அடப்பாவமே... மொத்தப் படத்தையும் கொத்தி குதறிட்டாங்களாம்... கதை மாறிட்டதால ரீ ஷூட் பண்ணினாங்களாமே?
சென்னை: மொத்தப் படத்தையும் கத்திரி அதிகாரிகள், கொத்தி குதறியதால் படத்தின் கதையே மாறிப்போன கதையை கதையாக சொல்கிறார்கள்.
அந்த இளம் இயக்குனர், பார்வையற்றவர்களின் காதலை முதல் படத்தில் சொன்னார். படமும் பாடல்களும் பேசப்பட முக்கியமான இயக்குனர் ஆனார்.
இந்த படத்துக்கு சில விருதுகளும் கிடைத்தன. அடுத்து அரசியலை நையாண்டி செய்து படம் எடுத்தார். இதற்கும் ஏகப்பட்ட வரவேற்பு. இதில்தான் அந்த பாண்டிய நடிகை அறிமுகமானார்.

போஸ்டரும் பாடல்களும்
இதையடுத்து, அவரது அண்ணன் படத்துக்கு வசனம் எழுதியிருந்தார், அந்த இயக்குனர். அழகான அந்தக் காதல் படமும் கவனிக்கப்பட்டது. அடுத்து அவர் இயக்கியதுதான் நாடோடியின் பெயர் கொண்ட பயணப் படம். அந்தப் படத்தின் போஸ்டர்களும் பாடல்களும் பரவலா கவனிக்கப்பட படத்துக்கு எதிர்பார்ப்பு கிளம்பியது.

முதலமைச்சர்
வழக்கம் போல இந்தப் படத்திலும் சில அரசியல் நிகழ்வுகளை நையாண்டி செய்திருந்தாராம் இயக்குனர். மத்திய அரசின் சில கொள்கைகளையும் கடுமையாகச் சாடியிருந்ததாம் படம். குறிப்பாக, அந்த வட இந்திய மாநில முதலமைச்சர் லுக்கில் ஒருவரை அப்படியே நடிக்க வைத்திருந்தார்களாம்.

கதைக்கு முக்கியம்
அதோடு, ரொம்ப ரொம்ப மோசம் பாடலில் அரசியல் சாடல் அதிகமாக இருந்ததாம். இதை எல்லாம் கவனித்துக்கொண்டு இருந்த, படத்துக்கு சர்டிபிகேட் கொடுக்கும் டீம், நிறைய இடங்களை வெட்டச் சொன்னார்களாம். இதை இயக்குனர் எதிர்பார்க்கவில்லை. இவர்கள் என்னதான் கதைக்கு அது முக்கியம் என்று சொன்னாலும் அவங்க ஏற்றுக்கொள்ள வில்லையாம்.

கதை மாறி இருந்தது
அதை வெட்டினால்தான் படம் ரிலீஸ் ஆகும் என்பதால், முக்கியமான காட்சிகளை வெட்டினார்களாம். கொத்தி குதறிய பின் அந்தப் படத்தைப் பார்த்தால் கதை மாறி இருந்தது என்கிறார்கள். உடனே தயாரிப்பாளரிடம் சொல்லி, ரீ ஷூட் செய்திருக்கிறார்கள். இப்போது அழகான காதல் கதையாக மாறி இருக்கிறதாம் படம். ரொம்ப நாளா ரிலீஸ் ஆகாமல் இருந்த இந்தப் படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறது.


Click it and Unblock the Notifications











