twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹாலிவுட் வரை அசத்திய இந்தியன்.. இவ்வளவு சீக்கிரம் இறப்பார் என எண்ணவில்லை.. இணையில்லா இர்ஃபான் கான்!

    |

    மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள செய்தி ஒட்டுமொத்த திரையுலகையே அதிர செய்துள்ளது.

    Recommended Video

    Shocking: Actor Irfaan Khan Passed Away | Slum Dog Millionaire | Life of Pi

    தூர்தர்ஷனில் வெளியான சந்திரகாந்தா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து, படிப்படியாக பாலிவுட் நடிகராக வளர்ந்து ஹாலிவுட் வரை இந்தியர்களின் புகழை உயர்த்தியவர்.

    பிரபல நடிகர் இர்ஃபான் கான் திடீர் மரணம்: சிகிச்சை பலனின்றி உயிர்பிரிந்தது.. ரசிகர்கள் அதிர்ச்சிபிரபல நடிகர் இர்ஃபான் கான் திடீர் மரணம்: சிகிச்சை பலனின்றி உயிர்பிரிந்தது.. ரசிகர்கள் அதிர்ச்சி

    புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக லண்டனில் சிகிச்சைப் பெற்று திரும்பி வந்த இர்ஃபான் கான் கடைசியாக ஆங்கிரேஸி மீடியம் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஜெய்ப்பூரில் பிறந்தார்

    ஜெய்ப்பூரில் பிறந்தார்

    டயர் வியாபாரம் செய்து வந்த ஜாகிர்தார் கான் மற்றும் பேகன் கான் தம்பதியினருக்கு மகனாக ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் கடந்த 1966ம் ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி பிறந்தார் நடிகர் இர்ஃபான் கான். குடும்ப சூழ்நிலை காரணமாக டிவி தொடர்களில் நடிக்கத் தொடங்கிய இர்ஃபான் கான் இந்தியாவின் சிறந்த நடிகராக வலம் வந்தார்.

    கிரிக்கெட் வீரர்

    கிரிக்கெட் வீரர்

    வசதியான குடும்பத்தில் இர்ஃபான் கான் பிறந்திருந்தால், சிறந்த கிரிக்கெட் வீரராகவும் ஆகியிருப்பார். தனது 23 வயது வரை பல உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார் இர்ஃபான் கான். இர்ஃபான் கான் மற்றும் அவரது நண்பரான சதீஷ் சர்மா கிரிக்கெட்டில் சிறந்து விளங்கினாலும், அடுத்தடுத்த போட்டிகளுக்கும் பயிற்சிகளுக்கும் செல்லும் அளவுக்கு பணமில்லாததால் கிரிக்கெட்டை இர்ஃபான் கை விட்டார்.

    சின்னத்திரை

    சின்னத்திரை

    ஷாருக்கான், மாதவனை போல இர்ஃபான் கானும் சின்னத்திரை நடிகராக இருந்து தான் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக மாறினார். சாணக்யா, பாரத் ஏக் கோஜ், சந்திரகாந்தா, ஸ்ரீகாந்த், அனுகூன்ஜ் உள்ளிட்ட தூர்தர்ஷன் தொடர்களிலும் நடித்துள்ளார் இர்ஃபான். ஸ்டார் பிளஸ்ஸில் ஒளிபரப்பான பிரபல 'தர்' சீரியலில் மிரட்டல் வில்லனாக நடித்து அசத்திய பின்னர் தான் பாலிவுட் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின.

    பாலிவுட் ஹீரோ

    பாலிவுட் ஹீரோ

    1988ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட சலாம் பாம்பே படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் இர்ஃபான் கான். தொடர்ந்து பல சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த இர்ஃபான் கான் தனது அசத்தலான நடிப்பால், முன்னணி நடிகராக பல படங்களில் நடிக்கத் தொடங்கினார். பான் சிங் தோமர், மதாரி, கார்வன், பிகு, லஞ்ச் பாக்ஸ் உள்ளிட்ட படங்கள் இர்ஃபான் கான் பெயரை திரையுலகம் உள்ளவரை நிலைத்திருக்கச் செய்யும்.

    ஸ்லம் டாக் மில்லியனர்

    ஸ்லம் டாக் மில்லியனர்

    கடந்த 2008ம் ஆண்டு ஹாலிவுட் இயக்குநர் டேனி பாயல் இயக்கத்தில் இந்தியாவை பின்னணியாகக் கொண்டு உருவான ஸ்லம் டாக் மில்லியனர் படத்தில் போலீஸ் அதிகாரியாக இர்ஃபான் கான் நடித்திருப்பார். இர்ஃபான் கானின் மெச்சூரிட்டியான நடிப்பு, அவருக்கு தொடர்ந்து பல ஹாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை அள்ளி வழங்கியது.

    லைஃப் ஆஃப் பை

    லைஃப் ஆஃப் பை

    பாலிவுட்டில் சிறந்த நடிகராக விளங்கிய இர்ஃபான் கானுக்கு கடந்த 2012ம் ஆண்டு ஹாலிவுட் படமான லைஃப் ஆஃப் பை படத்தில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் ஆங் லீ இயக்கத்தில் வெளியாகி ஆஸ்கர் விருதுகளை அள்ளிய லைஃப் ஆஃப் பை படத்தில் நடித்ததன் மூலம் இர்ஃபான் கான் உலகளவில் ஃபேமஸ் ஆனார்.

    ஹாலிவுட்டில் கலக்கல்

    ஹாலிவுட்டில் கலக்கல்

    ஆஸ்கர் விருதுகளை அள்ளி குவித்த ஸ்லம் டாக் மில்லியனர், லைஃப் ஆஃப் பை படங்களில் நடித்த இர்ஃபான் கானுக்கு தொடர்ந்து பல ஹாலிவுட் வாய்ப்புகள் கதவை தட்டின. 2015ம் ஆண்டு வெளியான ஜுராசிக் வேர்ல்ட் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பினன்ர், டேவின்சி கோட் வரிசை படமான டாம் ஹேங்க்ஸ் நடிப்பில் வெளியான இன்ஃபெர்னோ படத்திலும் இர்ஃபான் நடித்திருந்தார்.

    தேசிய விருது

    தேசிய விருது

    கடந்த 2013ம் ஆண்டு பான் சிங் தோமர் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது இர்ஃபான் கானுக்கு வழங்கப்பட்டது. ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு விருது கொடுக்கப்பட்டது. லஞ்ச் பாக்ஸ் திரைப்படத்திற்காக ஆசியாவின் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. 2011ம் ஆண்டு பத்மஸ்ரீ கெளரவமும் இர்ஃபான் கானுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இணையில்லா இர்ஃபான் கான்

    இணையில்லா இர்ஃபான் கான்

    பாலிவுட்டின் முன்னணி கான் நடிகர்களுக்கு தனது நடிப்பால் டஃப் கொடுத்து உலகளவில் இந்திய சினிமாவில் புகழை ஓங்கி ஒலிக்கச் செய்த நடிகர் இர்ஃபான் கான் கடந்த இரு ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, லண்டனில் சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் அவரது தாய் ஜெய்ப்பூரில் மரணமடைந்த நிலையில் அவரை காண முடியாத துயரத்தில் இருந்த இர்ஃபான் கான் நேற்று திடீரென உடல் நலக் குறைவால் மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி இர்ஃபான் கான் மரணமுற்ற செய்தி சினிமா உலகையே உலுக்கி போட்டு இருக்கிறது.

    English summary
    Acclaimed actor Irrfan Khan has died after a two-year battle with neuroendocrine tumour. The news of his death was first shared by filmmaker Shoojit Sircar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X