twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமாக்காரன் சாலை 10: 'ஜாதிகள் உள்ளதடி... அட போப்பா!'

    |

    -முத்துராமலிங்கன்

    1.யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
    எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
    யானும் நீயும் எவ்வழி அறிதும்?
    செம்புலப் பெயல் நீர் போல
    அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

    2. என் தந்தையும் உன் தந்தையும்
    ஒரே ஊர்,
    வாசுதேவ நல்லூர்.
    என் தந்தையும் உன் தந்தையும்
    ஒரே ஜாதி,
    திருநெல்வேலி சைவப் பிள்ளைமார்.
    நானும் நீயும் உறவின்முறை,
    எனது ஒன்றுவிட்ட
    அத்தை பெண் நீ.
    எனவே
    அன்புடை நெஞ்சம்
    தாம் கலந்தனவே!

    இன்று இயக்குநர் கவுதம் வாசுதேவ ‘மேனனு'க்கு பிறந்தநாள் என்று முகநூலில் அவருக்கு குவிந்த வாழ்த்துக்கள் மூலம் தெரிந்துகொண்டேன். ஆயிரம் ரூபாய்க்கு பூச்செண்டு வாங்கி எனது வாழ்த்துக்களையும் கூரியர் மூலம் அனுப்பி இருக்கிறேன் கவுதம். பெற்றுக் கொள்ளுங்கள்.

    goutham menon

    கமல், சிம்பு, சூர்யா, மாதவன், அஜீத் என்று பல முன்னணி நடிகர்களை வைத்து ஓரளவுக்கு சிறப்பான படங்களை இயக்கியவர் என்ற முறையில் இன்றைய பெரும்பாலான இளைஞர்களின் ஆதர்சம் இந்த கவுதம் மேனன்.

    ‘மின்னலே' படத்தில் வெறும் கவுதமாக இருந்தவர் சில படங்களுக்குப் பின்னர் கவுதம் மேனன் ஆகி அப்புறம் கவுதம் வாசுதேவ் மேனன் என்று ஆக்கிக்கொண்டார்.

    கவிதை 1 குறுந்தொகை இலக்கியத்தில் மட்டுமே சாத்தியம். கவிதை 2 மீரா எழுதியது. காலங்காலமாக நம் சமூகம் ஜாதி விஷயத்தில் மீராவின் கவிதையாகவே இருந்து விடப்போகிறது என்பதில் எவ்வித ஐயமும் எனக்கு இல்லை.

    ஏனெனில் கடந்த வாரம் விஜய் டி.வி. ‘நீயா நானா' நிகழ்ச்சியில் கூட வேறு சாதிக்காரனுக்கு, அதுவும் கீழ்சாதிக்காரனுக்கு பொண்ணு தரவே மாட்டோம் என்று வெட்கமில்லாமல் முழங்க ஒரு கூட்டத்தால் முடிகிறது.
    அவர்களில் பெரும்பாலும் படிப்பறிவில்லாத பாமரர்கள் என்று சொல்லி ஒதுக்கி விடலாம். அதே நிகழ்ச்சியில் இன்னும் காட்டுமிராண்டிகள் காலத்திலேயே இருக்கிறோம்' என்று சுப.வீ. பொறுமினாரே, அப்படிப் பொறுமிக்கொண்டே இருந்துவிட வேண்டியதுதான்.

    ஆனால் கலைத்தாயின் பிள்ளைகள், சமூகத்துக்கு, அதன் விடிவுக்கு வழிகாட்ட வந்தவர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர்கள் மத்தியில் வரவர சாதி உணர்வு வெறிகொண்டு வளர்ந்து வருவதாகவே தோன்றுகிறது.

    சமூகத்தின் அத்தனை விரோதிகளையும் தனது ஹீரோவின் துப்பாக்கி கொண்டு சுட்டுப் பொசுக்கும் கவுதம் வாசுதேவனால் தனது பெயரில் வால் போல் நீட்டிக்கொண்டிருக்கும் மேனனை நறுக்க முடியவில்லை. கோட்டுக்கு டை அணிவதுபோல் அவர் தனது ஜாதியை அணிந்துகொண்டு திரிகிறார்.

    இந்த கவுதம் மேனன் ஒரு உதாரணம்தான். இன்று சினிமாவில் பாதிக்கும் மேற்பட்டோர் பெயரில் போட்டுக்கொண்டோ, அல்லது வாலைச் சுருட்டி வைத்துக்கொண்டு தேவைப்படும் நேரங்களில் எல்லாம் வெளியே எடுத்து ஆட்டிவிட்டுக் கொண்டேதான் திரிகிறார்கள்.

    janani-iyer

    மும்மொழி கண்ட முன்னணி இயக்குநர் அவர். தொடர்ந்து கவனித்து வந்தால் ஒன்று புரியும். எப்போதெல்லாம் பிரச்சினைகள் பெரிதாகின்றதோ அப்போதெல்லாம் ‘எனக்குப் பின்னால் என் சாதிக்காரர்கள் இருக்கிறார்கள்'. என்று மிரட்டுவார். இப்படி சாதி பார்ப்பவர் என் சாதிக்காரர்கள் மட்டும் என் படம் பார்த்தால் போதும் என்று சொல்ல முன்வருவாரா?

    தமிழின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் மூன்று பேர் ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்கள். அவர்களது உதவியாளர்களில் 90 சதவிகிதம் பேர் 'தற்செயலாக' அவர்களது ஜாதியைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இந்த ‘தற்செயலாக சொந்த ஜாதிக்காரர்கள்' அமைகிற ஜாதி பாலிடிக்ஸை, நான் மிகவும் நேசிக்கிற இயக்குநர்கள் அலுவலகத்தில் கூட பல வருடங்களாய் பார்த்துக்கொண்டிருக்கிறேன். தோளில் கைபோட்டு நட்புக்காட்டி அங்கு பூணூல் இருக்கிறதா இல்லையா என்று தெரிந்துகொள்கிற ஆதிகால டெக்னிக் போல இது சினிமாவெங்கும் பெரும்பாலான இடங்களில் நிரம்பி வழிகிறது.

    உத்தமர், மத்திமர் ஆகிய மற்ற இரு காமெடியன்கள் யாரென்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். மூன்றாமவர் கருணாஸ் லொடுக்குப் பாண்டியாக அறிமுகமாகி கொண்டாடப்பட்டபோது அவரது ஜாதி, ஜனங்களுக்குத் தெரியாது. அவரைத் திரையில் பார்த்தாலே சிரித்தார்கள். அறிமுகமான சம்பந்தப்பட்ட ஆண்டிலேயே கமல், ரஜினி படங்கள் உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கொடி கட்டிப்பறந்தார். சம்பாத்தியம் கோடிகளை எட்டியது. எப்போதும் இறக்குமதி செய்யப்பட்ட கார்களில் மட்டுமே பயணம் செய்தார்.

    ஆனால் இன்று 'வருங்கால முதல்வர்' கனவில் ஒரு ஜாதி சங்கத்தை துவக்கிக் கொண்டு தெருத் தெருவாய் போஸ்டர்கள் ஒட்டித் தள்ளுகிறார். இதனாலேயே சொந்த ஜாதிக்காரர்கள் உட்பட அனைவருமே இவரது நகைச்சுவைக்கு சிரிக்கத் தெரியாமல் முழிக்கிறார்கள். மார்க்கெட் முற்றிலும் சரிந்து, ‘எனக்கு படம் தயாரித்த வகையில் 9 கோடி ரூபாய் கடன் இருக்கிறது' என்று கண்ணீர் வடிக்கிறார்.

    இந்தக் கொடூர காமெடிகளுக்கு மத்தியில் சமீப காலமாக ஜாதி நச்சு அதிகமாக வெளிப்பட ஆரம்பித்திருப்பது நடிகைகள் மத்தியில். நவ்யா நாயர்கள், லட்சுமி மேனன்கள், ஜனனி அய்யர்கள், லேகா ஷெட்டிகள், மீரா ரெட்டிகள் என்று ஜாதிப்பெயர் இல்லாமல் எந்த நடிகையும் இண்டஸ்ட்ரிக்குள் கால் எடுத்து வைப்பதில்லை.

    Lakshmi menon

    குப்புற, மல்லாக்க, பக்கவாட்டில் என்று எப்படிப் படுத்து யோசித்தாலும் பெயருக்குப் பின்னால் இருக்கும் இந்த ஜாதி வால்கள் எந்த இயக்குநரையோ, நடிகரையோ, நடிகையையோ வாழ வைத்ததாக எனக்கு நினைவுகள் இல்லை. ஆனாலும் எதற்காகவோ அந்த முட்டாள்தனத்தைக் கட்டிக்கொண்டு அழுகிறார்கள்.

    நடிகர் சங்கம், சின்னத்திரை நடிகர் சங்கம் போல் எதிர்காலத்தில் அய்யர் நடிகைகள் சங்கம், ஷெட்டி நடிகைகள் சங்கம், மேனன் நடிகைகள் யூனியன் என்று துவங்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றே தோணுகிறது!

    English summary
    The 10th episode of Cinemakkaran Saalai discusses about the caste feeling and discrimination among film stars.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X