அய்யய்யோ இது என்ன சோதனை.. கங்கனா ரணாவத்தை ஓங்கி அறைந்த அதிகாரி?.. என்ன நடந்தது?..பரபர தகவல்கள்
மும்பை: கங்கனா ரணாவத் இந்திய அளவில் புகழ் அடைந்தவர். பல படங்களில் நடித்திருக்கும் அவருக்கென்று ஏகப்பட்ட பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு புகழ் அடைந்திருக்கிறாரோ அதே அளவு சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்திக்கக்கூடியவர் அவர். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தச் சூழலில் அவரை சண்டிகர் விமான நிலையத்தில் வைத்து பெண் அதிகாரி ஒருவர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பாலிவுட் பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை கங்கனா ரணாவத். தனது மனதில் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் பேசுவது அவரது இயல்பு. இதனால் அவர் ஆதரவையும், எதிர்ப்பையும் சமமாகவே சம்பாதித்திருக்கிறார். 2006ஆம் ஆண்டு திரையுலகில் கேங்ஸ்டர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிய முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். தேசிய விருதுகளையும் வென்றிருக்கிறார் கங்கனா ரணாவத்.

தமிழில் என் ட்ரி: சூழல் இப்படி இருக்க அவர் தமிழிலும் எண்ட்ரி கொடுத்தார். ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தின் மூலம் அறிமுகமானார் கங்கனா. அந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. பிறகு பாலிவுட்டில் கவனம் செலுத்திவந்த அவர் தலைவி படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். அந்தப் படமும் காலை வாரியது. அதன் பிறகு சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தார். ஆனால் அதுவும் அவர் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
ஓபன் கங்கனா: கங்கனா ரணாவத் தனது மனதில் பட்டதை அப்படியே பேசக்கூடியவர். மேலும் பாஜகவின் தீவிர ஆதரவாளராகவும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். அவர் ஓபனாக பேசுவது அவருக்கு எதிராகவே பல சமயங்கள் திரும்பியிருக்கின்றன. டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம், போராட்டம் நடத்தியவர்களை காலிஸ்தானிகள் என்று பல முறை சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருக்கிறார். இதனால் அவர் பலத்த கண்டனங்களையும் சந்தித்திருக்கிறார்.
தேர்தலில் வெற்றி: கங்கனா தொடர்ந்து ஆதரவு அளித்து வந்ததை அடுத்து அவர் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு கொடுத்தது. அதன்படி இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் மண்டி தொகுதியில் போட்டியிட்டார் அவர். தீவிரமாக பரப்புரை மேற்கொண்ட அவர் அப்போதும் சர்ச்சைக்குரிய வகையிலேயே பேசியிருந்தது கவனிக்கத்தக்கது. இருந்தாலும் அவர் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இப்போது எம்.பியாகிவிட்டதால் அவர் மீண்டும் நடிப்பதற்கு வாய்ப்புகள் குறைவு என்றே கருதப்படுகிறது.
அறை வாங்கிய கங்கனா: இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் டெல்லி செல்வதற்காக சண்டிகர் விமான நிலையத்துக்கு கங்கனா ரணாவத் வந்திருந்தார். அப்போது விமான நிலையத்தில் பணியில் இருந்த CISF பெண் அதிகாரி குல்விந்தர் கவுர் என்பவர் கங்கனா ரணாவத்தின் கன்னத்திலேயே பளார் என்று ஓங்கி அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கங்கனா செய்வதறியாது திகைத்து நின்றதாகவும்; பிறகு அந்த பெண் அதிகாரி மீது புகார் கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தியதற்காக குல்விந்தர் கவுர் கங்கனா ரணாவத்தை அறைந்ததாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











