twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஷமிதாப்... 'நேற்று இல்லை நாளை இல்லை.. எப்பவும் (இளைய)ராஜா!’

    By Shankar
    |

    -முத்துராமலிங்கன்

    இந்திப் படங்கள் வருஷத்துக்கு பத்து பார்த்தாலே அதிகம். ஒவ்வொரு படத்திலும் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிச்செல்லும் ஆமீர் கான், 'மும்பை வந்து என்னை லவ் பண்ணுடா. மத்தத அப்புறம் பாத்துக்கலாம்' என்று என்னை மட்டும் தனியாக ஒவ்வொரு படத்திலும் அழைக்கும் இலியானா, 'படத்துல ஒரு எழவும் இல்லாவிட்டாலும் 'என்னைப் பார்த்தாலே போதாதா?' என்று ஏங்க வைக்கும் அனுஷ்கா ஷர்மா, இப்படி சில காரணங்கள் வேண்டும் இந்திப் படம் பார்க்க எனக்கு.

    அப்படி ‘சீனி கம்' படம் பார்க்க நேர்ந்தது 'தானைத் தலைவன்' இளையராஜாவுக்காகத்தான். அமிதாப்பும், தபுவும், ராஜாவும் இயக்குநர் பால்கியும் பின்னே நானும்' என்றொரு கட்டுரை எழுதி நான் மட்டும் படித்து விட்டு பெட்டிக்குள் பூட்டிவைத்து விட்டேன். அது போதுமானதாக இருந்தது எனக்கு. சில விசயங்களுக்கு ஒரே ஒரு வாசகன் போதும்.

    நேற்று ‘ஷமிதாப்' பார்த்தேன். இந்த முறை எழுதி, நான் ஒருவன் படித்துவிட்டு ஒளித்து வைத்துக்கொள்வது அயோக்கியத்தனம் என்று தோன்றியது.

    ராஜா, அமிதாப், பால்கியுடன், இந்த முறை தனுஷும், ப்ரியத்திற்குரிய பி.சி.ஸ்ரீராம், குட்டி தேவதை அக்‌ஷராவும் போனஸாக.

    கதையைப் பற்றி நான் ஏற்கனவே ஓரளவு கேள்விப்பட்டிருந்தேன். எப்படி என்றால் நம்ம மைக் மோகன், அவருக்கு டப்பிங் பேசி வந்த சுரேந்தர் காம்பினேஷன் உடைந்துபோனபோது அவர்கள் இருவரும் எப்படி உடைந்து சிதறிப் போனார்கள் என்பதாக.

    Cinemakkaran Saalai 6 - Shamitabh

    கொஞ்சம் அப்படித்தான். ஆனால் அப்படி இல்லை என்றும் சொல்லலாம்.

    ஒரு குக்கிராமத்தில் வடை சுட்டுப் பிழைக்கும் அம்மாவுக்கு ஒத்தாசையாக இருக்கும் தனிஷ், வாய்பேச இயலாதவன். மிக இளம் வயதிலேயே நடிப்பு ஆசை கொண்டவன். மும்பைக்கு ஒவ்வொரு முறையும் லாரி ஏறமுயன்று அம்மா மேல் உள்ள பாசத்தால் தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்கிறான். அம்மா ஒரு நாள் இறந்துபோக மும்பை வந்து சினிமா சான்ஸ் தேடுகிறான். ஊமைக்கு யார் வாய்ப்பு கொடுப்பார்கள்?

    இந்த சமயத்தில் அவன், உதவி இயக்குநர் அக்‌ஷராவில் கண்ணில் பட்டு அவரது மற்றும் விஞ்ஞான உதவியுடன், நடிகனாகிறான். வாய்பேச இயலாத தனிஷுக்கு ஸ்பாட் டப்பிங் கொடுக்கும் பெரியவராக, சதா குடித்துக்கொண்டிருக்கும் அமிதாப் அவர்களுடன் இணைகிறார்.

    தனிஷ் பெரிய நட்சத்திரமாகிவிட ஒரு கட்டத்தில் குரல் பெரிதா, நடிகன் பெரிதா என்ற ஈகோ எழுந்து அவர்கள் என்னவாகிறார்கள் என்று போகிறது கதை.

    படத்துக்கு விமரிசனம் எழுதுகிறபோது, பல சமயங்களில் அதன் கதையை சொல்கிறோம் என்ற பெயரில் அந்த இயக்குநருக்கு பெரிய துரோகம் செய்கிறோமோ என்று தோன்றும். மேலே நான் 'ஷமிதாப்' கதையை எழுதியிருக்கும் விதமும் அந்த மாதிரியான ஒன்றுதான். உணர்கிற அளவில் எழுதமுடிவதில்லை. அதற்காக கதையைப் பற்றி எதுவுமே குறிப்பிடாமல் விமர்சனம் என்ற ஒன்றை எழுதிவிட முடியுமா என்றும் தோன்றவில்லை.

    Cinemakkaran Saalai 6 - Shamitabh

    சினிமா எடுப்பது அதை வெளியிடுவது ஒரு பிரசவ வேதனைக்கு சமமானது என்று காலங்காலமாக சொல்லிவருகிறார்கள், அதுவும் பெரும்பாலும் ஆண்கள்தான். அதெல்லாம் சும்மா மிகைப்படுத்தல்தான். இங்கே காணக் கிடைக்கும் ‘ஷமிதாப்' பட வொர்க்கிங் ஸ்டில்களைப் பாருங்கள். எவ்வளவு உற்சாகமானது சினிமா எடுப்பது என்பது புலப்படும்.

    பால்கி என்கிற கலைஞன் மகா ரசனையான குடிகாரனாக இருக்க வேண்டும். சினிமாவை உண்டு, அருந்தி, சுவாசித்து வாழ்கிற ஒரு மகா இயக்குநராக படம் முழுக்க மிளிர்ந்துகொண்டே இருக்கிறார். அமிதாப்பிலும் தனுஷிலும், அக்‌ஷ்ராவிலும் நான் அவரைப்பார்த்துக் கொண்டே இருந்தேன்.

    சுடுகாட்டில் தனக்கு ஒரு ‘இடம்' ஒதுக்கிவைத்துக் கொண்டு சதா குடித்துக்கொண்டே இருக்கும் அமிதாப் ஒரு நடிப்பு ராட்சஸன். ராபர்ட்-டி.நீரோவின் படத்துக்கு முன்னால் நின்றுகொண்டு அவர் பேசுகிற காட்சியில், எங்கே நீரோ புகைப்படத்திலிருந்து, உயிரோடு இறங்கி வந்து கைதட்ட ஆரம்பித்துவிடுவாரோ எனும்படி இருந்தது அவரது நடிப்பு. இதில் அமிதாப்பின் நடிப்பை பார்த்தபிறகும் 2015க்கான சிறந்தநடிகர் தேசிய விருது கனவில் யாராவது இருந்தீர்களானால் உங்களுக்காக எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

    Cinemakkaran Saalai 6 - Shamitabh

    தனுஷ் தமிழனின் பெருமையை மும்பையில் கொடியாக 100 அடி உயரத்திற்கும் மேல் நாட்டிவிட்டார் என்றே சொல்வேன்.

    'அக்‌ஷரா என்கிற குட்டிப் பிசாசு கமல் பாதி, சரிகா மீதி என கலந்து செய்த கலவை நான்' என்று எல்லா இடங்களிலும் சொல்லிக்கொண்டே இருக்கிறார். குறிப்பாக தனுஷ், காதலும் காமமுமாய் அணுகும்போது, ‘டேய் குரங்குப் பயலே உனக்கு படுக்குறதுக்கு எவ்வளோ நடிகைகள் இருக்கும்போது ஏண்டா என் மூடைக் கிளப்பி ஒரு வருங்கால டைரக்டர் பொழப்புல மண்ணள்ளிப் போடப் பாக்குறே?' என்று ஒரு பக்கம் எச்சரிக்கையாகவும் இன்னொரு பக்கம் ஆசையையும் வெளிப்படுத்துகிறாரே அங்கே குட்டிக் கமல் இல்லை கமல் குட்டியாகவே வெளிப்படுகிறார்.

    பி.சி.யின் ஒளிப்பதிவு பற்றி நன்றாக இருந்தது, சூப்பர், அபாரம் இப்படியெல்லாம் எழுதுவது அவருக்கு செய்யும் அவமரியாதை. படத்தின் ஒரு இடத்தில் கூட அவரை தனியாகப் பார்க்க முடியவில்லை. பால்கியின் இடது வலதுகரமாக, இதயமாக, பார்வையாக இப்படி எல்லாமுமாக இருந்து கொண்டே இருக்கிறார்.

    ராஜாவின் அருமை புரியாமல் ஒரு கும்பல் அவரைப்பற்றி, 'அவரது இசை முந்திமாதிரி இல்லை' என்று நந்தி மாதிரி நின்றுகொண்டு அவதூறுகள் சொல்லித் திரிகிறார்கள். இப்படத்தின் அனைத்துப் பாடல்களிலும், குறிப்பாக பின்னணி இசையிலும் ‘எப்பவும் நான் ராஜாடா' என்று மனதில் ஆணியடிக்கிறார் இசைராஜா.

    அதுவும் கடைசி பத்து நிமிடங்களில் அமிதாப்பும் ராஜாவும் ஒரு ‘நீயா நானா' போட்டியே நடத்துகிறார்கள். இணையத்தில் கிளைமாக்ஸ் காட்சியின் அந்தப் பின்னணி இசை கிடைத்தால் கேட்டுப்பாருங்கள். அது ஹாலிவுட் தரத்தில் அல்ல... இளையராஜா என்கிற தமிழனின், எவற்றோடும் ஒப்பிட முடியாத தரத்தில் இருக்கிறது!

    படத்தில் குறைகளே இல்லையா என்று இந்நேரம் ஒரு கேள்வி தோன்றும். ஒரு சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றை நான் பட்டியலிடப் போவதில்லை.

    Cinemakkaran Saalai 6 - Shamitabh

    சற்றுமுன் முகநூல் பக்கத்தில் நண்பர் மாரி செல்வராஜ் ‘ஷமிதாப்' குறித்து ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார்.

    'ஷமிதாப்' பார்க்கும் போது அமிதாப்பை முத்தமிடத் தோன்றினால்
    அந்த முத்தம் தனுஷுக்குமானது
    இருவரையும் முத்தமிடத் தோன்றினால்
    அந்த முத்தம் பால்கிக்குமானது
    மூவரையும் முத்தமிடத் தோன்றினால்
    அந்த முத்தம் நிச்சயம் நம் ராஜாவுக்கும் ஆனது.
    ஆம் ........சமிதாப்கிஜா...........
    நால்வரையும் முத்தமிட்டு போகிற உங்களால் கண்டிப்பாக அக்‌ஷரா என்கிற குட்டிப்பெண்ணுக்கு ஒரு பூங்கொத்தை கொடுக்காமல் வந்துவிடமுடியாது.

    Cinemakkaran Saalai 6 - Shamitabh

    ஃபேஸ்புக் ஸ்டேட்டஸில் ஒரு குட்டி கவிதை போல் எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார்!

    Cinemakkaran Saalai 6 - Shamitabh

    இறுதியாக தோன்றியது இதுதான். எனக்கு மறுஜென்ம பஞ்சாயத்துகளில் எல்லாம் நம்பிக்கை இல்லை. அப்படி என்று ஒன்று இருந்தால் அந்த ஜென்மத்திலும் தங்கள் அடிமையாகவே அவதாரம் எடுக்க சாசனம் எழுதித்தாருங்கள் ராஜா!

    (தொடர்வேன்...)

    English summary
    The sixth episode of Muthuramalingan's Cinemakkaran Saalai analysed the recently released much expected Ilaiyaraaja's musical Shamitabh.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X