800 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணா.. ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி சம்பளம் இத்தனை கோடியா?
மும்பை: நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் மற்றும் சன்னி தியோல் என முன்னணி நடிகர்கள் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் ராமாயணா திரைப்படத்துக்காக நடிகர்கள் வாங்கும் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
சுமார் 835 கோடி பட்ஜெட்டில் இதுவரை இந்திய படங்கள் எதுவுமே செலவிடாத பெரிய தொகையில் இந்த படம் 2 பாகங்களாக உருவாகி வருகிறது. இந்த படத்தை நமீத் மல்கோத்ரா மற்றும் நடிகர் யஷ் இணைந்து தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முதல் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2ம் பாகம் 2027ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்கிற அறிவிப்புடன் படத்தை படுவேகமாக படக்குழு உருவாக்கி வருகிறது.
835 கோடி பட்ஜெட்: 500 கோடி பட்ஜெட்டில் அதிகபட்சமாக இந்திய படங்கள் எடுக்க ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 99 மில்லியன் டாலர் பொருட்செலவில் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 835 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக ராமாயணா இதிகாசம் திரைக்காவியமாக தயாராகி வருகிறது. அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தின் பட்ஜெட்டும் கிட்டத்தட்ட 800 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரன்பீர் கபூர் சம்பளம்: அனிமல் படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து அந்த படம் மொத்தமாக வசூல் செய்த அளவுக்கு ஒரு பெரிய பட்ஜெட்டில் ரன்பீர் கபூர் இந்த படத்தில் நடிக்கிறார். ராமாயணா படத்தில் ராமராக லீடு ரோலில் நடிக்க ஒரு பாகத்துக்கு நடிகர் ரன்பீர் கபூருக்கு 75 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2 பாகங்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 150 கோடி சம்பளம் வாங்கவுள்ளாராம் ரன்பீர் கபூர்.
யஷ் சம்பளம்: இந்த படத்தின் இணை தயாரிப்பாளராகவே யஷ் மாறிவிட்டார். அவருடைய மான்ஸ்டர் மைண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் நிலையில், கண்டிப்பாக அவருக்கு சம்பளமாக இல்லாமல் ஒரு பெரிய ஷேர் தொகையாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், ராவணனாக அவர் நடிக்க அவருக்கு 50 கோடி ரூபாய் சம்பளமாகவும் தனிப்பட்ட முறையில் ஒதுக்கப்பட்டு இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 2 பாகங்களையும் சேர்த்து சுமார் 100 கோடி சம்பளம் வாங்க வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.
சாய் பல்லவி சம்பளம்: நடிகை சாய் பல்லவி தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து கேரளாவில் பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நிலையில், பாலிவுட்டில் அவர் அறிமுகமாகும் இந்த படத்திற்கு ஒரு பாகத்துக்கு 6 கோடி என்கிற வீதம் 2 பாகங்களுக்கு அதிகபட்சமாக 12 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சன்னி தியோல் சம்பளம்: ராமாயணா படத்தில் ராமர், சீதை, ராவணனுக்கு அடுத்து மிகவும் முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது ஹனுமான் கதாபாத்திரம் தான். அந்த கேரக்டரில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் சன்னி தியோல் நடிக்கவுள்ளார். அனிமல் படத்தில் பாபி தியோல் நடித்த நிலையில், இந்த படத்தில் சன்னி தியோலை புக் செய்துள்ளனர். அவருக்கு 2 பாகங்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 40 கோடி சம்பளம் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
3000 கோடி டார்கெட்: மேலும், இந்த படத்தில் ஹாலிவுட் பட தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் பணியாற்றி வரும் நிலையில், ஒட்டுமொத்தமாக சம்பளம் மட்டுமே 400 கோடி ரூபாயை கடக்கும் என்றும் 400 கோடி புரொடக்ஷனுக்கும் 35 கோடி புரமோஷனுக்கும் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கல் படம் 2000 கோடி வசூல் செய்த நிலையில், இந்த படம் குறைந்தது 3000 கோடியாவது வசூல் செய்ய வேண்டும் என்கிற ரீதியில் படக்குழு திட்டமிட்டு பணியாற்றி வருவதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











