ஹிஜாப் விவகாரம்... ஷபானா ஆஸ்மியின் பதிலால் திக்குமுக்காடிய கங்கனா ரனாவத் !
மும்பை : ஹிஜாப் விவகாரம் குறித்து கங்கனா ரனாவத்தின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு நடிகை ஷபானா ஆஸ்மி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
ஷபானா ஆஸ்மியின் பதிலால் திக்குமுக்காடிப்போன கங்கனா அதற்கு பதில் எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளார்.
அதேபோல பல இணையவாசிகளும் கங்கனா ரனாவத் பதிவுக்கு எதிராக தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஹிஜாப் விவகாரம்
கர்நாடகாவில் உள்ள உடுப்பி பி.யூ பெண்கள் கல்லூரியில் கடந்த டிசம்பர் 27ம் தேதி ஹிஜாப் சர்ச்சை கிளம்பியது. ஹிஜாப் அணிந்து வந்த 8 மாணவிகளை கல்லூரிக்குள் அனுமதிக்காமல் கல்லூரியின் முதல்வர் திருப்பி அனுப்பினார். தினமும் இந்த பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருந்தது.

ஹிஜாப் சர்ச்சை
கல்லூரி வளாகத்துக்குள் ஹிஜாப் அணிந்து வருவதற்குத் தடை இல்லை. ஆனால், வகுப்பறைக்குள் நுழைந்ததும் ஹிஜாப்பை அகற்றிவிட வேண்டும். வகுப்பறையில் எல்லோரும் சமமே. கல்லூரி சேர்க்கையின்போதே இதைத் தெளிவாகக் குறிப்பிட்டு உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டு இருப்பதாக முதல்வர் ருத்ர கவுடா கூறினார்.

காவி துண்டுடன்
கல்லூரியின் உறுதிமொழிப் பத்திரத்தில் அதுபோன்று எந்த உறுதிமொழியும் இல்லை எனக்கூறி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். அவர்களை கல்லூரியின் நுழைவு வாயிலிலேயே முதல்வர் தடுத்து நிறுத்தினார். இதை கண்டித்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மாணவிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்துத்வா மாணவ மாணவிகள் காவி துண்டுடன் கல்லூரிக்கு வந்தனர்.

நீதிமன்றத்தில் வழக்கு
இதையடுத்து, இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது நாடு முழுவதும் பரபரப்பானது. இதையடுத்து, இஸ்லாமிய மாணவிகள் 18 பேர், நீதிமன்றத்துக்குச் செல்ல, இந்த வழக்கில் இடைக்கால உத்தரவை பிறப்பித்த உயர் நீதிமன்றம் வழக்கு நிலுவையில் இருக்கும் வரை மாணவர்கள் மதம் சார்ந்த எந்த ஆடையையும் அணிய அனுமதிக்க முடியாது என்று வழக்கை பிப்ரவரி 14ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

கங்கனா ரனாவத் சர்ச்சை பதிவு
இந்த விவகாரம் குறித்து, எழுத்தாளர், ஆனந்த் ரங்கநாதன் தன் ட்விட்டரில் இருவிதமான போட்டோவை பகிர்ந்து, 50 ஆண்டுகளில் பிகினி முதல் புர்கா வரை. வரலாற்றில் இருந்து பாடம் கற்காதவர்கள் அதைத் திரும்பத் திரும்பச் செய்ய நேரிடும் என்று கூறியிருந்தார். அவரின் இந்த ட்விட்டருக்கு பதிலளிக்கும் விதமாக கங்கனா ரனாவத், நீங்கள் தைரியத்தை காட்ட விரும்பினால், ஆப்கானிஸ்தானில் புர்கா அணியாமல் இருங்கள். பெண்கள் விடுதலையாவதை கற்றுக்கொள்ள வேண்டும், கூட்டுக்குள் தங்களை சிறைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கக் கூடாது என்று நடிகை கங்கனா ரனாவத் கருத்து கூறியுள்ளார்.

ஷபானா ஆஸ்மி தங்கபதிலடி
கங்கனா ரனாவத்தின் இந்த பதிவுக்கு தங்க பதிலடி கொடுத்துள்ள ஷபானா ஆஸ்மி தவறாக இருந்தால் என்னைத் திருத்தவும். ஆப்கானிஸ்தான் ஒரு மதச்சார்புள்ள நாடு. கடைசியாக நான் சரிபார்த்தபோது, இந்தியா மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக இருந்தது? என்று கங்கனாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











