க்ரைம் படத்தைவிட வேற லெவல் ட்விஸ்ட்..சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டவர் இல்லையா?
மும்பை: நடிகர் சைஃப் அலிகானை சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் அவரது வீட்டில் வைத்து ஒருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றார். அதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சைஃப்புக்கு அறுவை சிகிச்சையும், மற்ற சிகிச்சைகளும் செய்யப்பட்டது. நலமுடன் வீடு திரும்பிய அவர் தற்போது ஓய்வில் இருக்கிறார். இதற்கிடையே அவரை கத்தியால் குத்தியது விஜய் தாஸ் என்பவர்தான் என்று சொல்லி அவரை காவல் துறையினர் கைது செய்த சூழலில் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
பாலிவுட்டின் ஃபேமஸ் நடிகர்களில் ஒருவர் சைஃப் அலிகான். அவர் முதலில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு அவரை விவாகரத்து செய்தார். 10 வருடங்கள்வரை ஒன்றாக வாழ்ந்த அவர்களுக்கு சாரா அலிகான் பிறந்தார். அவரும் பாலிவுட்டில் இப்போது குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். முதல் மனைவியை பிரிந்த சைஃப் அலிகான் அடுத்ததாக நடிகை கரீனா கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

கத்திக்குத்து: கரீனா கபூரும், சைஃப் அலிகானும் தனது மகன்களுடன் மும்பை பாந்த்ராவில் இருக்கும் தங்களது சொகுசு பங்களாவில் வாழ்ந்துவருகிறார்கள். நிம்மதியாக வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்த அவர்களுக்கு கடந்த வாரம் பெரும் விபரீதம் நடந்தது. அவர்களது பங்களாவுக்கு ஒருவர் நள்ளிரவில் திருடுவதற்காக வந்தார். அப்போது அவரை கவனித்துவிட்ட காவலாளி அவரிடம் யார் என்ன என்று விசாரித்தார். அந்த சத்தத்தை கேட்ட சைஃப் வெளியே வந்து அந்த திருடனை தடுத்து நிறுத்த முயற்சித்தபோது கத்தியால் குத்தப்பட்டார்.
மருத்துவமனைக்கு சென்ற சைஃப்: மொத்தம் ஆறு இடங்களில் அவருக்கு கத்திக்குத்து விழுந்தது. பிறகு ரத்த வெள்ளத்தோடு ஒரு ஆட்டோவில் அருகில் இருக்கும் லீலாவதி மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆனார். அங்கு அவருக்கு நரம்பியல் மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவரது கழுத்தில் காயம் கொஞ்சம் பலமாக இருந்ததாகவும் மருத்துவர் ஒருவர் தெரிவித்தார். ஒருவழியாக அவருக்கு தேவையான சிகிச்சைகள் அனைத்தும் முடிந்து நார்மல் வார்டுக்கு மாற்றினார்கள்.
வீடு திரும்பிய ஹீரோ: சில நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர் சமீபத்தில் வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்த அவரை காண்பதற்கு ரசிகர்கள் குழுமினர். அவர்களை பார்த்து கைகளை அசைத்துவிட்டு உள்ளே சென்றார். தற்போது வீட்டில் முழு ஓய்வில் இருக்கிறார் அவர். சைஃப் அலிகான் நலமாக வீடு திரும்பியது அவரது ரசிகர்களிடையேயும், பாலிவுட் திரையுலகினரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே அவரை கத்தியால் குத்தியவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தார்கள்.
கை ரேகை மேட்ச் ஆகவில்லை: காவல் துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மும்பையில் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு பின்னால் வைத்து விஜய் தாஸ் என்பவரை கைது செய்தது போலீஸ். இவர்தான் சைஃப்பை கத்தியால் குத்தினார் என்றும் காவல் துறையினர் கூறினர். ஆனால் தற்போது இந்த விவகாரத்தில் புதிய ட்விஸ்ட் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, விஜய் தாஸின் கை ரேகையும், சைஃப் அலிகானின் வீட்டில் இருந்த கை ரேகையும் ஒத்துப்போகவில்லை என்று தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியிருக்கின்றன. இதனை கேள்விப்பட்ட ரசிகர்களோ காவல் துறையினர் உண்மையான குற்றவாளியை கைது செய்யவில்லையா என்று கேள்விகள் எழுப்பிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











