்களில் ஒருவர் சைஃப் அலிகான். ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்திருக்கும் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கடைசியாக அவர் ஆதிபுருஷ் மற்றும் தேவரா 1 ஆகிய படங்களில் நடித்தார். இரண்டு படங்களிலும் அவர் நெகட்டிவ் ரோல் ஏற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கும் முன்னதாக தமிழில் வெளியாகி மெகா ஹிட்டடித்திருந்த விக்ரம் வேதா படத்தின் ஹிந்தி ரீமேக்கில் கடந்த 2022ஆம் ஆண்டு நடித்திருந்தார். அடுத்ததாக Jewel Thief: The Red Sun Chapter என்ற படத்தில் நடித்துவருகிறார்.

கரீனா கபூருடன் திருமணம்: அவர் முதலில் அம்ரிதா சிங் என்பவரை திருமணம் செய்திருந்தார். சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்களுக்கு பிறந்தவர்தான் நடிகை சாரா அலிகான். அம்ரிதா சிங்கை பிரிந்த சைஃப் அலிகான் அடுத்ததாக கடந்த 2012ஆம் ஆண்டு நடிகை கரீனா கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். இருவரும் மிகுந்த காதலோடு தங்களது வாழ்க்கையினை நகர்த்திவருகிறார்கள். பாலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாகவும் திகழ்ந்துவருகிறார்கள்.
கத்திக்குத்து: சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு அதிகாலை 2.30 மணியளவில் பாந்த்ராவில் இருக்கும் சைஃப் அலிகானின் பங்களாவில் திருடுவதற்காக ஒரு நபர் வந்திருக்கிறார். அப்போது அவருடன் வாட்ச்மேன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது வந்த சத்தத்தை அடுத்து தூக்கத்திலிருந்து வந்த சைஃப் அலிகான் அந்த திருடனை தடுக்க முயன்றார். அந்த சமயத்தில் அந்தத் திருடன் தான் கொண்டு வந்திருந்த கத்தியால் சைஃபை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.
லீலாவதி மருத்துவமனையில்: ரத்த வெள்ளத்தில் இருந்த சைஃப் அலிகான் உடனடியாக அருகில் இருக்கும் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தார்கள். மொத்தம் ஆறு இடங்களில் கத்திக்குத்து இருந்ததாக மருத்துவர்கள் கூறினார்கள். மேலும் முதுகு தண்டு வடத்தில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. அவசர சிகிச்சை பிரிவிலிருந்து நார்மல் வார்டுக்கு அவர் மாற்றப்பட்டுவிட்டதாகவும்; மெதுவாக நடக்க ஆரம்பித்திருக்கிறார் என்றும் லீலாவதி மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.
சிசிடிவி காட்சிகள்: சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவரை கத்தியால் குத்திய நபரை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். இந்நிலையில் சைஃபை கத்தியால் குத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் நபர் மும்பையில் இருக்கும் ஒரு மொபைல் ஷாப்பில் ஹெட்செட் வாங்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருக்கின்றன. இதுகுறித்து அந்த மொபைல் ஷாப் ஓனரிடம் காவல் துறையினர் விசாரித்தனர்.
அதனையடுத்து பிடிஐ ஊடகத்திடம் பேசிய அந்த மொபைல் ஷாப் ஓனர், "அந்த நபர் எனது கடைக்கு வந்து 50 ரூபாய்க்கு ஒரு ஹெட் செட் வாங்கினார். 100 ரூபாய் கொடுத்தார். மீதம் 50 ரூபாயை நான் கொடுத்தேன். அதனையடுத்து அவர் சென்றுவிட்டார். அந்த நபர் குறித்து நேற்று காவல் துறையினர் வந்து என்னிடம் விசாரித்தார்கள். சிசிடிவி ஃபுட்டேஜுகளையும் எடுத்து சென்றனர். அந்த நபர் என்ன செய்தார் என்பதெல்லாம் எனக்கு தெரியாது" என்றார்.


Click it and Unblock the Notifications











