»   »  சினிமாக்காரன் சாலை -1: ஷங்கரின் 'ஐ த மெகா பொய்'!

சினிமாக்காரன் சாலை -1: ஷங்கரின் 'ஐ த மெகா பொய்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

-முத்துராமலிங்கன்

'மாதத்தின் முதல் வாரம் ஷங்கர் படம் போல் உற்சாகமாகவும், கடைசி வாரம் தங்கர் படம் போல் ஒரே அழுகாச்சியாகவும் ஆகிவிடுகிறது!'.


இது மாதச் சம்பளக்காரர்களின் மைண்ட் வாய்ஸ்.


‘ஜெண்டில்மேன்' முதல் ‘எந்திரன்' வரை மேற்படி கூற்று ஷங்கருக்கு ஓரளவு பொருந்தலாம். ‘' விவகாரத்தில் ஷங்கர் அதை இயக்கியதை நினைத்து இன்னும் பல ஆண்டுகளுக்கு வருந்தலாம்.


‘ஐ' படம் பார்த்ததிலிருந்து, இது ஷங்கர் தன்னை டிங்கரிங் பண்ணி பட்டி பார்த்துக்கொள்ள வேண்டிய சமயம் வந்து விட்டதாகவே தோன்றுகிறது.


முதலில் அவர் தான் ஒரு பிரம்மாண்ட இயக்குநர் என்று மாட்டிக் கொண்ட கோட்டை கழட்டி தூர எறியவேண்டும். அப்படி செய்தால் லட்சம் பூக்களுக்கு மத்தியில் ஒரு வீடு போன்ற தட்டையான சிந்தனைகளை எல்லாம் எழுதத் தோன்றாது.


ஒவ்வொரு படத்துக்கும் கதை 'செய்ய'த் துவங்கும் முன்பே பட்ஜெட் மட்டும் முந்தின படத்துக்கும் மேல.. அதுக்கும் மேல' என்று யோசிப்பதை நிறுத்தவேண்டும்.


Cinemaakkaran Saalai -1: Shankar's I, a big lie!

இந்த அடுத்தபட பெரும் பட்ஜெட் வியாதி ஷங்கரிடம் மட்டுமல்ல, தமிழ் சினிமாவின் பெரும்பாலான இயக்குநர்களிடம் இருக்கிறது. மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜா போன்ற வெகுசிலர் மட்டுமே அந்த பாவச் செயலில் ஈடுபடவில்லை.


‘ஐ... த கடைந்தெடுக்கப்பட்ட பொய்' படத்தின் பட்ஜெட்டை தயாரிப்பாளர் தரப்பில் ஆரம்பத்திலிருந்தே 180 கோடி என்றார்கள். ஷங்கர் வட்டாரங்கள் '80 கோடிதான். வியாபார தந்திரமாக தயாரிப்பாளர் அவ்வளவு பெரிய பொய்யை அவிழ்க்கிறார்' என்றார்கள்.


ஷங்கர் சொன்ன 80 கோடி என்றே எடுத்துக்கொள்வோம். 80 கோடி செலவழிக்க இந்த படத்தில் என்ன எழவு கதை இருந்தது. மக்களுக்கு தீங்கு விளைவிக்கிற விளம்பரப் படங்கள்ல விக்ரம் நடிக்க மறுத்துடுவாராம். உடனே விளம்பர நிறுவன மேனேஜரும், விக்ரமால பாதிக்கப்பட்ட இன்னும் சிலரும் அவருக்கு ‘ஐ'டொஸொமொபொட்டொமாஸ்'ங்குற ஒரு வைரசை செலுத்தி வீங்கி விகாரமா ஆக்கிடுவாங்களாம். அவர் அதுக்கும் மேல போய் அவிங்களை 'பழி வீங்கி' பழைய நிலைமைக்கு வருவாராம்?


இந்த ஒன்லைனை லட்சுமி ராமகிருஷ்ணனிடம் சொல்லி பட்ஜெட் 80 கோடி என்றால் ‘என்னம்மா இப்பிடி பண்றீங்களேம்மா?' என்று கேட்காமல் இருப்பாரா?


அடுத்த பஞ்சாயத்து, கதையில் வரக்கூடிய விளம்பரப் படங்களை ‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமாங்குற மாதிரி சீனாவில் மட்டுமேதான் எடுக்கமுடியுமா? இந்தியாவில் இல்லாத அழகிய லொகேஷன்களா?


இன்னொரு பக்கம் கார்ப்பொரேட்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, ஒரு பாடல் காட்சி முழுக்க வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்கள். நூறும், இருநூறும் கொடுத்து படம் பார்க்க வருகிற ரசிகனின் நெற்றியில் பட்டை நாமம் சாத்துகிற யுக்தி இது.


இதற்கு முன்பு பல படங்களில் இந்த IN-FILM AD கள் இருப்பது சகஜம் என்றாலும் அவை கொஞ்சம் நாசூக்காக, மறைமுகமாகவே காட்டப்பட்டு வந்தன. ஷங்கர் காட்டியதோ இதுக்கும் மேல யாரும் காட்டிர முடியாது என்கிற அளவுக்கு டூஊஊமச். அவர் காட்டிய விளம்பர சமாச்சாரங்களெல்லாம் யோக்கியமான புராடக்டுகள்தான் என்பதைத் தீர்மானிப்பது யார்? அவை அப்படிப்பட்டவை இல்லை என்று யாராவது நிரூபித்தால் இந்த 80 கோடி பட்ஜெட் கதையே தண்டம் என்று ஆகிவிடாதா?


அப்புறம் உங்க கதை இலாகாவைத் தூக்கி காயலான் கடையிலதான் போடனும்ங்குற மாதிரி இருக்கு, நீங்க படத்துல வச்சிருக்குற திருநங்கைகள் சமாச்சாரம்.


‘ஊரோரம் உள்ள புளியமரத்துல...' கும்மியடிச்சி ஏற்கனவே முந்நூத்திச்சொச்ச படங்கள் வந்தாச்சே?. இந்த சமூகத்தில் மதிக்கப்பட வேண்டிய அவங்கள இப்பிடி காம இச்சை, இம்சைன்னு சித்தரிச்சி சந்தி சிரிக்க வைக்கலாமா?'


ஒர காலத்தில் சாதாரண உதவி இயக்குநராக இருந்த ஷங்கர் இன்று பல நூறுகோடிகள் சொத்துக்கு அதிபதியாகி இருக்கிறார். அது அத்தனையும் சினிமா அவருக்கு கொடுத்த சொத்து. இவருக்கு இவ்வளவு செய்த சினிமாவுக்கு அவர் என்ன செய்திருக்கிறார்?


டியர் ஷங்கர்...இதுவரை தேவைக்கும் அதிகமாக பொழுதுபோக்கு படங்களைக் கொடுத்து ஜனங்களை சந்தோஷப்படுத்திருக்கிறீர்கள். மெஸேஜ் என்ற பெயரில் நீங்கள் செய்த மசாஜ்களை எல்லாம் யாம் நன்றாய் அறிவோம். போகட்டும் இப்போ மேட்டருக்கு வருவோம்.


எல்லாவற்றிற்கும் வரலாறு என்று ஒன்று உண்டு. அந்த வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள் மட்டுமே இடம் பெறுவார்கள். நீங்கள் இதுவரை அப்படி எதையாவது பதித்திருக்கிறீர்களா என்று கேட்டால் நீங்களே இல்லை என்றுதான் சொல்லுவீர்கள்.


தமிழ் சினிமாவின் பத்துப் படங்கள் வேண்டாம் நூறு படங்கள் என்று வைத்துக்கொண்டாலும் அதில் உங்கள் படம் ஒன்றுக்காவது அதில் இடம் பெற தகுதி உண்டா? மற்றவர்களை விடுங்கள் உங்கள் சிஷ்யர்கள் இயக்கிய ‘காதல்' வெயில்' அங்காடித் தெரு' போன்ற ஒரு உருப்படியான, மனதை உருக்கச் செய்கிற ஒரு படத்தையாவது இயக்கியிருப்பீர்களா?.


உங்கள் 80 கோடி பட்ஜெட் ‘ஐ' த பொய்'க்குப் பதிலாக 80 ‘காதல், 50 வெயில், 30 அங்காடித்தெரு' படங்கள் எடுத்திருக்க முடியும்.


முந்தின படத்தின் பட்ஜெட்டுக்கும் மேல.. அதுக்கும் மேல என்று நீங்கள் மேல மேல போகும்போது, கீழ கிடக்கிற 50 உதவி இயக்குநர்களின் வாய்ப்பையும் அடிவயிற்றில் அடித்துப் பறிக்கிறீர்கள்.


உங்கள் குழந்தையிடம் ‘விமானம் வேண்டுமா, பட்டம் வேண்டுமா? என்று கேட்டுப்பாருங்கள். அது பட்டம் வாங்கிப் பரவசப்படவே விரும்பும். அப்படி பரவசப்படுத்தும் ஒரு படம், ஒரே ஒரு படம் இயக்குங்கள்.


அது ஒரு சின்ன பட்ஜெட் படமாக, 3 கோடியிலோ 5 கோடியிலோ கூட இருக்கட்டும்.


பிரம்மாண்ட இயக்குநர் என்கிற பெயர் போய் 'ஷங்கர் எ வெரி குட் THINKER' என்ற பெயருடன் கொஞ்சநாள் உலாவிப் பாருங்களேன்.


லட்சம் பூக்களுக்கு மத்தியில் ஒரு வீடு என்பதை விட, நம் வீட்டில் பூக்கும் ஒற்றை ரோஜா இன்னும் பரவசத்தை தரக் கூடியது!


முத்துராமலிங்கன் - muthuramalingam30@gmail.com

English summary
First episode of Muthuramalingan's Cinemaakkaran Saalai series. Here he critically analysed Shankar's I movie and its making.
Please Wait while comments are loading...