கமலுடன் கை கோர்க்கும் லால்!

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை உலுக்கிப் போட்ட சம்பவம்தான் காந்தஹார் விமானக் கடத்தல். இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்திய தலிபான் தீவிரவாதிகள் அதை அப்போது தலிபான்களின் ஆதிக்கத்தில் இருந்த ஆப்கானிஸ்தானின் காந்தஹார் விமான நிலையத்தில் கொண்டு போய் வைத்துக் கொண்டு மிரட்டியதையும், அவர்களின் மிரட்டலுக்குப் பணிந்து இந்திய அரசு மூன்று முக்கிய தீவிரவாதிகளை விடுவித்ததையும் யாரும் மறந்திருக்க முடியாது.
அந்த பரபரப்பு நிகழ்வுகளைத்தான் மேஜர் ரவி காந்தஹார் என்ற பெயரில் படமாக்கவுள்ளார்.
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான மேஜர் ரவி இப்போது திரைப்பட இயக்குநராகி விட்டார். மலையாளத்தில் படங்கள் இயக்கிக் கொண்டிருக்கும் மேஜர் ரவியின் கைவண்ணத்தில் உருவான படம்தான் அரண். மோகன்லாலும், ஜீவாவும் இணைந்து நடித்த படம்.
இந்த நிலையில், இந்தியாவின் இரு பெரும் திரை ஜாம்பவான்களை இணைத்து காந்தஹார் படத்தை மேஜர் ரவி இயக்கவுள்ளது திரைப் பிரியர்களுக்கும், திரையுலகினருக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மேஜர் ரவி கூறுகையில், காந்தஹார் விமானக் கடத்தல் மிகப் பெரும் சர்வதேச சதிச் செயலாகும். இதன் பின்னணியில் பல உண்மைகள் புதைந்துள்ளன. அவை வெளியுலகுக்குத் தெரியாமல் புதைந்து போயுள்ளன.
தமிழ் மற்றும் மலையாளத்தில் நான் இயக்கவுள்ள இப்படத்தின் மூலம் அவை வெளிச்சத்திற்கு வரும். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், இரு பெரும் நடிகர்களான கமல்ஹாசனும், மோகன்லாலும் இப்படத்தில் தோன்றுவார்கள். அது இந்தியத் திரையுலக வரலாற்றில் மிகப் பெரும் சாதனையாகவும் இருக்கும். இருவரின் ரசிகர்களுக்கும் பெரும் விருந்தாகவும் அமையும் என்றார் ரவி.
சமீபத்தில் நடந்த ஹ்ருதயராகம்-2008 செய்தியாளர்கள் சந்திப்பின்போது மோகன்லாலுடன் இணைந்து நடிக்க கமல்ஹாசன் விருப்பம் தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
காந்தஹாருக்கு முன்பாக கார்கில் போரை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார் ரவி. கார்கில் போரின் பின்னணியில் மறைந்து கிடக்கும் பல உண்மைகளை இப்படத்தில் புட்டுப் புட்டு வைக்கப் போவதாகவும் அவர் குண்டைப் போட்டுள்ளார்.
இந்தப் படத்திலும் மோகன்லால்தான் நாயகன். இப்படத்தை இந்தியா தவிர பாகிஸ்தான், துபாய் ஆகிய நாடுகளிலும் படமாக்கவுள்ளார். ரூ. 8 கோடி பட்ஜெட்டில் இப்படம் தயாராகிறதாம்.
படத்தில் பாகிஸ்தான் அதிபர் முஷாரப், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் போன்றோரின் கேரக்டர்களும் வருவதால் இது இந்தியப் படமாக மட்டுமல்லாமல் சர்வதேசப் படமாகவும் உருவெடுக்கிறது.


Click it and Unblock the Notifications











