திருமண நாள் அதுவுமா 3வது மனைவிக்கு என்னம்மா கால் அமுக்கி விடுகிறார் சஞ்சய் தத்.. குவியுது லைக்ஸ்!
மும்பை: கேஜிஎஃப் 2வில் அதீராவாக மிரட்டவுள்ள பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தனது மனைவி மானயதாவுக்கு திருமண நாள் அதுவுமாக கால் அமுக்கி விடும் வீடியோ டிரெண்டாகி வருகிறது.
சர்ச்சைகளுக்கு சிறிதும் பஞ்சமில்லாத பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சிறை தண்டனைக்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் நடிகராக கொடிகட்டி பறந்து வருகிறார்.
தனது 3வது மனைவி மானயதாவுடன் கடந்த பிப்ரவரி 11ம் தேதி 14ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி உள்ளார் நடிகர் சஞ்சய் தத்.

சஞ்சய் தத்
1971ம் ஆண்டு ரேஷ்மா அவுர் ஷெரா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் சஞ்சய் தத், 1981ம் ஆண்டு வெளியான ராக்கி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான முன்னா பாய் எம்பிபிஎஸ் படத்தின் தமிழ் ரீமேக் தான் வசூல் ராஜா எம்பிபிஎஸ் என்பது குறிப்பிடத்தக்கது. ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களை பாலிவுட்டில் கொடுத்துள்ளார் சஞ்சய் தத்.

சஞ்சய் தத் பயோபிக்
3 இடியட்ஸ், முன்னா பாய் எம்பிபிஎஸ் படங்களை இயக்கிய ராஜ்குமார் ஹிரானி சஞ்சய் தத் வாழ்க்கையில் நடந்த சர்ச்சைகள், போராட்டங்கள், சிறை வாசம் உள்ளிட்டவற்றை தொகுத்து ரன்பீர் கபூர் நடிப்பில் சஞ்சு என பயோபிக்கே உருவாக்கி இருந்தார். சிறையில் இருந்து வெளியேறிய சஞ்சய் தத் தொடர்ந்து பெரிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

கேஜிஎஃப் 2 வில்லன்
கன்னட நடிகர் யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள கேஜிஎஃப் 2 படத்தில் அதீராவாக மிரட்ட வருகிறார் சஞ்சய் தத். மேலும், அக்ஷய் குமாரின் பிருத்விராஜ் மற்றும் ஷம்ஷேரா உள்ளிட்ட படங்களும் இந்த ஆண்டே ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வெளியாகி சஞ்சய் தத்தின் ஆண்டாக 2022ஐ மாற்றப் போகின்றன.

14ம் ஆண்டு திருமண நாள்
தனது 3வது மனைவி மானயதாவை கடந்த 2008ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகர் சஞ்சய் தத் கடந்த பிப்ரவரி 11ம் தேதி அவருடன் திருமண நாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார். இந்நிலையில், சஞ்சய் தத்தின் மனைவி மானயதா மிகவும் நெகிழ்ச்சியுடன் ஷேர் செய்துள்ள வீடியோ ரசிகர்களையும் பாலிவுட் பிரபலங்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளன.

கால் அமுக்கி விடும் கணவன்
திருமண நாள் அதுவுமாக மனைவியை மகிழ்விக்க அவரது கால்களை அமுக்கி விட்டு மசாஜ் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து நெகிழ்ந்துள்ளார் மானயதா, "உங்களோடு செலவு செய்த நாட்கள் தான் என் வாழ்விலேயே பெஸ்ட் டேஸ் என கேப்ஷன் கொடுத்துள்ள மனைவி மானயதாவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது மனைவி
சஞ்சய் தத்துக்கும் ரிச்சா சர்மாவுக்கும் 1987ம் ஆண்டு திருமணம் ஆனது. நடிகர் சஞ்சய் தத்தின் முதல் மனைவி நடிகை ரிச்சா சர்மா 1996ம் ஆண்டு பிரைன் ட்யூமர் பாதிப்பு காரணமாக காலமானார். அதன் பின்னர் 1998ம் ஆண்டு ரியா பிள்ளை எனும் மாடல் அழகியை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவருடன் மனக் கசப்பு ஏற்பட்ட நிலையில், 2008ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். அதே ஆண்டு மானயதாவை திருமணம் செய்து கொண்ட சஞ்சய் தத்துக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











