Celebs » K Balachandar » Biography
பயோடேட்டா
கைலாசம் பாலச்சந்தர் தமிழ்த் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர், மேடை அமைப்பாளர் மற்றும் நகைச்சுவையாளர் ஆவார். கே. பாலசந்தர் எனப் பொதுவாக அழைக்கப்படும் இவர் மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். 

திரைத்துறையில் 1965ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் இயக்கமாகும். நாகேஷ் இதில் கதாநாயகனாக நடித்தார். இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர் நீச்சல், வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி முதலியன இவர் இயக்கிய சிறந்த படங்களில் சிலவாகும். தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினி காந்தை அறிமுகம் செய்தவர். 90களுக்குப் பிறகு கையளவு மனசு போன்ற பெரும் வரவேற்பை பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார்.

இவரது சொந்த ஊர் நன்னிலம் அருகேயுள்ள நல்லமாங்குடி. தந்தை கைலாசம் தாயார் காமாச்சியம்மாள். தந்தைக்கு கிராம முனிசிப் பணி. நன்னிலத்தில் பள்ளிப்படிப்பு. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. முடித்தார். இராம. அரங்கண்ணல் இவரது பள்ளித் தோழர். எம். எஸ். உதயமூர்த்தி இவரது கல்லூரித் தோழர். "கவிதாலயா" என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நிறுவினார். இதன் மூலமாக பிற இயக்குனர்களின் கைவண்ணத்தில் பல திரைப்படங்களை அளித்துள்ளார். அவற்றில் நெற்றிக்கண், ராகவேந்தர், சிவா ஆகியவை குறிப்பிடத்தக்கவை.  இவர் இயக்குனர் சிகரம் என்ற பெயர் பெற்று புகல்வாய்ந்தவர்.

இயக்குனர் ஸ்ரீதரைப் போலப் பல புதுமுகங்களை அறிமுகம் செய்தவர் பாலச்சந்தர். அவர்களுள் மிக உச்சத்தை அடைந்தவர் ரஜினிகாந்த். கமலஹாசனை கதாநாயகனாக்கியது பாலச்சந்தர் அல்லவெனினும், வரிசையாக அவருக்கு வாய்ப்புக்களை அமைத்துக் கொடுத்தவர் பாலச்சந்தர்.

அவள் ஒரு தொடர்கதை போன்ற சில திரைப்படங்களை முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்தே இயக்கியிருந்தார். ஃபடாஃபட் ஜெயலட்சுமி, ஸ்ரீபிரியா விஜயகுமார், ஜெய்கணேஷ் ஆகியோர் அறிமுகமான இது ஒரு வெற்றிப்படமாகவும் அமைந்தது. பட்டினப்பிரவேசம் திரைப்படத்திலும், டெல்லி கணேஷ், சிவச்சந்திரன் போன்றோரை அறிமுகம் செய்தார். இதுவும் ஒரு வெற்றிப்படமே.

மேலும், பிற மொழியிலிருந்தும் சிலரை தமிழில் அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு. அவர்களுள் சுஜாதா (அவள் ஒரு தொடர்கதை), ஷோபா (நிழல் நிஜமாகிறது), சரத்பாபு (நிழல் நிஜமாகிறது), சரிதா (தப்புத்தாளங்கள்), பிரகாஷ்ராஜ் (டூயட்) ஆகியோர் அடங்குவர்.

வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் அறிமுகமான திலீப் மற்றும் நிழல் நிஜமாகிறது படத்தில் அறிமுகமான அனுமந்து ஆகியோர் எதிர்பார்த்த அளவில் திரையுலகில் முன்னேறவில்லை. பாலச்சந்தர் அவர்களை அறிமுகம் செய்த படத்தில் மிகுந்த அளவில் நற்பெயரைப் பெற்றிருந்தனர்.

எஸ். வி. சேகர் (வறுமையின் நிறம் சிகப்பு) மற்றும் மௌலி (நிழல் நிஜமாகிறது) ஒய். ஜி. மகேந்திரன் (நவக்கிரகம்) மற்றும் காத்தாடி இராமமூர்த்தி (பட்டினப்பிரவேசம்) என, முன்னரே நாடக மேடையில் புகழ் பெற்றிருந்த சிலரை திரைக்கு பாலச்சந்தர் அறிமுகப்படுத்தினார். பாலச்சந்தரின் பல படங்களில் நடித்திருந்த மேஜர் சுந்தரராஜன் (மேஜர் சந்திரகாந்த்) இவ்வாறு அறிமுகமானவரே. அவரது இடுபெயரான மேஜர் என்பது இப்படத்திலிருந்தே விளைந்தது. எம். ஆர். ராதாவின் மகன் ராதாரவியை அறிமுகப்படுத்தியவர் இவரே.

இவர் தமிழ் திரையுலகில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளவர். இவர் 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் உடல் நலம் சரியில்லாததால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 -ம் நாள் உயிர் பிரிந்தார்.
ஸ்பாட்லைட் படங்கள்