உஷாரான விநியோகஸ்தர்கள்.. செக் வைத்த தயாரிப்பாளர்கள்.. ரிலீஸ்க்கு முன்னர் நடக்கும் சதுரங்க வேட்டை
சென்னை: எந்த மொழி திரையுலலமாக இருந்தாலும் தயாரிப்பாளர்கள் பலத்துடனும் நம்பிக்கையுடனும் இருக்கும் போது தான் அந்த திரை உலகம் முன்னேற்றப் பாதையில் செல்லும். எந்த திரை உலகில் நடிகர்கள், நடிகைகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதோ, அந்த திரை உலகம் சரிவைச் சந்திக்கிறதோ இல்லையோ, வளர்ச்சியை நோக்கி நகராது என்ற பேச்சு திரையுலகில் தொடர்ந்து இருந்து கொண்டு உள்ளது. இப்படி இருக்கையில் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர்கள் பலரும் ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும் என பலரும் பல மேடைகளில், சினிமா நிகழ்ச்சிகளில் பேசும் போது குறிப்பிடுகிறார்கள்.
இப்படி இருக்கையில், தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் ஒரு படத்தை தயாரித்து ரிலீஸ் செய்வதற்குள் செத்துப் பிழைக்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும். அதிக அளவில் பணத்தை செலவு செய்து படங்களைத் தயாரித்து அடுத்தடுத்த தோல்விகளால் காணாமல் போன தயாரிப்பாளர்கள், கடன் தொல்லையால் சிறைவாசம் சென்ற தயாரிப்பாளர்கள் என பலரையும் தமிழ் சினிமா எதிர்கொண்டுள்ளது.
ஒரு படம் சரியாக பிசினஸ் ஆகவில்லை என்றால் படத்தின் கதாநாயகன் தனது அடுத்த படத்திற்கு சுமார் 5 முதல் 10 கோடிகள் வரை சம்பளத்தைக் குறைத்துக் கொள்வார். கிட்டத்தட்ட இயக்குநரும் சம்பளக் குறைப்பில் இறங்கி அடுத்த படத்தை கமிட் செய்துவிடுவார்கள். ஆனால் தயாரிப்பாளருக்கு அப்படி இல்லை. அவர் அவரது சக்தி தகுந்த அளவில் 10 கோடியோ, 20 கோடியோ, 100 கோடியோ அவர் மொத்தமாக செலவு செய்தது, செய்தது தான்.

தயாரிப்பாளர்கள் வைத்த செக்: அதில் வட்டிக் கணக்கு எல்லாம் போட்டால் தலை சுற்றலே வந்துவிடும். அப்படி இருக்கும்போது, தமிழ் சினிமாவில் சில மாதங்களுக்கு முன்னர் வரை ஒரு படத்தை பத்திரிகையாளர்களுக்கு படத்தைப் போட்டுக் காட்டி, அவர்களின் ரியாக்ஷனை வைத்து விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கலாமா என்ற முடிவை எடுத்து வந்தனர். இதனால் தயாரிப்பாளர்கள் எதிர்பார்த்த அளவுக்கு விநியோகஸ்தர்கள் விருப்பம் காட்டாததால், படத்தை முன் கூட்டியே திரையிடுவதை நிறுத்தி, படம் வெளியாகும் நாளில் திரையிடுகிறார்கள்.
அடுத்த தலைவலி: இப்படி இருக்கையில் விநியோகஸ்தர்களின் இந்த முயற்சிக்கு தயாரிப்பாளர்கள் செக் வைத்த நிலையில், தற்போது இந்தியாவில் படம் சென்சார் ஆவதற்கு முன்னரே வெளிநாடுகளில் படம் சென்சார் செய்யப்பட்டுவிடுவதால், விநியோகஸ்தர்கள் அங்கு படம் பார்த்த நபர்களை எப்படியாவது தொடர்பு கொண்டு படம் தேறுமா? தேறாதா என்று கேட்டுத் தெரிந்து விட்டுத்தான், படத்தை வாங்கலாமா வேண்டாமா என்ற முடிவுக்கு வருகிறார்களாம். இதனால் தயாரிப்பாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications