twitter
    Celebs»A R Rahman»Biography

    ஏ ஆர் ரஹ்மான் பயோடேட்டா

    அ. இர. ரகுமான், புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பல இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது, தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார். மேலும் இத்திரைப்பட இசைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும், பாஃப்டா விருதும் கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரேயாவார். இவருக்கு 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்ம பூசண் விருது அளிக்கப்பட்டது. இவர் ஆசியாவின் மொசார்ட் என்று அழைக்கப்படுகிறார்.

    2009ஆம் ஆண்டு 81ஆம் ஆஸ்கார் விருதுகளுக்காக அமைத்த மாபெரும் மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று அவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திர சொல்லைப் பாடினார்

    ரகுமான் ஜனவரி 6ஆம் தேதி சென்னையில் பிறந்தவர். இயற்பெயர் திலீப்குமார். 1985 -ல் இசையுலகப் பயணம் ஆரம்பித்தது. இவரின் குடும்பம் இசை சார்ந்தது. இவரின் தந்தை சேகர் மலையாள திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார்.அதன் பின் குடும்பத்தில் வருமானம் இல்லாத நிலையில் தன் தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்குவிட்டு அந்த வருமானத்தில் கஷ்டத்தோடு பியானோ, ஹார்மோனியம் மற்றும் கிதார் வாசிக்க கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்டார். 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடன் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.

    1992 இல் தனது வீட்டிலேயே மியூசிக் ரெக்கார்டிங் தியேட்டர் அமைத்தார். அதே ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம், இவருடய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கித் தந்தது. பின்னர் 1997ல் மின்சாரக்கனவும், 2002 லகான் இந்தி படமும், 2003ல் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் இவருக்கு தேசிய விருகள் வாங்கி தந்தன.

    முதல் படம் ஜப்பானில் வெற்றி பெற்று இவரது புகழ் உலகமெங்கும் பரவத் தொடங்கியது. 2005 இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலே நவீன தொழிநுட்ப ரெகார்டிங் ஸ்டுடியோவாக உள்ளது.

     ரகுமான் பூஸ்ட்,ஏசியன் பெயின்ட்ஸ்,ஏர்டெல்,லியோ காபி ஆகிய 300க்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களுக்கும் ரகுமான் இசையமைத்துள்ளார்.