Salman Khan Net Worth: 59 வயது முரட்டு சிங்கிள்.. சல்மான் கானின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
மும்பை: ஏகப்பட்ட முன்னணி நடிகைகள் காதலித்தாலும் இன்னமும் யாரையும் திருமணம் செய்துக் கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வரும் சல்மான் கான் இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சல்மான் கானின் பிறந்தநாளை முன்னிட்டு சிக்கந்தர் படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.
இந்தியாவில் பல ஆயிரம் கோடி சொத்துக்களுடன் ஷாருக்கான் முதலிடத்திலும், நாகார்ஜுனா 2வது இடத்திலும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், கிட்டத்தட்ட 3வது இடத்தில் சல்மான் கான் பல ஆயிரம் கோடி சொத்துக்களுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பண்ணை வீடு, 200 கோடி சம்பளம், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் ஏகப்பட்ட சொத்துக்கள் என குவித்து வைத்திருக்கும் சல்மான் கான் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அட்லீ தயாரிப்பில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான பேபி ஜான் படத்தில் கேமியோ ரோலில் நடித்து கலக்கியிருந்தார்.
தெறிக்கும் பேபி ஜான் கேமியோ: காலீஸ் இயக்கத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி, ஜாக்கி ஷெராஃப் நடிப்பில் வெளியான பேபி ஜான் படம் தியேட்டரில் கணிசமான வசூல் வேட்டை நடத்த காரணமே சல்மான் கானின் கேமியோ தான் என்கின்றனர். கிளைமேக்ஸ் காட்சியில் சண்டைப் போட்டு வருண் தவானை சல்மான் கான் காப்பாற்றிய பின்னர் தீபாவளி முதல் பொங்கல் வரை பல பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் காட்சியை சல்மான் கானின் பிறந்தநாளான இன்று காண ஏகப்பட்ட ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர்.

ஹேப்பி பர்த்டே சல்மான் பாய்: 1965ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி பிறந்த சல்மான் கான் ஃபாலக் படத்தில் உதவி இயக்குநராக தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். சில படங்களுக்கு கதை மற்றும் திரைக்கதை, வசனம் எல்லாம் எழுதியிருக்கிறார். 1988ம் ஆண்டு வெளியான பிவி ஹோ தோ ஐசி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சல்மான் கான் மெயின் பியார் கியா படத்தின் மூலம் ஏகப்பட்ட இளம் பெண்களின் கனவு நாயகனாக மாறினார். பாகி, சாஜன், லவ், சூர்யவன்ஷி, ஏக் லட்கா ஏக் லட்கி, தபங், வாண்டட், பாடிகாட், ஏக் தா டைகர், பஜ்ரங்கி பைஜான், கிக், சுல்தான், ரேஸ் 3, ராதே, டைகர் 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அவரது 59வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

சொத்து மதிப்பு: மும்பையில் உள்ள கேலக்ஸி அபார்ட்மெண்ட் உள்ளிட்ட பல அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சொந்தக்காரர் சல்மான் கான். பன்வேல் பண்ணை வீட்டில் தான் நிறைய நாள் வசித்து வருகிறார். சுமார் 370 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 2700 கோடி) சொத்து மதிப்பு இவர் வசம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிக் பாஸ் இந்தி நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வரும் இவருக்கு நடைபெற்று வரும் சீசனில் 180 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், ஒரு படத்துக்கு அதிகபட்சமாக 200 கோடி ரூபாய் வரை சல்மான் கான் சம்பளம் வாங்குகிறார் என்றும் கூறுகின்றனர். அனைத்து விதமான விலையுயர்ந்த கார்களும் இவரது கராஜில் உள்ளன. இதுவரை திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வரும் சல்மான் கான் வரும் 2025ல் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











