பிரைவேட் வீடியோ விவகாரம்.. டிவி சேனலின் பெரிய தலைகள் கப்சிப்.. இதற்கு எல்லாம் பேசமாட்டாங்களா?
சென்னை: ஆண்கள் பணியாற்றும் அனைத்து துறைகளிலும் பெண்களும் சரிசமமான திறமையுடன் பணியாற்றி வருகிறார்கள். பெண்கள் தங்களது பணியிடங்களில், மிகவும் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் பாணியாற்றுகிறார்களா என்றால் அது கேள்விக்குறியாகத்தான் உள்ளது எனலாம். வேலை தொடர்பான சவால்கள் ஒருபுறம் இருந்தால், வேலை செய்யும் இடங்களில் உடன் பணியாற்றும் ஆண்கள், மேல் அதிகாரிகளாக உள்ள ஆண்களால் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் நெருக்கடிகள், பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்றுக் கொண்டே வருகின்றன.
இப்படியான பாலியல் வன்கொடுமைகளை திரைத்துறையிலும் சின்னத்திரையிலும் அட்ஜெஸ்மெண்ட் என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. மேலும் இதனை திரைத்துறைச் சேர்ந்தவர்கள் மிகவும் சாதாரணமாக மாற்றி வைத்து விட்டார்கள் என்றுதான் கூறவேண்டும். இந்த அட்ஜெஸ்மெண்ட் பிரச்னைகளை பெரும்பாலும் சந்திப்பது திரைத்துறை மற்றும் சின்னத்திரையில் அறிமுகம் ஆகும், வளர முயற்சி செய்து கொண்டு இருக்கின்ற நடிகைகள்தான். இதனை உறுதிப்படுத்தும் சம்பவம்தான் அண்மையில் சர்ச்சையான ஒரு வீடியோ.
தமிழ்நாட்டில் உள்ள சேனல்களில் ரியாலிட்டி ஷோக்களில் அதிக டி.ஆர். பியை அடையும் சேனலில் அந்த சேனலும் மிக முக்கியமான ஒன்று. அந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடிக்கும் ஒரு நடிகையின் பிரைவேட் வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. இணையவாசிகள் பொறுப்பில்லாமல் அந்த வீடியோவை வைரலாக்கினர். பெரும்பாலான இணையவாசிகள் இந்த தவறைச் செய்தனர். வெகு சிலர் மட்டுமே இது ஒரு பெண்ணின் தனிப்பட்ட வீடியோ, அதனை பகிர்வது தவறு என தவிர்த்து விட்டுச் சென்றார்கள்.

பாலியல் வன்கொடுமை: பொதுவெளியில் பலர் இப்படி இருந்தாலும், எப்போதும் சமூகத்தில் நடக்கும் பல விஷயங்கள் குறித்தும், அண்மையில் பரபரப்பைக் கூட்டிய விஷயங்கள் குறித்து விவாதங்கள் நடத்தும் தொலைக்காட்சி சேனல்கள் இந்த முறை கப்சிப் மோடில் உள்ளன. ஒருவேளை எதிர்காலத்தில் இது தொடர்பாக விவாதிக்க திட்டமிட்டிருக்கலாம். ஆனால் இதற்கு முன்னரே பெண்கள் பணி செய்யும் இடங்களில் சந்திக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து விவாதங்களை நடத்தினால், பெண்களுக்கு எதிரான நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து பலருக்கும் தெரியவரும். குறிப்பாக அரசுக்குக்குத் தெரியவரும். இது போன்ற பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க மேலும் நடைபெறாமல் இருக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்க கூடும்.
ஹேமா கமிட்டி: கேரளா திரைத்துறையில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைத்து விசாரித்தார்கள். இந்த விசாரணை கமிஷன் அரசிடம் சமர்பித்த விசாரணை அறிக்கை, வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காரணம், பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் இந்த விவகாரத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது நிரூபணம் ஆனது.
கப்சிப்: இதனால் ஒட்டுமொத்த கேரள திரைப்பட நடிகர்கள் சங்கம் கூண்டோடு கலைக்கப்பட்டது. அதேபோல, தமிழ் திரைத்துறையிலும், விசாரணை கமிஷனை அரசோ, அல்லது நேரடியாக நீதிமன்றமோ அமைத்தால் எதிர்காலங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது உறுதி செய்யப்பட, அந்த விவாத நிகழ்ச்சிகள் முக்கிய காரணமாக இருக்கலாம் இல்லையா? என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பல பெரிய தலைகளே கப்சிப் மோடில் இருப்பது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











