»   »  சினிமாக்காரன் சாலை... - 'நல்லா பாத்துக்கங்க, நானும் இப்போ ரவுடிதான்!'

சினிமாக்காரன் சாலை... - 'நல்லா பாத்துக்கங்க, நானும் இப்போ ரவுடிதான்!'

Posted By:
Subscribe to Oneindia Tamil

-முத்துராமலிங்கன்

நம்ம ‘ஒன் இண்டியா'வுல ஒரு சினிமா தொடர் எழுதுறீங்களா சார்? என்று சங்கர் சார் கேட்டதும், எடுத்தவுடன் 'ராங் நம்பரோ?' என்று சற்று ஜெர்க் அண்ட் கன்ஃபியூசனானேன் என்றுதான் சொல்லவேண்டும்!

‘தொடர்' எழுதுற அளவுக்கு நாம ஒர்த்தா? என்ற கேள்வி இயல்பாகவே மனதில் எழுந்தது.

இன்றைய தேதிகளில் எங்கெங்கு காணினும் முகநூலில், ட்விட்டரில், வாட்ஸ் அப்பில் என்று சகலரும் குண்டக்க மண்டக்க என்னத்தையோ எழுத்தித் தள்ளியபடியேதான் இருக்கிறார்கள். எழுத்து என்பது எல்லோருக்கும் இருக்கும் கழுத்து மாதிரி ஆகிவிட்டது.

Cinemakkaran Salai - A new series on Tamil Cinema

அதுவும் சினிமா குறித்து எழுதும்போது ஒரு கள்ளக்காதலியைச் சந்திக்கப்போகும் குறுகுறுப்புடனேயே அவர்களால் எழுதமுடிகிறது.

த்ரிஷாவின் திருமணம் தொடங்கி, வசுந்தராவின் பிட்டு செல்ஃபி ஷாட்கள் வழியாக பின் தொடர்ந்து, பெருமாள் முருகனின் 'மாதொரு பாகன்' சர்ச்சை வரை அவர்கள் எதையும் விட்டு வைப்பதில்லை.

Cinemakkaran Salai - A new series on Tamil Cinema

லட்சுமி மேனன் ‘நான் திருமணம் செய்துகொள்ளப்போகும் மாப்பிள்ளை 6 அடி உயரம் இருக்கவேண்டும்' என்று பேட்டி கொடுத்தால், ‘ஏ புள்ள.. எப்ப அளவு எடுக்கப்போற? மாமன் ரெடியா இருக்கேன்' என்று கியூவில் நின்று லட்சக்கணக்கானோர் வாட்ஸ் அப்புகிறார்கள்.

‘ஐ', 'ஆம்பள' படங்கள் ரிலீஸான தேதிகளில் படம் பார்த்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சமாக இருந்தால், அவற்றிற்கு விமர்சனம் எழுதினவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சமாக இருக்கிறது.

இத்தனை லட்சம் பேர் ‘படம் பாத்து' விமர்சனம் எழுதியிருக்காங்க. அப்புறம் ஏன்யா கலெக்‌ஷன் மட்டும் பல்லிளிக்குது?' என்று தலையைப் பிய்த்துக்கொண்டே சொட்டையான தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை எழுபத்து ஏழு புள்ளி ஏழு சதவிகிதம்.

கல்லூரி படிக்கும் காலத்தில் நண்பர்கள், உறவினர் வீட்டுத் திருமணங்களில் பார்ட் டைம் போட்டோகிராஃபராக அவ்வப்போது நான் போவதுண்டு. அந்த சமயங்களில் மணமகனுக்கு அடுத்த முக்கிய நபராக போட்டோகிராஃபரைப் பார்ப்பார்கள். நம்மை நோக்கிய காதல் பார்வைகள் சிலவற்றைக் கூட அங்கே தரிசிக்க முடியும். மதுரை போன்ற ஒரு நகரில் 25 போட்டோகிராஃபர்கள் இருந்தாலே அதிகம்.

Cinemakkaran Salai - A new series on Tamil Cinema

இன்று ஒரு திருமண மண்டபத்தில் அதிகாரபூர்வமான போட்டோகிராஃபர் என்பவர் எங்கே இருக்கிறார் என்பதைக்கூட கண்டுபிடிக்கமுடியாது. ஏனெனில் மண்டபத்துக்குள் செல்போன் வைத்திருப்பவர்கள் அத்தனை பேரும் போட்டோகிராஃபர்களே. மணமகன், மணமகள் துவங்கி, மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கும் ஐயர்வாள் வரை அனைவரும் செல்ஃபி எடுத்துக்கொண்டே ‘மாங்கல்யம் தந்துனானே'வை நடத்திக் கொண்டிருப்பார்கள்.

இன்றைக்கு எழுத்தாளர்கள் என்பவர்கள் நிலையும் ஏறத்தாழ இதுதான். பெயருக்கு முன்னால் ‘எழுத்தாளர்' என்று போட்டுக்கொண்டு, முகநூலில் நீங்கள் எதை எழுதினாலும் எழுத்தாளர்தான்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர் சாரு நிவேதிதா, எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர் சவடமுத்து, எழுத்தாளர் கொடுங்கையூர் ராமசாமி, எழுத்தாளர் அரகண்டநல்லூர் ராஜா என்று துவங்கி எனது முகநூல் பக்கத்தில் 4999 எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.

‘அதான் மார்க்கு 5000 பேர்வரை அனுமதித்திருக்கிறாரே, ஒரு ஆள் குறையுதே? என்று நீங்கள் கேட்கத் துடிக்கிறீர்கள் என்பது எனக்குப் புரிகிறது.

‘அந்த ஒரு ஆள் நான் தான். இத்தனை காலமும் எழுத்தாளர் பட்டியலில் என்னை இணைத்துக் கொள்ளும் அந்த சபலம் ஏனோ எப்போதும் வந்ததில்லை.

ஆனால்... இன்று இப்படி இணையத்தில் எழுதுகிற எல்லோருமே 'எழுத்தாளர்கள்' என்று ஆகிவிட்ட பிறகு நான் மட்டும் ஒண்டி ஆளாய் மிச்சம் இருப்பானேன்?

இதோ இந்த தருணம் முதல் நானும் எழுத்தாளர்தான் என்று இந்த உலகுக்கு உரக்க அறிவிக்கிறேன். (தருணம், உரக்க? யோவ் நீ ரைட்டர் ஆயிட்ட. த்ரிஷா உனக்குத்தான்யா!)

'என்ன எழுதலாம்? என்ன வேணா எழுதலாம். திலகாஷ்ட மகிஷபந்தனம்.

இந்த இடத்தில் சிச்சுவேஷன் பாடலாக ராஜாவின் ‘என்னப் பாடச் சொல்லாத நான் கண்டபடி பாடிப்புடுவேன்' பாடல்தான் எனக்கு ஒலிக்கிறது. சும்மாவே நமக்கு வெங்கலக் குரல்?

நாளைமுதல், தமிழ்சினிமா தொடங்கி கொரிய சினிமா வரை அமேசான் காட்டு பல அரிய மூலிகை தகவல்களுடன், வாரம் ரெண்டுவாட்டி 'கண்டபடி பாடிப் புடுவேன்' என்று எச்சரித்து விடை பெறுபவர்... ‘எழுத்தாளர்' முத்துராமலிங்கன்!

குறிப்பு: கட்டுரையாளர் முத்துராமலிங்கன் தமிழ் சினிமா அறிந்த பத்திரிகையாளர், எழுத்தாளர். சொந்த ஊர் விருது நகர். முன்னணிப் பத்திரிகைகளில் செய்தியாளராக, ஆசிரியராக பணியாற்றியவர். சினேகாவின் காதலர்கள் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்போது தனது அடுத்த படமான ரூபச்சித்திர மாமரக்கிளியேவை இயக்கிக் கொண்டிருக்கிறார். 'மூவி ஃபண்டிங் எனும் மூடுமந்திரம்' என்ற குறுந்தொடர் மூலம் ஒன்இந்தியா வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர் இவர். விமர்சனத்தைக் கூட மிகுந்த நகைச்சுவையாக, சம்பந்தப்பட்டவரே ரசித்துப் படிக்கும் அளவுக்கு எழுதுவது இவர் சிறப்பு.

தொடர்புக்கு: muthuramalingam30@gmail.com

English summary
Cinemakkaran Salai is the new series on Tamil Cinema writing by G Muthuramalingan, a know columnist.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X