த்ரிஷாவுடன் சேரும் சிம்பு - கெளதம் டைரக்ஷன்!

சிம்பு ஹீரோ என்றதும் எதுக்கு வம்பு என்று பெரும்பாலும் விலகிக் கொள்வார்கள் பிரபல இயக்குநர்கள். காரணம் சிம்புவின் சகிக்க முடியாத தலையீடு (இதற்கு அவரே இயக்குநராக இருந்துவிடலாம்..!).
இதுவரை அவர் நடித்த படங்களில் அடங்கி நடித்தது இரண்டுதானாம். ஒன்று ஹரி இயக்கிய கோயில், அடுத்தது கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய சரவணா.
மற்ற படங்களில் பெரும்பாலும் இயக்குநர் என்று ஒருவர் இருப்பார். அவரது வேலைகளை சிம்புவே பார்த்துக் கொள்வார் என்கிறார்கள்.
மன்மதன் படத்தின் இயக்குநர் என்று முருகன் என்பவரை அறிமுகப்படுத்தினார்கள். அவரோ இந்தப் படத்தில் எனக்கு என்ன வேலை என்றே தெரியவில்லை எனப் புலம்பினார். மன்மதன் ஹிட் ஆனாலும், அதை இயக்கிய முருகன் ஹிட் ஆகவில்லை. இப்போது மீண்டும் உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறார் என்கிறார்கள். இது ஒரு சாம்பிள்தான்!
இப்போது திரைக்கு வந்த சிலம்பாட்டமும் சிலுப்பாத காரணத்தால், யாராவது ஒரு பெரிய இயக்குநரின் படத்தில் நடிக்க காத்திருந்தார் சிம்பு. இப்போது கவுதம் மேனன் கிடைத்துள்ளார் அவருக்கு.
சிம்பு அடுத்ததாக போடா போடி என்ற படத்தில் நடிக்கவிருந்தார். கனடாவில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடப்பதாக இருந்தது. ஆனால் அங்கு கடும் குளிரும் உறைபனியுமாக கடுமையான க்ளைமேட் என்பதால் படப்பிடிப்பைத் தள்ளிப் போட்டுள்ளார்களாம்.
எனவே இந்த இடைப்பட்ட காலத்தில் கவுதம் படத்தில் நடிக்கப் போகிறாராம். இந்தத் தகவலை கவுதம் மேனனும் உறுதிப்படுத்தியுள்ளார்.
முழுக்க முழுக்க இளமைத் துள்ளல் நிறைந்த காதல் படமாம் இது. சிம்புவின் ஆரம்பநாள் தோழி த்ரிஷா நாயகியாக நடிக்கக் கூடும் என்கிறார்கள்.
ஏற்கனவே திரிஷா சிம்புவுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் பெரிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சிம்புவுடன் இணைகிறார் திரிஷா என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











