twitter
    Celebs»Nassar»Biography

    நாசர் பயோடேட்டா

    நாசர் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் அண்மையில் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். திரைக்கதை, வசனம், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் பணியாற்றி உள்ளார். நாசர், தமிழ் தவிர ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அனைத்துவகை வேடங்களிலும் சிறப்புற நடித்தவர்.

    தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் நத்தம் என்னும் சிற்றூரில் எளிமையான குடும்பத்தில் பிறந்த நாசர், செங்கல்பட்டிலுள்ள புனித யோசப் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர். பல்கலைக்கழக நுழைவுக்கல்வி (P.U.C)யை பாதியிலேயே விட்டுவிட்டு கலைத்துறை ஆர்வத்தில் சென்னைக்குக் குடிபுகுந்தார். சென்னை கிருத்துவக் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் பட்டப்படிப்பு படித்தார்.

    தமது நாடக பட்டறிவை முன்வைத்து திரையுலகில் கால் பதிக்க முயன்று தோற்றார். வறுமை தாங்காது தாஜ் கோரமண்டல் விடுதியின் சேவைப்பகுதியில் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார். திரைத்துறைக்கு முயன்ற அதே நேரம் கதை, கவிதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பி வந்தார். அவற்றில் சில பிரபலமானது.

    சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்று நடிப்புத்துறையில் பட்டயம் பெற்றார். இதன் முன்னர், தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் நடிப்புப் பயிற்சி மையத்திலும் பயிற்சி பெற்றார். இவரது ஆர்வத்தினால் இயக்குனர் கே.பாலசந்தர் கல்யாண அகதிகள் என்ற படத்தில் வாய்ப்பளித்தார். அன்று துவங்கி இன்று வரை 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.  மேலும் தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார்.

    மகேந்திரனின் தொலைக்காட்சிப் படம் காட்டுப்பூக்கள் மற்றும் சேனாதிபதி இயக்கிய பனகாடு இவரது நடிப்புத்திறனை உலகிற்கு பறை சாற்றியது. 1995இல் அவதாரம் என்ற திரைப்படத்தை தாமே இயக்கி நடித்தார். தேவதை என்ற படத்தை 1997இல் இயக்கி நடித்துள்ளார்.