ஷக்கலக்கா பேபி வீட்ல விசேஷங்க.. தம்பி மனைவிக்கு கோலகலமாக வளைகாப்பு நடத்திய சுஷ்மிதா சென்!
மும்பை: நடிகை சுஷ்மிதா சென்னின் தம்பி மனைவியும் நடிகையுமான சாரு அசோபாவின் வளைகாப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
நாகார்ஜுனா நடிப்பில் வெளியான ரட்சகன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சுஷ்மிதா சென்.
பல ஆண்டுகளாக சினிமாவுக்கு ஓய்வு கொடுத்திருந்த முன்னாள் மிஸ் யூனிவர்ஸ் அழகி சுஷ்மிதா சென் சமீபத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியான ஆர்யா வெப்சீரிஸ் மூலம் மீண்டும் ரசிகர்களை மிரட்டினார்.

சினிமாவில் அறிமுகம்
1994ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் அழகிப் போட்டியில் கலந்து கொண்டு மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற சுஷ்மிதா சென் 1996ல் வெளியான தஸ்தக் எனும் படத்தில் அவராகவே வந்து சென்றார். 1997ம் ஆண்டு வெளியான ரட்சகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

ஷக்கலக்கா பேபி
அதன் பிறகு இந்தி படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்தி வந்த இவர் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த முதல்வன் படத்தின் அறிமுக பாடலான ஷக்கலக்கா பேபி பாடலுக்கு நடனமாடினார். அதன் பிறகு தமிழ் சினிமா பக்கம் சுஷ்மிதா சென் திரும்பியே பார்க்கவில்லை.

ஆர்யா வெப்சீரிஸ்
2011ம் ஆண்டுக்கு பிறகு பாலிவுட் சினிமாவுக்கும் ரெஸ்ட் கொடுத்து விட்டு வெளிநாட்டில் குடும்பத்துடன் செட்டில் ஆன சுஸ்மித சென் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான ஆர்யா வெப்சீரிஸ் மூலம் மீண்டும் சினிமாவில் மிரட்டல் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அந்த வெப்சீரிஸின் லீடு கதாபாத்திரமே இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தம்பி மனைவிக்கு வளைகாப்பு
நடிகை சுஷ்மிதா சென்னின் தம்பி ராஜீவ் சென்னின் மனைவியும் நடிகையுமான சாரு அசோபா வரும் நவம்பர் மாதத்தில் தாயாக போகிறார். அதனை முன்னிட்டு திங்களன்று நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன. தம்பி மனைவிக்கு சுஷ்மிதா சென் வளையல் மாட்டி விடும் புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகின்றன.

பிரபல டிவி நடிகை
நிறைமாத கர்ப்பிணியாக உள்ள சாரு அசோபா பிரபல டிவி நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. பால் வீர், லவ் பை சான்ஸ், ஜிஜி மா, அக்பர் கா பால் பீர்பால் உள்ளிட்ட ஏகப்பட்ட சின்னத்திரை தொடர்களில் லீடு ரோலில் நடித்து அசத்தி வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு அவருக்கும் நடிகை சுஷ்மிதா சென்னின் தம்பி ராஜீவ் சென்னுக்கும் திருமணம் நடைபெற்றது.

குவிகிறது வாழ்த்து
நடிகை சுஷ்மிதா சென், நடிகை சாரு அசோபா உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் வீட்டில் நடந்த வளைகாப்பு விழா புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்ய ஏகப்பட்ட பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் விரைவில் அம்மா, அப்பா ஆகப் போகும் தம்பதியினரை வாழ்த்தி வருகின்றனர்.

அத்தையாக போறேன்
நடிகை சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வளைகாப்பு புகைப்படங்களை பதிவிட்டு விரைவில் நான் அத்தையாக போகிறேன். எனது தம்பிக்கும் தம்பி மனைவிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என போஸ்ட் போட்டு வைரலாக்கி இருந்தார். சுஷ்மிதா சென்னின் ஆர்யா 2வும் வெளியாகி சக்கைப் போடு போட்டு வரும் நிலையில், அடுத்து எந்த பாலிவுட் படத்தில் நடிக்கப் போறீங்க என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











