போதை பொருள் வழக்கில் கைதானவர் துறவியா? சந்நியாசியான நடிகைக்கு வலுக்கும் எதிர்ப்பு!
சென்னை: பாலிவுட் நடிகையான மம்தா குல்கர்னி கடந்த வாரம் மகா கும்பமேளாவில் சந்நியாசம் பெற்றார். மேலும் தனது பெயரை மாற்றிக்கொண்டதாகவும், இது அனைத்தும் கடவுளின் விருப்பம், அந்த விருப்பத்தை நான் தற்போது நிறைவேற்றி இருக்கிறேன் என்று கூறியிருந்தார். நிழல் உலக தாதாக்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்ட ஒருவர் எப்படி சந்நியாசி ஆனார் என, கின்னர் அகாடாவின் திருநங்கையும் மகா மண்டலேஷ்வருமான ஹிமான்ஷி சக்கி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
90 காலகட்டத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை மம்தா குல்கர்னி, திடீரென நாட்டை விட்டு வெளியேறினார். மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூரில் 2,000 கோடி ரூபாய் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், மம்தா குல்கர்னியின் பெயரும் அவரது நண்பர் விக்கி கோஸ்வாமியின் பெயரும் சேர்க்கப்பட்டது. இந்த வழக்கில், மம்தா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால், வழக்கில் கைதாகாமல் இருக்க, மம்தா குல்கர்னி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார்.

சாமியாரான நடிகை: 25 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், மம்தா குல்கர்னி மீதான வழக்கை மும்பை உயர் நீதிமன்றம் அண்மையில் ரத்து செய்து உத்தரவிட்டதை அடுத்து,டிசம்பர் மாதம் மம்தா குல்கர்னி நாடு திரும்பினார். இதையடுத்து, கடந்த வாரம் கும்பமேளாவில் சந்நியாசி ஆகி, கின்னர் அகாடாவின் மகா மண்டலேஷ்வர் பட்டத்தை ஏற்றுக்கொண்டார். மேலும், தனது பெயரை மம்தா நந்த கிரி என மாற்றிக்கொண்டதாக கூறிய அவர், இது கடவுளின் விருப்பம், அந்த விருப்பத்தை நான் தற்போது நிறைவேற்றி இருக்கிறேன் என்றார். பிரயாக்ராஜில் சடங்குகளை முடித்த பிறகு, காசி விஸ்வநாதர் கோயிலுக்கும், பின் அயோத்திக்கும் செல்ல இருப்பதாக கூறினார்.

சிறை சென்றவர் துறவியா: இந்நிலையில், நடிகை மம்தா குல்கர்னி சந்நியாசி ஆனதற்கு, கின்னர் அகாடாவின் திருநங்கையும் மகா மண்டலேஷ்வருமான ஹிமான்ஷி சக்கி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நடிகை மம்தா நிழல் உலக தாதாக்களுடன் நெருங்கிய தொடர்பு , போதை மருந்துகள் கடத்தல் வழக்கிலும் சிக்கி சிறை சென்றவருக்கு எப்படி மகா மண்டலேஷ்வர் பதவியும் அளிக்கப்பட்டு அவர் சந்நியாசி ஆனார். மேலும் திருநங்கைகளுக்கான கின்னர் அகாடாவில் பெண்ணான அவரை சேர்த்தது ஏன்? கின்னார் அகாடாவின் பெயரை வேண்டுமானால் இனி மாற்றி வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.

மேலும், மம்தா குறித்து எந்த ஒரு விஷயத்தையும்ச சரியாக விசாரிக்காமல், துறவறத்திற்கான எந்த பயிற்சியையும் முறையாக அளிக்காமல் அவரை மகா மண்டலேஷ்வராக்கியதும் தவறு என்றும் ஹிமான்ஷி புகார் தெரிவித்துள்ளார். இவரின் இந்த புகாருக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











