சுதா சந்திரனுக்கு ஆதரவாக… பிரதமரிடம் கோரிக்கை வைத்த கங்கனா ரணாவத்!
மும்பை : பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், சுதா சந்திரனுக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்
சுதா சந்திரனின் கருத்துக்கு சமூகவலைத்தளத்தில் நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.
மத்திய பாதுகாப்புப் படையும், சுதா சந்திரனுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு மன்னிப்புக் கோரியது.

சுதா சந்திரன்
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த நடிகை சுதா சந்திரன் கடந்த 1981 ஆம் ஆண்டு திருச்சி அருகே விபத்தில் சிக்கி தனது காலை இழந்தார். இதனால், அவர் செயற்கை கால் பொருத்தியுள்ளார்.

துவண்டு போகாமல்
தனக்கு நேர்ந்த பெரிய விபத்தால் சிறிதும் துவண்டு போகாமல், தமிழ்,இந்தி, சீரியல்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருவதோடு நடன நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறார். இவர் நடிப்பில் வெளியான 'நாகினி' சீரியல் சூப்பர் ஹிட் அடித்தது.

அடையாள அட்டை
நடிகை சுதாசந்திரன், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விமான நிலையங்களில் தனக்கு நேர்ந்த துயரம் குறித்து ஒரு வீடியோவை பகிர்ந்து இருந்தார். அதில். பாதுகாப்பு சோதனைகளுக்காக எப்போதும் எனது செயற்கை கால் விமான நிலைய அதிகாரிகளால் அகற்றப்படுவது அவமானமாகவும் வேதனையாகவும் உள்ளது. எனது செயற்கை காலுடனேயே பல நாடுகளிலும் நடனமாடி நாட்டை பெருமைப்படுத்துகிறேன். வயதானவர்களுக்கு இருப்பதைப்போல எங்களுக்கும் ஒரு அட்டைக் கொடுங்கள் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

மன்னிப்பு
மத்திய பாதுகாப்புப் படை, சுதா சந்திரனுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு மன்னிப்புக் கோரி இருந்தது. குறிப்பிட்ட சில சமயங்களில் மட்டுமே பிராஸ்தடிக்ஸ் பாகங்களை நீக்கிப் பரிசோதிக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை. எந்தப் பயணிக்கும் அசவுகரியம் ஏற்படாது இருக்க ஊழியர்களுக்கு எங்கள் விதிமுறைகள் குறித்து மீண்டும் விளக்குவோம்' என்று மத்திய பாதுகாப்புப் படை கூறியிருந்தது.

உரிய மரியாதை
சுதா சந்திரனின் கருத்துக்கு சமூகவலைத்தளத்தில் ஆதரவு பெருகி வரும் நிலையில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சுதா சந்திரனின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த கங்கனா, சுதா ஜி ஒரு மூத்த கலைஞர்.. ஒரு சிறந்த நடனக் கலைஞர் மற்றும் நடிகர். அவர் காலை இழந்திருந்தாலும், நடனத் துறையில் அவர் மிக உயர்ந்த நிலையை அடைந்துள்ளார் ... அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











