இந்தியில் பேசி தொகுப்பாளரை திணறவிட்ட விஜய்சேதுபதி.. ஒரே தக் லைஃப் பேட்டியா கொடுக்கிறாரே!
மும்பை: சென்னையில் செய்தியாளர் ஒருவரை இந்தி திணிப்பு தான் தவறு இந்தி படிக்கிறது தப்பு இல்லை என பேசி ஆஃப் செய்த விஜய்சேதுபதி வட இந்திய மீடியாவிலும் தொகுப்பாளர் ஒருவரை இந்தியில் பேசியே திணறடித்து இருக்கிறார் மக்கள் செல்வன். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு விஜய்சேதுபதியின் தக் லைஃப் பதில்கள் என டிரெண்டாகி வருகிறது.
இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கத்ரீனா கைஃப் ஜோடியாக விஜய்சேதுபதி நடித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியாகிறது. தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளில் உருவாகி உள்ள இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார் விஜய்சேதுபதி.

வில்லனா நடிக்க மாட்டேன்: ரஜினிகாந்த், விஜய், கமல்ஹாசன் என தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து பிரபலமான விஜய்சேதுபதி கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் பாலிவுட்டில் ஷாருக்கானுக்கே வில்லனாக நடித்து மாஸ் காட்டியிருந்தார். இந்நிலையில், தொடர்ந்து வில்லனாக நடிக்கவும் கேமியோ ரோலில் நடிக்கவும் பலரும் அணுகி வருவது தனக்கு ரொம்பவே கஷ்டமாக இருப்பதால் இனிமேல் வில்லனாகவோ துணை கதாபாத்திரங்களிலோ அல்லது கேமியோ ரோலிலோ நடிக்கப் போவதில்லை என்கிற உறுதியுடன் இருப்பதாக பேசியுள்ளார்.

இந்தி படிக்கலாம் திணிக்கக் கூடாது: இந்தி மொழியை யாருமே வெறுக்கவில்லை பி.டி. தியாகராஜன் பேட்டியை போய் பாருங்க, உங்களுக்கு இதே வேலை தானா? அமீர்கான் வந்தப்போ கூட இந்த கேள்வியைத் தானே கேட்டீங்க என அடுத்தடுத்து இந்தி பற்றிய கேள்வியை எழுப்பிய பத்திரிகையாளரை சமீபத்தில் பேசி மடக்கி இருந்தார் விஜய்சேதுபதி.
இந்தியில் பேசியே திணறடித்த விஜய்சேதுபதி: இந்நிலையில், வட இந்திய மீடியா சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த விஜய்சேதுபதியிடம் பெரிய நடிகரான நீங்கள் சிறு வேடம் கொடுத்தாலும் எப்படி யோசிக்காமல் நடிக்கிறீங்க பயமா இல்லையா என தொகுப்பாளினி கேட்டு விட்டார். அதற்கு உடனே "நான் துபாயில் இருந்த போது யாஹூ சேட்டில் 6 மாசம் ஒரு பெண்ணிடம் சாட் செய்து கடைசியில லவ் கூட புரபோஸ் பண்ணாமல் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவ்ளோ பெரிய கல்யாண விஷயத்துக்கே நான் பெருசா யோசிக்கல, இதெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது என இந்தியில் சுற்றி வளைத்து அந்த தொகுப்பாளினிக்கு பதில் அளித்து திணறவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ தீயாக பரவி வருகிறது. விஜய்சேதுபதி இந்தியில் இப்படி அழகா பேசுறதை பார்த்து ஷாக்கான கோலிவுட் ரசிகர்கள் இனிமேல் மக்கள் செல்வன் கோலிவுட் பக்கம் வருவாரா? என்கிற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.

அந்தாதூன் அளவுக்கு ஜெயிக்குமா?: அந்தாதூன் படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கத்ரீனா கைஃப் நடித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் படம் வரும் ஜனவரி 12ம் தேதி பொங்கல் ரேஸில் போட்டியிடுகிறது. கடந்த ஆண்டு விஜய், அஜித் மோதினர். ஆனால், இந்த ஆண்டு விஜய்சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன், அருண் விஜய் உள்ளிட்டோர் மோதுகின்றனர். யாருக்கு வெற்றிக் கிடைக்கும் என்கிற கேள்வியும் அந்தாதூன் படம் அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை மெரி கிறிஸ்துமஸ் வெல்லுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications