நடிகரின் கரியரை காலி செய்ய திட்டம்.. கெஞ்சிய ஆடியோவை வெளியிடப்போறாராம்.. புதுசா கிளம்புதே பாஸ்
சென்னை: கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார் அவர். கடைசியாக நடித்த படமும் நூறு கோடி ரூபாய் வசூலை அள்ளியது. அடுத்தடுத்து வரவிருக்கும் படங்களும் 100 கோடி ரூபாய் க்ளப்பில் இணையும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். சூழல் இப்படி இருக்க அவரது கரியரை காலி செய்வதற்கான திட்டத்தை பிரபலம் ஒருவர் கையிலெடுத்திருப்பதாக விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
நடுத்தர குடும்பத்தில் பிறந்து ஏகப்பட்ட கஷ்டங்களை கடந்து சினிமாவுக்குள் வந்தவர் அந்த நடிகர். அவர் அறிமுகமான புதிதில் இவரெல்லாம் பத்து படங்கள் தாங்குவதே பெரிய விஷயம் என்றுதான் பலரும் சொன்னார்கள். நடிகர் அதையெல்லாம் காதில் போட்டுக்கொண்டார்தான். ஆனால் வாயால் பதில் சொல்வதைவிடவும்; செயலால் பதில் சொல்வதுதான் சிறந்தது என்று முடிவெடுத்து கடுமையாக உழைத்தார். இதன் பலனாக அடுத்தடுத்து வெற்றிகள் கிடைத்தன.
டாப் 10 இடத்தில்: அந்த வெற்றியை பார்த்த பிறகு மேற்கொண்டு பலர் வயிறு எரிந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். தொடர்ச்சியாக சூப்பர் ஹிட் கொடுத்த நடிகர் திடீரென மெகா ப்ளாக் பஸ்டராக கொடுக்க ஆரம்பித்துவிட்டார். எனவே அவரது படங்கள் வரிசையாக 100 கோடி ரூபாயை வசூலிக்க ஆரம்பித்து அவரை டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்டில் கொண்டு வந்து நிறுத்தியது. அதுமட்டுமின்றி மாஸ் நடிகரின் இடத்தை இவர்தான் நிரப்புவார் என்று பேச்சுக்களையும் கிளப்பின.

எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை: இந்த நடிகருக்கு மது, சிகரெட் என எந்த கெட்ட பழக்கமும் இல்லை. பார்ட்டிகளுக்கு சென்றாலும் கூல் ட்ரிங்ஸ் குடித்துவிட்டு நண்பர்களுடன் அரட்டை அடித்துவிட்டு வருவதுதான் அவரது வாடிக்கை. அவரை மது அருந்த வைத்துவிடலாம் என எவ்வளவோ பேர் எப்படி எப்படியோ முயன்று பார்த்துவிட்டார்களாம். ஆனால் நடிகரோ தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றுகொண்டிருக்கிறார்.
வைக்கப்பட்ட குற்றச்சாட்டு: இப்படி மிஸ்டர் க்ளீனாக வலம் வந்துகொண்டிருந்த அவர் மீது சில வருடங்களுக்கு முன்பு பிரபலம் ஒருவர் குற்றச்சாட்டு வைத்தார். அந்த குற்றச்சாட்டு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. மது, சிகரெட் பழக்கம் கூட இல்லாத நடிகரா இப்படி என அனைவரும் வாயை பிளந்தார்கள். ஆனால் இதெல்லாம் அவரது வளர்ச்சியை காலி செய்வதற்காக திட்டமிட்டு செய்யப்படும் சதி என அவரது ரசிகர்கள் விட்டுக்கொடுக்காமல் பேசினார்கள்.
ரெடியான பிரபலம்: எப்படியோ அந்த விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக ஓய்ந்தது. ஆனால் தனது வாழ்க்கையை இப்படி நடிகர் நாசமாக்கிவிட்டாரே என்ற கோபம் இன்னமும் அந்த பிரபலத்துக்கு போகவில்லையாம். எனவே அந்த பிரச்னை நடந்த சமயத்தில் நடிகர் தனக்கு ஃபோன் செய்து, 'அண்ணே உங்கள் காலில் வேண்டுமானாலும் விழுகிறேன். இதை மட்டும் வெளியிட்டுவிடாதீர்கள். அப்படி செய்தீர்கள் என்றால் எனது கரியரே போய்விடும்' என கெஞ்சினாராம். தற்போது அந்த ஆடியோவை வெளியிட பிளான் செய்துவிட்டதாகவும்; விரைவில் கோடம்பாகத்தில் புயல் அடிக்கப்போகிறது என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











