twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமாக்காரன் சாலை 24: ராஜாவுக்கு ஆயுள் முழுக்க தீராக்கடனாளிகள்தான் நாம்!

    By Shankar
    |

    -முத்துராமலிங்கன்

    இன்று என் இனிய இசையராஜாவுக்கு 73 வது பிறந்தநாள். சாதா ராஜாக்களையே பாடி வாழ்த்தவேண்டியது புலவர்களின் கடமை எனும்போது அற்புதங்களுக்கெல்லாம் அற்புதமான இசைஞானியை வாழ்த்தாவிடில் இப்பிறவி எடுத்து என்ன பயன்?

    பதினோரு ஆண்டுகளாக செல்போனில் ஒரே ரிங் டோனை வைத்திருப்பவனை சரியான பைத்தியக்காரன் என்றே நீங்கள் அழைக்க விரும்புவீர்கள்,எனில் என்னையும் அப்படியே அழையுங்கள்.

    2003-ன் இறுதியில் 'பிதாமகன்' ரிலீஸாகி சில தினங்களே ஆன நிலையில், நானும் பாலாவும், காரில் அமர்ந்து பீர் குடித்த படியே, ஏற்காடு மலையேறிக்கொண்டிருந்த போதுதான், முதன்முதலாக, 'விருமாண்டி' சண்டியரை நோக்கி, சங்கீதத்தின் ஒரே சண்டியர் ராஜா சொன்ன 'உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்ல' பாடலைக் கேட்டுக் கிறங்கினேன். மலையிலிருந்து இறங்கின உடனே என் செல்போனின் ரிங்டோனாக அன்று அரியணை ஏறிய பாட்டு இன்று வரை இறங்கவில்லை.

    Cinemakkaran Saalai -24

    'சலங்கை ஒலி' இது மவுனமான நேரம்..., 'நாயகன்' நீ ஒரு காதல் சங்கீதம்..., 'புன்னகை மன்னன்' என்ன சத்தம் இந்த நேரம்?..., 'மவுனராகம்' நிலாவே வா..., 'காத்திருக்க நேரமில்லை' வா காத்திருக்க நேரமில்லை..., 'நாடோடித் தென்றல்' ஒரு கணம் ஒரு யுகமாக..., 'சிப்பிக்குள் முத்து' மனசு மயங்கும்..., 'சத்யா' வளையோசை கலகலவென..... வரிசையில் நான் அந்தப் பாடலை இதுவரை ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன். பாடலில் கமலுடன் நாட்டுப்புறத் தமிழில் கொஞ்சியிருந்த ஷ்ரேயா கோஷலுக்கு எனது இதயத்தின் இடது ஓரத்தில் சின்னதாக ஒரு கோயில் கூட கட்டியிருந்தேன். 'என்னவிட உன்ன சரி வரப் புரிஞ்சிக்க யாருமில்ல ...' என்று ஷ்ரேயா எனக்காகப் பாடுவதாக நினைத்துக் கொள்வது சொல்லவொண்ணா சுகமாக இருக்கிறது.

    தமிழ் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் பாடல்களைக் கேட்டு வளர்ந்திருந்தாலும், சின்ன வயசிலிருந்தே ராஜாவின் மீது வெறிகொண்ட ரசிகன் நான். அவருக்கு என்னைபோல் லட்சக்கணக்கில் பைத்தியங்கள் உண்டென்றாலும், 'ராஜா பைத்தியங்களிலேயே ராஜபைத்தியம் நான் தான்' என்ற தலைமைப் பொறுப்பை என்னிடம் தயவு செய்து விட்டு விடுங்கள். அப்படி விட்டுக்கொடுக்க நீங்கள் முன்வரும் பட்சத்தில் என் வாழ்நாள் முழுக்க,எம்.எல்.ஏ, மந்திரி, முதல் அமைச்சர், பிரதமர், அமெரிக்க பிரதமர் போன்ற எந்தப் பதவிகளுக்கும் நான் உங்களோடு போட்டியிட மாட்டேன் என்று எத்தனை ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் வேண்டுமானாலும் எழுதி கையெழுத்திடுகிறேன்.

    வைரமுத்துவை எனக்குப் பிடிக்கும், அவர் இளையராஜாவுடன் இருந்தவரை. பாரதிராஜாவை எனக்குப் பிடிக்கும், அவர் படத்துக்கு ராஜா இசையமைக்கும்போது மட்டும். 'நீ தானே என் பொன் வசந்தம்' படம் ,ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜிடமிருந்து எங்கள் ராஜா கைக்கு மாறும்போது, 'படம் பிரமாதமா வந்துருக்காம்' என்று சல்லி பைசா அட்வான்ஸ் வாங்காமல் மிஸ்டர் திகில் முருகன் பார்க்க வேண்டிய பி.ஆர்.ஓ. வேலையை நான் பார்க்க ஆரம்பித்து விட்டேன்.

    என்னைப் பொறுத்தவரை என் வாழ்வின் இனிமையான தருணங்கள் என்பவை ராஜாவின் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்த, கேட்டுக்கொண்டிருக்கும் தருணங்கள்தான். இது சங்கீதம் அறிந்த அறியாத தமிழர்கள் சகலருக்கும் பொருந்தும் என்பதே என் கருத்து.

    Cinemakkaran Saalai -24

    மிகவும் வறுமையான பின்னணியில் எட்டுப் பிள்ளைகளைப்பெற்று வளர்க்க, நாள்தோறும் நள்ளிரவில் தோட்டம் போய் தண்ணீர் பாய்ச்சிய என் தாய் லச்சம்மாளின் நினைவு வரும்போதெல்லாம் 'பொன்னப் போல ஆத்தா என்னப் பெத்துப் போட்டா' (என்னை விட்டுப்போகாதே) பாட்டுக் கேட்டு அழுதிருக்கிறேன். மனசு சரியில்லாத வேளைகளில், 'நான் யாரு எனக்கேதும் தெரியலையே, ஆலோலம் பாடி ' மாதிரி பாடல்கள் கொண்டு என் கண்ணீர் துடைப்பது ராஜாவின் சுரங்கள். ஒரு பூ மலர்வதைக் கூட சங்கீதமாகச் சொல்ல முடியும் என்று மலர்ந்த 'வெள்ளி முளைத்தது' (கீதவழிபாடு) கேட்டு விடிந்தது எத்தனை காலைப் பொழுதுகள் என்று சொல்லிமாளாது.

    Cinemakkaran Saalai -24

    அமெரிக்கன் கல்லூரியில்* படித்துக்கொண்டிருந்தபோது, நானும் எனது நண்பர்களும். வகுப்பறைகளில் இருந்ததை விட ,கல்லூரிக்கு எதிரே இருந்த கணேஷ் டீ ஸ்டாலில் தான் அதிகம் நின்றிருப்போம்.

    மண்வாசனை, கரையெல்லாம் செண்பகப்பூ, நான் பாடும் பாடல், பயணங்கள் முடிவதில்லை, இளமைக் காலங்கள்' என்று கேட்டு எங்களைத் திகைக்க வைப்பதையே ராஜா சலிப்பின்றி செய்து வந்தார். கணேஷ் ஸ்டாலில் டீ கேட்பதுவும், ராஜாவின் பாட்'டீ குடிப்பதுமே கல்லூரி காலங்களில் எங்களது முக்கியமான பணியாக இருந்தது.

    அன்றுமுதல் இன்று ராஜாவின் பிறந்தநாளை ஒட்டி இக்கட்டுரையை எழுதுகிற நிமிடம் வரை என் ராஜவிசுவாசம் துளியும் குறையவில்லை.

    ஒவ்வொரு காலகட்டத்திலும், ராஜா குறித்த சர்ச்சைகளை, அவரைப் போலவே, நான் எப்போதும் இடதுகையால் புறந்தள்ளி விடுவேன். அவர்கள் ஒன்று பிறவிச் செவிடர்களாக இருக்கவேண்டும் அல்லது ஞானசூன்யங்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்.

    சமீப தினங்களில் எஃப்.எம். காரர்களிடம் ராஜா ராயல்டி கேட்டது குறித்து சில ஞானசூன்யங்கள் இணையங்களில் பகடிகள் செய்து வருவதைக் கவனித்துக் கொண்டே இருக்கிறேன்.

    Cinemakkaran Saalai -24

    எஃப்.எம் காரர்கள் நொடிக்கு சில ஆயிரங்களை விளம்பரங்களுக்காக வாங்குபவர்கள். ராஜாவின் பாடல்கள் அவர்களுக்கு அமுதசுரபி போல என்பதை உலகே அறியும். கோடிகளில் வருமானம் வரும்போது அதில் சில லட்சங்களை ராயல்டியாக தர மனசு இல்லையெனில், அவர்கள் சூடுசொரணை உள்ளவர்களெனில் ராஜா பாடல்கள் இல்லாமல் அவர்களின் ரேடியோ பாடட்டும்.

    இந்த எஃப்.எம் காரர்கள் குறித்து குறிப்பாக சொல்லவேண்டிய ஒன்றும் இருக்கிறது. பணம் கொட்டிக் குவிப்பதே இவர்களின் பிரதான குறிக்கோள். இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பவர்கள் என்பது சினிமாக்காரர்கள் அனைவருக்கும் தெரியும்.
    ஒருமுறை நண்பர் ஒருவரின் படப்பாடல்களை ஒளிபரப்புக்குத் தருவதற்காக ஒரு முன்னணி எஃப்.எம். ஒன்றுக்குப் போயிருந்தேன். சி.டிக்களைக் கொடுத்துவிட்டு கிளம்பும்போது, அங்கு பணிபுரியும் நண்பர் ஒருவர் கீழே வந்து டீ சாப்பிடும்போது சொன்னார். 'பாஸ் இங்க சில லட்சங்களுக்கு விளம்பரம் தராம வெறுமனே சி.டி. மட்டும் குடுத்தா பாட்டை ஒலிபரப்ப மாட்டாங்க. இது எங்க எஃப்.எம்.ல மட்டுமில்ல எல்லா எஃப்.எம்.லயும் உள்ள பழக்கம்'

    'பாட்டு பிரமாதமா இருந்தாலுமா?' அப்பாவியாக நான் கேட்க அவர் அதிர்ந்து சிரித்தபடி சொன்னார்.

    'பிரிச்சிக்கூட பாக்காம டஸ்ட்பின்ல போடுற சிடியில பாட்டு பிரமாதமா இருக்குன்னு யாருக்குத் தெரியும்?'

    இப்படிப்பட்ட கிராதகர்கள்தான் இந்த எஃப்.எம் காரர்கள். இவர்களிடம் ராஜா ராயல்டி கேட்கலாமா கூடாதா என்று மனசாட்சி உள்ளவர்கள் சொல்லுங்கள்.

    சில சமயம் ஏழாவது, எட்டாவது மாடிகளில் ராஜா குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கும்போது, எனது நெருங்கிய நண்பர் ஒருவர் எதிராளிகளை இப்படி பயமுறுத்துவார்.

    'ராஜாவைப் பத்தி விமர்சனம் பண்றத இப்பிடியே நிறுத்திக்கங்க. அப்புறம் முத்து உங்களை மாடியிலருந்து த்ள்ளிவிடக்கூட யோசிக்கமாட்டார்'.

    அடுத்து ஒரு மயான அமைதி நிலவும்.

    இந்த ராஜாவின் பிறந்தநாளன்று எனக்கு அவ்விதம் தான் தோன்றுகிறது. சற்றும் ஞானமின்றி ராஜாவைக் கிண்டலடிக்கும் ஒரு நூறுபேரை எதாவது ஒரு ஹோட்டலின் பத்தாவது மாடிக்கு இழுத்துச்சென்று மொத்தமாய் அள்ளிக்கீழே போட்டால் என்ன என்று?'

    உங்களுக்கு அம்மாவிலிருந்து அத்தனை உறவுகளையும் நினவூட்ட, காதலிக்க, கண்கலங்க, ஆனந்தப்பட, துக்கப்பட, கோபப்பட, நிம்மதியாய் நித்திரை கொள்ள என்று அத்தனைக்கும் ராஜாவின் பாடல்கள் வேண்டும். ஆனால் சம்பாதிப்பவர்களிடம் தனது ரத்தத்துக்கான ராயல்டியை அவர் கேட்டால் கிண்டல் அடிப்பீர்கள்?

    ராஜாவுக்கு ராயல்டி என தமிழகத்தின் ஒட்டுமொத்த நிலப்பரப்பையும் எழுதிவைத்தாலும், நமது உடல்பொருள் ஆவி அத்தனையும் அவருக்கே தந்தபின்னும் நாம் என்றுமே அவருக்கு தீராக் கடனாளிகள்தான்!

    (தொடர்வேன்...)

    English summary
    Muthuramalingan's special article on Maestro Ilaiyaraaja's 73rd birthday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X