தீபிகா நல்லா இருக்காங்க.. படப்பிடிப்பு நிறுத்தப்படவில்லை.. எல்லாமே வதந்தி.. தயாரிப்பாளர் விளக்கம்!
சென்னை : தீபிகா படுகோன் உடல்நல பாதிப்பால் ப்ராஜெக்ட் கே படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக பரவிவரும் வதந்திக்கு தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 'கோச்சடையான்' திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். கை நிறைய படங்களுடன் பாலிவுட்டில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.

தீபிகா படுகோன்
தீபிகா படுகோன் இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். இவருடைய நடிப்புக்கு மட்டுமல்ல, இவரின் மந்திர சிரிப்பும் மயக்கும் அழகுக்கும் தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. நடிகை தீபிகா பத்மாவதி திரைப்படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த பிரபல நடிகர் ரன்வீர் சிங்கை 2018ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

உடல்நலம் பாதிப்பு
ப்ராஜெக்ட் கே திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட தீபிகாவுக்கு கடந்த இரு நாட்களுக்கு முன் லேசான உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அருகில் உள்ள 'காமினேனி' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திடீரென அதிகரித்த பீபி
அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதன் பின்பு, உடல்நலம் சரியானது. இதனையடுத்து, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நடிகை தீபிகா அங்குள்ள நோவேட்டல் ஓட்டலில் ஓய்வெடுத்தார். ஆனால், தீபிகாவுக்கு உடல் நலம் சரி இல்லாததால், ப்ராஜெக்ட் கே திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுவிட்டதாக செய்திகள் வந்தன.

எல்லாம் வதந்தி
இந்நிலையில், ப்ராஜெக்ட் கே திரைப்படத்தின் தயாரிப்பாளர் அஸ்வினி தத் பரவி வரும் வதந்திக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், ரத்த அழுத்தம் ஏற்பட்டதால், தீபிகா படுகோன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல் நிலை இப்போது நன்றாக இருக்கிறது. அமிதாப்பச்சன் மற்றும் தீபிகா நடிக்கும் காட்சிகள் இப்போது படமாக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக பரவும் செய்திகள் அனைத்தும் வதந்தி என்றும் தீபிகா தற்போது நன்றாக இருக்கிறார் என்றும் கூறினார்.

Project K படத்தில்
ப்ராஜெக்ட் கே படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் பாகுபலி புகழ் பிரபாசுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்து வருகிறார். இப்படத்தினை வைஜயந்தி மூவிஸ் தயாரிக்கின்றனர், இந்த படத்தினை நாக் அஷ்வின் இயக்குகிறார். இது தவிர, ஷாருக்கானின் பதான் மற்றும் ஹிருத்திக் ரோஷனின் ஃபைட்டர் உள்ளிட்ட திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு தீபிகா படுகோனா பிஸியாக நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











