Pariyerum Perumal Hindi Remake - அய்யய்யோ அடுத்து பரியேறும் பெருமாள் ஹிந்தி ரீமேக்கா?.. ரசிகர்கள் அச்சம்
சென்னை: Pariyerum Perumal Hindi Remake (பரியேறும் பெருமாள் ஹிந்தி ரீமேக்) மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் ராமிடம் அலுவலக உதவியாளராக இருந்து பின்னர் அவரிடம் உதவி இயக்குநராக மாறியவர் மாரி செல்வராஜ். அதுமட்டுமின்றி தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் உள்ளிட்ட புத்தகங்களை எழுதி எழுத்தாளராகவும் ஜொலித்தவர். அதுமட்டுமின்றி ராம் இயக்கிய கற்றது தமிழ் படத்தில் ஒரு காட்சியிலும் நடித்திருக்கிறார். ராமுக்கு மிக மிக நெருக்கமானவரும் மாரி செல்வராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

பரியேறும் பெருமாள்: பல வருடங்கள் ராமிடம் உதவி இயக்குநராக இருந்து பரியேறும் பெருமள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மாரி செல்வராஜ். கதிர், யோகி பாபு, கயல் ஆனந்தி, மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. காதலையும், அதன் ஊடாக நடக்கும் சாதிய அட்டூழியங்களையும் பொட்டில் அடித்தாற்போல் படம் பேசியிருந்தது.
கவனம் ஈர்த்த மாரி செல்வராஜ்: படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் படத்திலேயே மாரி செல்வராஜ் தான் எவ்வளவு தேர்ந்த படைப்பாளி என்பதை நிரூபித்துவிட்டார் என்றும், சென்சிட்டிவ் விஷயத்தை தொட்டு அதை மிக நேர்த்தியாக படைத்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர். குறிப்பாக அந்தப் படம் முடியும்போது அவர் வைத்த க்ளைமேக்ஸ் ஷாட் படம் வெளியானபோது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று மாரி செல்வராஜ் மீது பலரது கவனத்தை திருப்பியது.

கர்ணன் மாரி: முதல் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். கொடியங்குளத்தில் எளிய மக்கள் மீது அதிகாரவர்க்கத்தினர் நடத்திய அராஜகத்தை மையமாக வைத்து உருவாகியிருந்த அந்தப் படம் ஹிட்டானாலும் பரியேறும் பெருமாளில் இருந்த அடர்த்தி இந்தப் படத்தில் இல்லை என்ற விமர்சனத்தையும் சந்தித்தது. அப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். இருப்பினும் இரண்டு படங்களிலேயே மாரி செல்வராஜ் முன்னணி இயக்குநராகிவிட்டார்.
பரியேறும் பெருமாள் ஹிந்தி ரீமேக்: இந்நிலையில் மாரி செல்வராஜின் மாஸ்டர் பீஸான பரியேறும் பெருமாள் படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான உரிமையை பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் பெற்றிருப்பதாகவும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் அச்சம்: இந்தத் தகவல் வெளியானதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் ஒரு அச்சம் தொற்றிக்கொண்டிருக்கிறது. அதாவது கைதி படத்தையும், வீரம் படத்தையும் ஹிந்தியில் ரீமேக் செய்து பாலிவுட்டினர் சொதப்பி வைத்திருந்தனர். எனவே மாஸ்டர் பீஸான பரியேறும் பெருமாளையும் ரீமேக் செய்கிறேன் என்கிற பெயரில் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறார்களோ என்ற ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்திவருகின்றனர்.
மாமன்னன் மாரி செல்வராஜ்: மாரி செல்வராஜ் தற்போது உதயநிதியை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார். அதற்கு அடுத்ததாக வாழை என்ற படத்தை தயாரித்து இயக்குகிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு மீண்டும் தனுஷுடன் இணையவிருக்கிறார். அதுதொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











