கொடுமையான செய்தி.. இர்ஃபான் கான் மரணத்தால் அதிர்ச்சியில் உறைந்த பிரபலங்கள்.. கலங்கும் இந்திய சினிமா!
சென்னை: பிரபல நடிகர் இர்ஃபான் கானின் மரண செய்தியை கேட்டு ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. சினிமா பிரபலங்கள் பலரும் இர்ஃபான் கானின் மறைவுக்கு பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
நேற்று திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இர்ஃபான் கான், மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பெருங்குடல் தொற்று காரணமாக தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இர்ஃபான் கான் இன்று மரணமடைந்தார்.

அதிர்ச்சியில் இந்திய சினிமா
பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் ஏராளமான படங்கில் நடித்துள்ள இர்ஃபான் கான், தேசிய விருதுகள், பிலிம் ஃபேர் விருதுகள், இன்டர்நேஷனல் விருதுகள் என பல விருதுகளை குவித்திருக்கிறார். இந்நிலையில் இர்ஃபான் கானின் மறைவு செய்தி ஒட்டு மொத்த இந்திய சினிமாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் அக்ஷய் குமார்
அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர். நடிகர் அக்ஷய்குமார் பதிவிட்டுள்ள டிவிட்டில் இது ஒரு கொடுமையான செய்தி... நம் காலத்தின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான இர்ஃபான்கானின் மறைவைப் பற்றி கேட்டு பெரும் துக்கமடைகிறேன். இந்த கடினமான நேரத்தில் கடவுள் அவரது குடும்பத்திற்கு பலத்தை கொடுக்கட்டும் என பதிவிட்டுள்ளர்.

கங்கனா ரனாவத்
நடிகை கங்கனா ரனாவத் பதிவிட்டுள்ள டிவிட்டில்,
"இந்த நாள் ஒரு இருண்ட அமைதியற்ற கடுமையான உணர்ச்சியாக வந்துள்ளது. இர்பான் கான் ஒரு சிறந்த கலைஞர், அவர் டிவி சோப்பு விளம்பரங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடிப்பதில் இருந்து அகாடமி விருது பெற்ற படங்களில் ஒரு முன்னணி நடிகராக வரும் அளவுக்கு உயர்ந்துள்ளார். அவரது மறைவால் என் இதயம் மிகவும் கலங்கி போயிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

கியாரா அத்வானி
நடிகை கியாரா அத்வானி பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில் புரட்சிகர நடிப்பால் நம் தலைமுறை உலகை ஊக்கப்படுத்திய நடிகர். இதயத்தை நொறுக்கும் இழப்பு. உங்களின் குடும்பத்திற்கு பலம் கிடைக்க பிரார்த்திக்கிறோம். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் இர்ஃபான் சார் என பதிவிட்டுள்ளார்.

நடிகை ஹன்சிகா
நடிகை ஹன்சிகா மோத்வானி பதிவிட்டுள்ள டிவிட்டில்
இதயத்தை நொறுக்கும் செய்தி, ஒரு நம்பமுடியாத பாரம்பரிய கலைஞர்.. சீக்கிரம் சென்றுவிட்டார். அவர் எனக்கும் என்னை போன்ற பலருக்கும் ஒரு உத்வேகம் அளித்தார். சினிமா மற்றும் கலைத்துறைக்கு ஒரு பெரிய இழப்பு. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.

போனி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,
மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரை இழந்துவிட்டோம். அவர் கடைசி வரை போராடினார். இர்பான் கான் நீங்கள் எப்போதும் மிஸ் செய்யப்படுவீர்கள். அரகூது குடும்பத்திற்கு இரங்கல் என பதிவிட்டுள்ளார்.

அஜய் தேவ்கன்
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் பதிவிட்டுள்ள டிவிட்டில்.
இர்ஃபானின் அகால மரணம் பற்றி கேட்டதும் மனம் உடைந்துவிட்டது. இது இந்திய சினிமாவுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரது மனைவி மற்றும் மகன்களுக்கு ஆழ்ந்த இரங்கல். உங்கள் ஆன்மா ஓய்வெடுக்கட்டும் இர்ஃபான் என பதிவிட்டுள்ளார்.

கோடிக்கணக்கான ரசிகர்கள்
இயக்குநர் ஷங்கர் மிஸ் யு டியர் பிரண்ட் என இர்ஃபான் கானின் போட்டோவை ஷேர் செய்திருக்கிறார். இர்பான் கான் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் மட்டுமின்றி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி என இந்திய சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள இர்ஃபானின் இறுதிச்சடங்கு ஊரடங்கால் மிக எளிமையாக நடைபெறும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











