Bholaa Trailer.. வெளியானது கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் ட்ரெய்லர்
மும்பை: தமிழில் கார்த்தி நடிப்பில் உருவான கைதி படத்தின் ஹிந்தி ரீமேக்கான போலா படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது.
வங்கியில் வேலை செய்துகொண்டிருந்த லோகேஷ் கனகராஜ் சினிமா மீது இருக்கும் ஆர்வத்தால் அந்த வேலையை உதறிவிட்டு திரைத்துறைக்குள் நுழைந்தார். யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல் களம் என்ற குறும்படத்தை எடுத்துவிட்டு மாநகரம் என்ற திரைப்படத்தை இயக்கினார். முதல் படத்திலேயே லோகேஷ் கனகராஜ் பலரது கவனத்தை ஈர்த்தார்.

இரண்டாவது படத்தில் அரெஸ்ட் செய்த லோகேஷ் கனகராஜ்
முதல் படம் பெற்ற வரவேற்பு கொடுத்த நம்பிக்கையில் இரண்டாவது படமாக கைதி படத்தை இயக்கினார். இந்தப் படத்தை முதலில் மன்சூர் அலிகானை வைத்து இயக்குவதாக இருந்தது. ஆனால் கதையை கேட்ட தயாரிப்பு தரப்பு இந்தக் கதையை பெரிய ஸ்டாரை வைத்து இயக்கினால் நன்றாக இருக்கும் என கூற கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். படத்தில் கார்த்தியுடன் நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

மெகா ஹிட்டான கைதி
ஒரு இரவில் நடக்கும் கதையாக கைதி படத்தை உருவாக்கியிருந்தார் லோகேஷ். படத்தின் மேக்கிங்கும், அளவான ஆகஷனும் கைதி படத்தை மெகா ஹிட்டாக்கியது. இந்தப் படத்துக்கு பிறகுதான் லோகேஷ் கனகராஜின் கேரியர் கிராஃப் உச்சம் சென்றது. தொடர்ந்து மாஸ்டர், விக்ரம் என படங்களை இயக்கிய லோகேஷ் தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிவருகிறார்.

ஹிந்தியில் ரீமேக்காகும் கைதி
கைதி படம் பலருக்கும் பிடித்துப்போக இந்தப் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய அஜய் தேவ்கன் முடிவு செய்தார். இதனையடுத்து தமிழில் கைதி படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் அஜய் தேவ்கன் ஃபிலிம்ஸுடன் இணைந்து ஹிந்தியில் தயாரிக்கிறது. படத்துக்கு போலா என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் தபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

விமர்சனங்களை சந்தித்த போலா பட டீசர்
தமிழில் மெகா ஹிட்டான படம் என்பதால் ஹிந்தியில் இதன் மேக்கிங் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத வகையில்தான் படத்தின் டீசர் இருந்ததாக பெரும்பாலானோர் தெரிவித்தனர். மேலும் கைதி படத்தில் பாடல்களே இல்லாத சூழலில் போலாவில் ஒரு ஐட்டம் சாங் இடம்பெற்றிருப்பது டீசரில் உறுதியானது. இதனால் தமிழ் ரசிகர்கள் போலா டீசரை கடுமையாகவே விமர்சித்தனர்.
வெளியானது போலா படத்தின் ட்ரெய்லர்
இந்நிலையில் போலா படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது. படத்தில் ஆக்ஷன் காட்சிகளும், பைக் ஸ்டண்ட்களும் ஓவர் டோஸாக இருப்பது ட்ரெய்லர் மூலம் தெரியவருகிறது. போலா படத்தின் ட்ரெயலரை பார்த்த ரசிகர்கள் டீசருக்கும் ட்ரெய்லருக்கும் பெரிதாக ஒன்றும் வித்தியாசம் இல்லை. கைதி படம் மிகவும் எதார்த்தமாக இருக்கும். ஆனால் போலா படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போதே; இந்தப் படம் எதார்த்ததிற்கு அருகில் வராது என்பது உறுதியாகியிருப்பதாக கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











