'அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை..' 'தோனி' பட ஹீரோ தற்கொலை..சோகத்தில் தவிக்கும் பாலிவுட்!
மும்பை: பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ரஜ்புத் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
கை போ சே என்ற இந்தி படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இது, சேதன் பகத் எழுதிய, த 3 மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப் என்ற நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட படம்.
இதையடுத்து சுத் தேஸி ரொமான்ஸ், ஆமீர்கானின் பிகே ஆகிய படங்களில் நடித்தார்.

லாக்டவுன்
கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை கதையான எம்.எஸ்.தோனி: அன்டோல்ட் ஸ்டோரி படத்தின் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்தப் படத்தை அடுத்து ராப்தா, வெல்கம் நியூயார்க், கேதார்நாத், டிரைவ் ஆகிய படங்களில் நடித்தார். அடுத்து தில் பெச்சாரே என்ற படத்தில் நடித்துவந்தார். லாக்டவுன் காரணமாக இதன் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.

தூக்குப் போட்டு
இந்நிலையில் மும்பையில் சுஷாந்தின் மானேஜர் திஷா சாலியன் தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் 14 வது மாடி கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து கடந்த திங்கட்கிழமை தற்கொலை செய்துகொண்டார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார்.

பாலிவுட் அதிர்ச்சி
அதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இது பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பாலிவுட்டுக்கு இது மோசமான காலம் போல் இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி பிரபல நடிகர் இர்பான் கான் மரணமடைந்தார். அதற்கு அடுத்த நாளே, பிரபல நடிகர் ரிஷி கபூர் இறந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் இளம் இசை அமைப்பாளர் வாஜித் கான் மரணமடைந்தார்.

அக்ஷய்குமார்
இப்போது சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துள்ளார். இதையடுத்து பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அக்ஷய்குமார் வெளியிட்டுள்ள இரங்கலில், 'இந்த செய்தி அதிர்ச்சி அளித்துள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த சிச்சோர் படத்தை பார்த்துவிட்டு அதன் தயாரிப்பாளரான எனது நண்பர் சஜித்திடம் இந்தப் படத்தை எவ்வளவு ரசித்தேன் என்று சொன்னதும் எனக்கு நினைவிருக்கிறது.

ராம் கோபால் வர்மா
திறமையான நடிகர். கடவுள் அவர் குடும்பத்துக்கு வலிமையை கொடுக்கட்டும் என்று கூறியுள்ளார். இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில், பாலிவுட்டில் இதுவரை கண்டிராத அதிர்ச்சியான விஷயமாக இது இருக்கிறது. இளம் நடிகர், இன்னும் வாழ்க்கை இருக்கிறது.. பிறகு ஏன் இப்படி? என்று கேட்டுள்ளார்.

நவாஸூதின் சித்திக்
நடிகர் துல்கர் சல்மான், 'இந்த செய்தியை கேட்டு மனம் உடைந்துவிட்டேன். நான் தனிப்பட்ட முறையில் சந்தித்த அல்லது அறிந்த ஒருவர் அல்ல என்றாலும் உண்மையிலேயே பாதிக்கிறது. திறமையான நடிகர் அவர்' என்று தெரிவித்துள்ளார். நடிகர் நவாஸூதின் சித்திக், 'என்னால் நம்ப முடியவில்லை. அதிர்ச்சியாக இருக்கிறது. அழகான நடிகர், நல்ல நண்பர். அவர் இறப்பு வருத்தத்தை அளிக்கிறது' என்று தெரிவித்துள்ளார்.

அபிஷேக் பச்சன்
நடிகை ரவீணா டாண்டன், 'இந்த செய்தியை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். திறமையான இளம் நடிகர், அவர் செல்ல வேண்டிய தூரம் இன்னும் இருக்கும் நிலையில் இப்படியொரு நிலை'என்று கூறியுள்ளார். நடிகர் அபிஷேக் பச்சன், இது ஷாக்கிங்காக இருக்கிறது. திறமையான நடிகர் என்று தெரிவித்துள்ளார். இவரைப் போல பல முன்னணி நடிகர், நடிகைகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











