twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமாக்காரன் சாலை 17: 'க்ளீன் இண்டியா’ குப்பையில் கொட்டவேண்டிய தேசிய விருதுகள்!

    |

    -முத்துராமலிங்கன்

    நேற்று 2014-ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் பட்டியலை மேய்ந்துகொண்டிருந்தபோது ‘ சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றிருப்பவர் நடிகர் விஜய்' என்று படித்து மைல்ட் ஹார்ட் அட்டாக்கை அனுபவித்து அப்புறம் அது, ‘நான் அவனல்ல அவளு' படத்துக்காக கன்னட நடிகர் விஜய் என்று அறிந்தபோது, மருத்துவமனை செல்லும் அவசியமின்றி மெல்ல சகஜ நிலைக்கு திரும்பினேன்.

    ‘ஏன் நம்ம விஜய் விருது வாங்கக் கூடாதா? ஒரு கன்னட நடிகர் வாங்கினால் ஆசுவாசம். தமிழ் நடிகர் வாங்கினால் ஆவேசமா?. இப்படிப்பட்ட எண்ணம் உள்ள ஒருவர் ஹார்ட் அட்டாக் வந்து ‘போனால்' கூட சந்தோஷம் என்று எண்ணும் விஜய் ரசிகர்கள் இருப்பீர்களானால், உங்கள் தளபதியை கொஞ்சமாவது ‘நடித்து' அவார்ட் வாங்கச் சொல்லி எனக்கு ஹார்ட் அட்டாக் வழங்குங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    ஆனால் இன்றைய பஞ்சாயத்து கண்டிப்பாக உங்களுக்கும் எனக்குமானது இல்லங்ணா. அதை விஜய் தேசிய விருது வாங்குறப்போ வச்சிக்கலாம்.

    Are those movies/artists really worth for National awards?

    பத்மபூஷன் தொடங்கி சாகித்ய அகாடமி வழியாக சினிமாவுக்கான தேசிய விருதுகள் உட்ப்பட்ட இந்தியாவின் எந்த உயரிய விருதுகள் குறித்தும் எப்போதுமே எனக்கு துளி கூட மரியாதை இருந்தது இல்லை. காரணம் தேர்வுக் குழுவினர் எப்போதுமே ஆட்சியாளர்களின் அடிமைகளாக இருந்தே அவற்றைத் தேர்வு செய்யும் சூழலே எல்லாக்காலமும் இருந்து வந்திருக்கிறது. ஆட்சியாளர்களின் நூல் கொண்டு ஆடும் பொம்மைகள் இவர்கள்.

    இப்போதைய ஒரே ஆறுதல் முன்பு இருந்தது போல் ஜூரிகளுக்கு நடிகைகள் சப்ளை செய்யும் காரியங்கள் இல்லை (?). மிகவும் தளர்ந்து போனவர்களை ஜூரியாக போட்டதனால் ஆன பயனென் கொள்க.

    இந்த ஆண்டு 23 மொழிகளில், சிறந்தபடத்துக்கான போட்டியில் 320 படங்கள் பார்க்கப்பட்டதாம். அதில் குப்பைகள் கழித்துக் கட்டப்பட்டு அடுத்த கட்ட மய்யக்குழு பார்வைக்கு அனுப்பப்பட்ட படங்கள் 81.

    பாரதிராஜா தலைமையிலான குழு, குட்டித் தூக்கங்கள், கொட்டாவிகளுடன் தினமும் எட்டு முதல் 9 மணிநேரம் வரை அந்த 81 படங்களைப் பார்வையிட்டு இறுதிப் பட்டியலை வெளியிட்டிருக்கிறார்கள்.

    Are those movies/artists really worth for National awards?

    தமிழ்ப் 'படங்களர்கள்', கடந்த சில ஆண்டுகளைப் போலவே, பெருமையாய் சொல்லிக் கொள்ளும்படியும் இல்லாமல் அல்பத்தனமாகவும் இல்லாமல் சுமாரான எட்டு விருதுகளை வென்றிருக்கிறார்கள்.

    இதில் ‘ஜிகிர்தண்டா' படம் தொடர்பாக சிறந்த துணை நடிகர் விருதுப் பெற்ற பாபி சிம்ஹாவும் அதன் படத்தொகுப்பாளர் விவேக் ஹர்சனும் பாராட்டு பெறப்பட வேண்டியவர்களே.

    மற்றபடி திரைக்கே வராத ‘காக்கா முட்டை' குற்றம் கடிதல்' போன்ற படங்கள் விருது பெற்றிருப்பதை எங்ஙனம் பார்ப்பது என்று புரியவில்லை. இவ்விரண்டு படக் குழுவினரும் ஏற்கனவே சில திரையிடல்களில் விருதினைப் பெற்று'விற்று' அவை குறித்து ஊடகங்களில் அநியாயத்துக்கு செய்திகள் வரவழைத்து தேசிய விருதையும் பெறப்போவதை முன்கூட்டியே ஆணித்தரமாக அறிவித்திருந்தவர்களாவர்.

    மோடியின் முகமூடிகள் அணிந்துகொண்ட ஜூரிகள் மட்டுமே பார்த்து நிர்ணயிக்கும் ஒரு படம் எப்படி தமிழின் சிறந்த பிராந்தியப் படம் ஆகும் என்று விளங்கவில்லை. ('அப்பா வேணாம்பா' என்ற பிராந்தியின் கொடுமையைச் சொன்ன படத்தைத்தான் இந்த ஆண்டின் சிறந்த பிராந்தியப் படமாக பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.) இந்த ஆண்டின் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ‘கோர்ட்' படமும் கூட இன்னும் பொதுமக்கள் பார்வைக்கு வராத படம்தான். இவர்கள் காக்கா முட்டைகளா அல்லது கூமுட்டைகளா என்று மேற்படி படங்களை திரையில் பார்த்த பிறகுதான் சொல்லமுடியும்.

    Are those movies/artists really worth for National awards?

    கடந்த ஆண்டு ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்..' பாடலுக்காக தகுதியுடன் சிறந்த பாடலாசிரியருக்கான விருது பெற்ற சின்ன 'வைர'முத்துக்குமார் இந்த ஆண்டும் உப்பு, புளி பெறாத ‘அழகு அழகு' பாடலுக்கு தொடர்ச்சியாக விருது வென்றிருக்கிறார்.

    முப்பது வரிகள் இடம் பெற்றிருந்த அப்பாடலில் ‘வெயிலும் அழகு மழையும் அழகு,... வார்த்தை அழகு அது தீர்ந்தபின் மவுனம் அழகு' என்பதைத் தாண்டி ...பதகமபா ...தகதகபா... ரிசரிசரீ ...பதபதநீ' என்ற ஜதிகளே பாடல் முழுக்க நிறைந்து கிடந்தன. ஜூரிகளின் செவிகளில் ஈயத்தைக் காச்சி ஊற்ற.... இந்த ரீதியில் போனால் வைரமுத்து வயதை எட்டும்போது ‘தகதகபா பதகமபா' எழுதியே சுமார் டஜன் தேசிய விருதுகள் வாங்கிக் குவிப்பார் என்று கவிப்பேரரசு தலையில் அடித்து சத்தியம் செய்கிறேன்.

    இந்த வரிசையில் இன்னொரு பரிதாபமான தேசிய எருதுக்கு சொந்தக்காரர் தயாரிப்பாளர் ‘தன'ஞ்செயன். ரூ.1500 விலை விதிக்கப்பட்டு கலர்ஃபுல் எருமை சைஸில் வெளியிடப்பட்டுள்ள இவரது ‘PRIDE OF TAMIL CINEMA" என்ற நூலுக்கு ஜூரிகளின் சிறப்பு விருதுகள் வழங்கியிருக்கிறார்கள்.

    நாலெழுத்து எழுதத் தெரியாமல் இருந்தாலும் பணம் போட்டதாலேயே ‘ஆசிரியர்' ஆகிவிடுகிற கொடூர தமிழ்ச் சூழல் போன்றது இந்தப் புத்தகம். யூடிவி போன்ற ஒரு பெரிய படத் தயாரிப்பு நிறுவனத்தில் முக்கியப் பதவியில் இருப்பது தாண்டி, இந்த தனஞ்செயனுக்கு எழுத்துப் பிழையில்லாமல் தமிழில் தொடர்ந்து பத்து வரிகள் எழுதத் தெரியாது.

    தமிழின் முதல் சினிமா தொடங்கி இன்றும் தள்ளாத வயதில் தமிழ் சினிமாவின் அத்தனை தகவல்களையும் சேகரிக்கும் ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் குறிப்புகளை வைத்துக் கொண்டு உதவி இயக்குநர்கள் சிலரைப் பாடாய்ப்படுத்தி தயாரான இந்தப் புத்தகம் எல்லாம் தேசிய விருது வாங்கும்போது, சினிமா தொடர்பான உண்மையிலேயே நல்ல புத்தகங்கள் எழுதினவர்களின் மனநிலையை யோசித்துப் பாருங்கள்?

    ஆர்ட் டைரக்‌ஷன், ஸ்டண்ட் டைரக்‌ஷன் போல இப்போது மியூசிக்கையும் டைரக்‌ஷனுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள் போல. இந்த ஆண்டின் சிறந்த இசையமைப்பாளர் யார் என்று தேடிய போது ‘பெஸ்ட் மியூசிக் டைரக்‌ஷன் விஷால் பரத்வாஜ் ‘ஹெய்டர்' படத்துக்காக என்று இருந்தது. சரி அப்படத்தின் பாடல்களையும் பின்னணி இசையையும் கேட்டுத்தான் பார்ப்போமே என்று முயன்றபோது 'அய்யகோ' என்ற வார்த்தைக்கு அப்போதுதான் முழு அர்த்தம் தெரிந்து கொண்டேன்.

    தேசிய விருதுகளில் இந்த கூத்துக்கள் எப்போதும் நடப்பவைதான்.

    Are those movies/artists really worth for National awards?

    வசூல்தான் ஆகவில்லை. ஆர்ட் டைரக்‌ஷன், மேக்கப்புகளுக்காக தனது ‘காவியத் தலைவன்' படத்துக்கு ரெண்டு சப்பை விருதுகளாவது கிடைத்திருக்கலாம் என்று வசந்தபாலன் வருந்துகிறார் போல.

    தன்னுடைய ‘கதை திரைக்கதை விசனம் இயக்கம்' படம் குண்டக்க மண்டக்க பல விருதுகளை குவிக்கப் போகிறது என்று பார்த்திபன் குப்புற அடித்து படுத்துக் கொண்டு காத்திருந்து எதுவும் கிடைக்காமல் குமுறி அழுகிறார் போல.

    இவர்களுக்கும் எதிர்பார்த்து ஏமாந்து நிற்கும் மற்றவர்களுக்குமாகச் சொல்கிறேன். இந்த தேசிய விருதுகள், பல சமயங்களில் அதுவும் குறிப்பாக, நமக்கு கிடைக்காத சமயங்களில் குப்பைகளுக்குச் சமம்.

    மோடியின் ‘கிளீன் இண்டியா' திட்டத்தின் கீழ் அதை, வாங்கியவர்களிடம் சேகரித்து குப்பைகளில் கொட்டுவோம்.

    பி.கு: குப்பைகளுக்கு மத்தியில் கோமேதகம் என்பார்களே அது இந்த வருட விருதுப்பட்டியலில் தங்கத்தாரகை கொங்கனா ரனவத் தான். ‘குயீன்' படம் பார்த்தபோதே, மும்பைக்கு நடந்தே போய் ஒரு பொக்கே வாங்கித்தர முடிவு செய்தேன். அவர் கொஞ்சம் கரடுமுரடான பார்ட்டி என்று கேள்விப்பட்டு எண்ணத்தை குழிதோண்டி புதைத்தேன்.

    அவருக்கு சென்னையில் ரசிகர் மன்றம் துவங்கும் சபலம் உள்ளது. இதற்கு வேறு எங்கும் கிளைகள் வைக்க அனுமதியில்லை.

    (தொடர்வேன்...)

    தொடர்புக்கு: [email protected]

    English summary
    The 16th episode of Muthuramalingan's Cinemakkaran Saalai critically analysed the announcement of National Award, 2014
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X